Header Ads



தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ள அரசாங்கம்


அரசாங்கம் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


ஆசிரியர்களுக்கான சம்பள அதிகரிப்பு எந்த வகையிலும் போதுமானதல்ல என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.


தற்போதைய சுற்றறிக்கையின் படி, ஆசிரியர்களின் சம்பம் 3,000 ரூபா முதல் 19,000 ரூபா வரையிலான அளவில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.



அத்துடன், அடிப்படை சம்பள உயர்வு இடம்பெற்றிருந்தாலும், இதற்கு முன் வழங்கப்பட்ட 7500 ரூபா கொடுப்பனவு அடிப்படை சம்பளத்துடன் சேர்க்கப்பட்டதனால் இவ்வாறு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


அனைத்து அரச ஊழியர்களும் 20,000 ரூபா ஊதிய உயர்விற்காக போராடிய நிலையில், அது இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை என ஸ்டாலின் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட அதிகாரிகளின் வழிகாட்டல்களின் அடிப்படையில் தேசிய கல்வி நிறுவனம் ஊடாக முதலாம் தரம் மற்றும் ஆறாம் தர பாடத் திட்டத்தில் மாற்றங்களை அரசாங்கம் கொண்டுவர முயற்சி செய்கின்றது என அவர் தெரிவித்தள்ளார்.


கட்சியின் செயற்பாட்டாளர்களாக கூறிக்கொள்ளும் இந்த அதிகாரிகள் மீது கணக்காய்வு பிரிவு உள்ளிட்ட பல்வேறு தரப்புக்களினால் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இவ்வாறான பின்னணியில் குறித்த அதிகாரிகளின் வழிகாட்டல்களில் பாடத் திட்ட மாற்றம் செய்வதானது அரசாங்கத்தின் தற்கொலை முயற்சியாகவே கருதப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.


பாடத்திட்டம் எட்டாண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட வேண்டும். எனினும், 2023 ஆம் ஆண்டில் இதற்கான மாற்றங்கள் மேற்கொள்ளப்படாததால், சுமார் 43 இலட்சம் மாணவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக பழைய பாடத்திட்டத்தின்படி கல்வி பயில வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


அத்துடன், முதலாம் மற்றும் ஆறாம் தர பாடத்திட்டங்களில் பெரும் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளதாக அரசு தெரிவித்திருந்தாலும், இவ்வாண்டு ஏற்கனவே மூன்று மாதங்கள் கடந்த நிலையில், அந்த மாற்றங்கள் குறித்து அதிபர்கள், ஆசிரியர்கள் எவருக்கும் தெளிவான தகவல் வழங்கப்படவில்லை என்றும் ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார். 


ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் பங்கேற்ற போது அவர் இந்தக் குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளார்.


No comments

Powered by Blogger.