சத்திர சிகிச்சை வைத்தியரின் அசமந்தத்தினால் ஏற்பட்ட மரணம்.. ?
- இஸ்மதுல் றஹுமான் -
நீர்கொழும்பு தனியார் வைத்தியசாலையில் இடம் பெற்ற சத்திர சிகிச்சையில் விஷேட வைத்தியர் ஒருவரின் கவணயீனம் மற்றம் அலட்சியம் காரணமாக 65 வயது நபர் மரணமான துயரச் சம்பவம் நீர்கொழும்பில் இடம்பெற்றுள்ளது. நீர்கொழும்பு, கட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த ஜயகொடி ஆரச்சிகே கிறிஸ்டி பிரேமலால் என்பவரே நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் 28ம் திகதி காலை மரணம் அடைந்துள்ளார்.
இது தொடர்பாக மரணமானவரின் மனைவி ஜசிந்தா மற்றும் உறவினர்கள் கூறுகையில் மரணமானவரின் வலதுபக்கம் ஏற்பட்ட "ஹேனியா" குடலிறக்க நிலை வருத்தத்திற்காக 18ம் திகதி நீர்கொழும்பு பிரபல தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அந்த தனியார் வைத்தியசாலையில் அரச சேவையில் இருந்து ஓய்வுபெற்ற விசேட சத்திரசிகிச்சை வைத்தியர் ஒருவர் சத்திரசிகிச்சை செய்துள்ளார். 22ம் திகதி வீடு திரும்பியுள்ளார்.
பின்னர் இரண்டு நாட்களில் அவரின் வயிற்றின் உள்ளே பலத்த வலி ஏற்பட்டுள்ளதுடன் உரிய முறையில் சிறுநீர் கழிப்பதிலும் சிரமம் உண்டாகியுள்ளது.
மீண்டும் 24 ம் திகதி மாலை மீண்டும் அதே தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு வைத்தியர் "ஸ்கேன்" பரிசோதனை செய்த போது அவரது குடலிறக்க நிலைக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்பு, குடலிறக்கம் வெடித்து, அதிலிருந்து சிதறிய சீழ் உட்புறமாக சிதறிக் கிடந்தது.சரியான சிகிச்சை அளிக்காமல் குடலிறக்கத்திற்கு பயன்படுத்தப்படும் வலையை மட்டும் வைத்து கவணக்குறைவாகவும் அலட்சியமாகவும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதனால் அந்த சீழ் மூலம் விஷக் கிருமிகள் சிறுநீரகத்தை தாக்கியுள்ளதாகவும் இதனால் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படுமென வைத்தியர்கள் கண்டறிந்துள்ளனர்.
வைத்தியசாலை மூலமாக அறுவைசிகிச்சை செய்த குறித்த விஷேட வைத்தியரை வரவழைத்துள்ளனர்.
நோயாளியை நீர்கொழும்பில் இன்னுமொரு தனியார் வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்ற வேண்டும் என குறித்த வைத்தியர் கூறியுள்ளார். அப்போது மரணமானவரின் மனைவி ஜசிந்தா என்ன நடந்தது என டாக்டரிடம் வினவியபோது நானும் மனிதன், எமது கையாளும் பிழைகள் ஏற்படுகின்றன, இது தவறுதலாக இடம்பெற்றுள்ளது என தெரிவித்துள்ளார்.
அன்று மாலையே டாக்டர் குறிப்பிட்ட தனியார வைத்தியசாலைக்கு நோயாளியை இடமாற்றியுள்ளனர். அங்கு வந்த குறித்த டாக்டர் அவசரமாக சத்திசிகிச்சை செய்யவேண்டும். அப்படி செய்தாலும் மீண்டும் நினைவு வராது என உறவினர்களிடம் கூறியுள்ளார்.
இதனால் சந்தேகம் ஏற்பட்ட மனைவி கணவரை நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு இடமாற்றுமாறு டாக்டரிடம் கூறியுள்ளார். அப்போது அதனை ஏற்றுக்கொள்ளாத குறித்த வி்ஷேட வைத்தியர் நான் கடமை புரிந்த நீர்கொழும்பு வைத்தியசாலை பற்றி எனக்குத்தெரியாதா? தற்போது அங்கு கொண்டு சென்று பயனில்லை எனக் கூறி நோயாளியை கம்பஹா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லுங்கள் அங்கு எனக்குத் தெரிந்த டாக்டர் ஒருவர் மூலம் சிகிச்சை அளிக்க முடியும் என்றாறாம்.
கம்பஹா மற்றும் ராகம வைத்தியசாலைகளில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் கட்டில்கள் இல்லையென அறிந்துகொண்ட உறவினர்கள் நோயாளியை 24 ம் திகதி நீர்கொழும்பு ஆஸ்பத்திரியில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி 28 ம் திகதி பிரேமலால் காலமானார்.
பிரேமலாலின் மனைவி மேலும் தெரிவிக்கையில் நீர்கொழும்பு வைத்திய சாலயில் இடம்பெற்ற மரண விசாரணையில், தனியார் மருத்துவமனையில், கவணயீணத்தாலும் அலட்சியமாகவும் இடம்பெற்ற சத்திர சிகிச்சையினால் அவரின் சிறுநீரகத்தில் கிருமி உட்சென்றதனால் அது பாதிப்படைந்து அதனால் இருதயத்தையும் தாக்கி நோய் நிலமை அதிகரித்ததினால் இந்த மரணம் சம்பவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்த அகால மரண சம்பவம் தொடர்பாக நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.
கிரிஸ்டி பிரேமலாலின் பூதவுடல் தற்போது அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இறுதிக்கிரிகைகள் 31 திகதி திங்கட்கிழமை இடம்பெற்றது.
Post a Comment