தமிழ் மொழியின் சம அந்தஸ்துக்காக, உரிமைக்குரல் எழுப்பிய அறிஞர் AMA அஸீஸ்
கல்வித்துறை, இலக்கியம், மொழியாற்றல், அரசியல், தமிழ் மொழிப்பற்று, மார்கக்கல்வி,வரலாற்று நோக்கு இவ்வாறு பல துறைகளிலும் புலமை பெற்றுத்திகழ்ந்த ஈழத்து முஸ்லிம் பெருமகன்,யாழ் மண்ணின் மைந்தன் மர்ஹூம் அறிஞர் ஏ.எம்.ஏ.அஸீஸ் அவர்களாவார்.கல்வித்துறையில் எமது சமூகத்தின் முன்னேற்றத்துக்காக, தன்னுடைய சிவில் சேவை உயர் பதவியிலிருந்து விலகி ,கொ/ஸாஹிராக்கல்லூரியின் அதிபர் பதவியை ஏற்று,ஸாஹிராவின் பொற்காலத்தை உருவாக்கிய சிற்பியவர்.
1956 இல் சிங்களம் மட்டும் அரசகரும மொழியாக்கப்படும் சட்டம் கொண்டுவரப்பட்ட போது, பாராளுமன்றத்திலும்,செனட்சபை உறுப்பினரான அஸீஸ் செனட்சபையிலும் எதிர்த்து வாதாடினார்.
.இவ்வாறான வரலாறுகள் எமது தமிழ்,முஸ்லிம் இளம் சந்ததியினருக்கு கூறப்பட வேண்டும். ஏனெனில் புதிதாக்க் கிளம்பியுள்ள வரலாறு தெரியாத சில அரைவேக்காட்டு அரசியல் வாதிகள் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.
இத்தகைய சந்தர்ப்பத்தில் ,இன, மத, மொழி வேறுபாடுகளை மூலதனமாகக் கொண்டு அரசியல் செய்யும் கேவலமான அரசியல்வாதிகளின் பிரச்சாரங்கள் பற்றி அவதானமாக இருக்க வேண்டியதுடன், தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிய விழிப்புணர்ச்சி யையும் ஏற்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
முதலாவது முஸ்லிம் சிவில் சேவையாளராகவும், மருதானை ஸாஹிரா கல்லூரியின் சிற்பியாகவும், தமிழில் மிகுந்த புலமை பெற்றவராகவும் சமூக சேவையாளராகவும் பன்முக ஆளுமை கொண்டு திகழ்ந்த மர்ஹும் கலாநிதி ஏ.எம்.ஏ அஸீஸ் அவர்கள் தமிழ் முஸ்லிம் ஒற்றுமைக்காகவும், தாய்மொழியாம் தமிழுக்காகவும் தன்னை அர்ப்பணித்து செயற்பட்டவர்.
இலங்கையின் எல்லப்பாகங்களிலும் பரந்து வாழும் முஸ்லிம்களை ஒன்றிணைப்பதில் தமிழ் மொழியின் பங்கு முக்கியமானது தமிழ் மொழியுடனான இத்தொன்மைத் தொடர்பையும் அதன் தமிழ் மொழி அந்தஸ்தையும் அறிஞர் அஸீஸ் மிக உயர்வாக மதித்தார். 1956 இல் கொண்டுவரப்பட்ட தனிச் சிங்கள சட்டத்தை தொடர்ந்து முஸ்லிம்களின் தாய்மொழி எது என்ற பிரச்சினை உருவாகியது இலங்கை முஸ்லிம்களின் மிகப் பெரும்பான்மையானவர்களின் மொழி தமிழ் மொழி என்று உண்மையில் இருந்து பிரச்சினையை அஸீஸ் ஆராய்ந்தார்.
தமிழ் மொழிக்கான அர்ப்பணிப்பு
தமிழ்மொழிக்குப் பாதகமான சட்டங்களை அரசாங்கம் அமுல் படுத்த முற்பட்ட சந்தர்ப்பங்களில் அஸீஸ் அவற்றை எதிர்த்தார். 1956இல் தனிச் சிங்கள மசோதா பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சந்தர்ப்பத்திலும், அவர் அங்கத்துவம் வகித்த செனெற் சபையில் அம்மசோதா விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்திலும் அச்சட்ட மூலத்தை அவர் கடுமையாகக் கண்டித்தார். இச்சட்டம் அமுல்படுத்தப்பட்டால் சிறுபான்மையினரான தமிழ், முஸ்லிம்களின் கல்வி, உத்தியோகவாய்ப்பு, கலாசாரம் உட்பட பல துறைகளில் அது பாரிய பின்விளைவுகளைக் கொண்டுவரும் என்றும், பெரும்பான்மையினர் மீதான சிறுபான்மையினரின் நம்பிக்கைகளைச் அது சிதறடித்துவிடும் என்றும் அரசாங்கத்தை அஸீஸ் வெளிப்படையாக எச்சரித்தார்.
1956 மே, 8ஆம் திகதி பாராளுமன்ற மேல்சபையில் தமிழ் மொழி தொடர்பான (S.W.R.D பண்டாரநாயக்க தலைமையிலான) அரசின் கொள்கைகளைக் கண்டித்துப் பேசினார். அப்போது பின்வரும் கருத்துக்களை அஸீஸ் முன்வைத்தார்:
“அரசாங்கத்தின் சிம்மாசன உரையில் ‘சிங்கள மொழியை மட்டும் அரசின் உத்தியோக மொழியாக்கப்படுவதற்குத் தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்’என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், தமிழுக்கு என்ன அந்தஸ்து தரப்படும் என்று அங்கு எதுவுமே குறிப்பிடப்படவில்லை. சிங்கள மொழி மட்டும் உத்தியோக மொழியாக்கப்படும் என்று அரசாங்கம் கூறுகிறது. தமிழ்மொழியானது தெளிவற்ற நிலைக்கும், உறுதியற்ற நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளது. இது தமிழ்பேசும் மக்களிடையே பெரும் கவலையைத் தொற்றுவித்துள்ளது. ஒருமொழி, ஒருஇனம், ஒரு சமயம் என்று பத்திரிகைகள் வெளியிடும் செய்திகளாலும் கோஷங்களாலும் இனவாதப்பதற்றம் பரவிவருகிறது. சில அமைச்சர்களின் நடத்தைகளும் இந்த இனவாதப் பதற்றத்திற்கு தூபமிட்டு வருகிறது. தமிழுக்கு வழங்கப்படும் சம அந்தஸ்தினால் சிங்களம் அதன் முக்கியத்துவத்தை இழந்து விடும் என்ற வாதத்தை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. சிங்கள மொழி அரசமொழி ஆக்கப்படுவதனால் எனக்கு எந்த மனவேதனையும் கிடையாது. ஏன் தமிழ் மொழியைக் கொலை செய்ய முயல்கிறீர்கள்? அத்தோடு, தமிழ்மொழி முஸ்லிம்களின் கல்வி மொழியாகவும் இருப்பதனால் நாடு முழுக்கப் பரந்து வாழும் முஸ்லிம்கள் இந்த விடயத்தில் பெரும் கவலையடைந்துள்ளனர்.”
அதே நேரத்தில், தான் அங்கத்துவம் வகித்த அப்போதைய எதிர்க்கட்சியாக இருந்த ஐக்கிய தேசியக்கட்சிக்குள்ளும் அஸீஸ் போராட்டங்களை ஆரம்பித்தார். ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்கள் சிலர் பாராளுமன்றத்திலும், மேல்சபையிலும் தனிச்சிங்கள மசோதாவை ஆதரிக்கவேண்டும் என்று தீர்மானம் எடுக்க முற்பட்ட போது அஸீஸ் அதனை வன்மையாக எதிர்த்தார். முஸ்லிம்கள் இந்த மசோதாவை ஆதரிக்க மாட்டார்கள் என்றும், மொழிப் பிரச்சினையில் ஐக்கியதேசியக் கட்சி சிறுபான்மையினரின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும், தனிச் சிங்கள மசோதாவை அது ஆதரிக்கக் கூடாது என்றும் அக்கூட்டத்தில் அவர் பேசினார்.
எனினும் "சிறிகோத்தா"வில் நடந்த கூட்டத்தில் சில வாக்குறுதிகள் முன்வைக்கப்பட்டதைத் தவிர முன்னேற்றமான முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை. இதனால் விரக்தியடைந்த அஸீஸ், தான் மிகவும் நேசித்துவந்த கட்சியிலிருந்து வெளியேறினார். 1956 யூன் 2ஆம் திகதி தனது இராஜினமா பற்றி அகில இலங்கை முஸ்லிம் லீக் செயலாளருக்கு எழுதிய கடிதத்தில் அஸீஸ் பின்வருமாறு குறிப்பிட்டார் :
“சிறுபான்மையினரின் உரிமைகளைச் சிறிகோத்தாவின் நான்கு சுவர்களுக்குள் பாதுகாப்பதற்கு அங்கத்தினர்கள் தயாராக இருந்தார்களே ஒழிய, வெளியில் அவ்ளாறு செய்யத் தயாராய் இல்லை. அதனால் விசுவாசத்துடன் பணியாற்றி வந்த கட்சியை விட்டும் விலகுவதைத் தவிர வேறுவழியில்லை.”
அஸீஸ் அவர்கள் 1952 இல் ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்குழு உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டவர். அதே ஆண்டு செனட்சபை உறுப்பினராகவும் தெரிவு செய்யப்பட்டிருந்தவர். இவ்வாறெல்லாம் ஐ.அதே.கட்சியின் உயர்மட்டத்தில் பதவி வகித்திருந்தும் ,அரசகரும மொழிச்சட்டம் பற்றிய தனது கொள்கை,தனது கட்சிக்கொள்கையுடன் முரண்பட்டதால்,தமிழ் மொழிக்கான சம அந்தஸ்து மறுக்கப்பட்டதால் ,கட்சியுடனான சகல தொடர்புகளையும் துண்டித்துக் கொண்டதுடன் ,கட்சியிலிருந்தும் இராஜினாமா செய்து கொண்டார்.கட்சி உயர் அந்தஸ்தை விட ,தனது சமுதாயத்தின் எதிர்காலத்தை,அதன் மொழி பெற வேண்டிய அந்தஸ்தை உயர்வாக மதித்தார்.சமூகத்தின் உரிமைக்காக ,கொள்கைக்காக பதவிகளை தூக்கி வீசக்கூடிய , போராடக்கூடிய ,துணிவுள்ள தலைவர்களாக எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக அவர் காட்டிச் சென்றுள்ளார்.
தமிழ் மக்களின் பேரன்பு:-
அறிஞர் அஸீஸ் அவர்கள் தமிழ் மொழியின் சம அந்தஸ்த்துக்கான போராட்டம் காரணமாகவும், மற்றும் அவரது தமிழ்ப்பணி, தமிழ் ஆற்றல் காரணமாகவும் தமிழ் மக்களும் அவர் மீது மிகுந்த மரியாதையும் நல்லபிமானமும் கொண்டிருந்தனர்.
• 1951இல் யாழ் இந்துக் கல்லூரியின் மணிவிழா வைப்பவத்தை அறிஞர் அஸீஸ் அவர்களை கொண்டு ஆரம்பித்து அவர்களை கௌரவப்படுத்தினர்.
• 1963இல் யாழ் வைத்தீஸ்வரா வித்யாலயத்தின் தங்க விழா உரையை கலாநிதி அஸீஸ் அவர்களுக்கு வழங்கி அவரை கௌரவப்படுத்தினர்.
• 1980 இல் அஸீஸ் அவர்கள் மீதான மரியாதைக்கும் அங்கீகாரத்துக்கும் அடையாளமாக, யாழ் பல்கலைக்கழகம் தனது முதலாவது பட்டமளிப்பு விழாவில் அன்னாருக்கு கலாநிதி பட்டமளித்து கௌரவித்தது.
• 1955 ஆம் ஆண்டு தென்னிந்தியாவில் நடைபெற்ற தமிழ் புலவர்கள் தினத்தின் தங்க விழா வைபவத்துக்கு தலைமை தாங்கும் பொறுப்பை வழங்கி கௌரவப்படுத்தினர்.
• 1978இல் சென்னை தமிழ்நாடு முஸ்லிம் கல்வி மாநாட்டு நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கும் பொறுப்பை வழங்கி கௌரவப்படுத்தினர்.
• இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த 100 முஸ்லிம் தலைவர்களை இந்தியாவிலுள்ள குறிக்கோள் தொடர்பான கல்வி நிலையம் (Institute of objective study is a body intellectuals) என்றும் நிறுவனம் தெரிவு செய்தது.
அத் தலைவர்களில் ஒருவராக அறிஞர் அஸீஸ் தெரிவு செய்யப்பட்டமையானது இலங்கை திருநாட்டுக்கும் இலங்கை முஸ்லிம்களுக்கும் அவர் பிறந்த மண்ணுக்கும் கிடைத்த கௌரவமாகும்.
சமுதாய முன்னேற்றத்துக்காகவும், தமிழுக்கான சம அந்தஸ்துக்காகவும் தன்னை அர்ப்பணித்து வாழ்ந்த அறிஞர் அஸீஸ் தனது 62 ஆவது வயதில் 1978 நவம்பர் 24 இல் இறையடி சேர்ந்தார் .அவரது வழிகாட்டலில் எமது சமூகமும்,தலைமைகளும், அரசியல்வாதிகளும் தடம்பதித்து தொடர்வதே நாம் அவருக்குச் செய்யும் நன்றிக்கடனாகும்.
Post a Comment