Header Ads



எரிபொருள் நிரப்பு நிலைய வெடிப்பு, பல கோணங்களில் விசாரணைகள் ஆரம்பம்


குருநாகலை, வெஹர பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் நேற்று (07) இரவு ஏற்பட்ட வெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


இதன்போது, அங்கு எரிவாயு சேமிப்பு மற்றும் விநியோகம் சட்டப்படி முறையாக மேற்கொள்ளப்பட்டதா என்பது குறித்து சில தரப்பினர் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.


நேற்று (07) இரவு, குருநாகலை - கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ள வெஹர பகுதியில் உள்ள IOC எரிபொருள் நிரப்பு நிலையத்தில், ஒரு தனியார் தொழிற்சாலைக்கு சொந்தமான லொறி ஒன்று எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு வந்திருந்தது.


இரவு 11:30 மணியளவில், லொறியில் உள்ள சிலிண்டர்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலையத்தின் தாங்கியில் இருந்து எரிவாயு நிரப்பப்பட்டு கொண்டிருந்தபோது, திடீரென வெடிப்பு ஒன்று ஏற்பட்டு, அதனைத் தொடர்ந்து பெரும் தீப்பற்றி எரியத் தொடங்கியது.


இதனால், நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும், இந்த திடீர் தீ விபத்தில் மற்றொரு நான்கு பேர் படுகாயமடைந்து, குருநாகலை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


பாதிக்கப்பட்டவர்களில், எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்த முச்சக்கர வண்டி ஓட்டுநரும் ஒருவர் என தெரியவந்துள்ளது.


விபத்தினை தொடர்ந்து தீயை அணைப்பதற்காக, குருநாகலை, மாநகர சபையின் தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில், பொலிஸ் அதிகாரிகளும் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவியாக இணைந்து கொண்டனர்.


இருப்பினும், அதிகாலை 3 மணியளவிலேயே தீயை முழுமையாக கட்டுப்படுத்த முடிந்தது.


இந்த விபத்தில், லொறியின் சாரதி, அவரது உதவியாளர், எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் ஒருவர் மற்றும் நிரப்பு நிலையத்தின் முகாமையாளர் ஆகியோர் உயிரிழந்தனர்.


அவர்களின் உடல்கள் மிகவும் தீயில் எரிந்த நிலையில் காணப்பட்டன. சில உடல் பாகங்கள் சம்பவ இடத்தை சுற்றிய பகுதிகளில் சிதறிய நிலையில் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.


எரிபொருள் நிரப்பு நிலையத்தில், வீட்டு உபயோகத்திற்கான எரிவாயு சிலிண்டர்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்ததோடு, வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் எரிவாயு பெரிய அளவிலான தாங்கியில் சேமிக்கப்பட்டிருந்தது.


வெடிப்பின்போது, ஒரு எரிவாயு சிலிண்டர் அருகில் உள்ள வீடு ஒன்றின் மீது விழுந்து, அந்த வீட்டிற்கு சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும், எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் விநியோகிக்கும் பம்புகளும் சேதமடைந்துள்ளன.


உயிரிழந்தவர்களின் உடல்கள் சம்பவ இடத்தில் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (08) காலை, நீதவான் மற்றும் அரச இரசாயன பகுப்பாய்வாளர் ஆகியோரால் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.


வெடிப்பிற்கு காரணம் எரிவாயு கசிவா? அப்படியெனில், அது எவ்வாறு ஏற்பட்டது? இது போன்ற எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பாதுகாப்பற்ற முறையில் எரிவாயு நிரப்பப்பட்டது எவ்வாறு? இதற்கு சட்டப்படியான அனுமதி இருந்ததா? போன்ற பல கேள்விகள் தற்போது எழுந்துள்ளன.


இரசாயன பகுப்பாய்வு அறிக்கை கிடைக்கும் வரை, இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர். 

No comments

Powered by Blogger.