இலங்கை – சுவிட்சர்லாந்து பாராளுமன்ற நட்புறவுச் சங்கம் மீள ஸ்தாபிப்பு
இலங்கை – சுவிட்சர்லாந்து பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தை மீள ஸ்தாபிப்பதற்கான கூட்டம் 08.04.2025ஆம் திகதி பிரதிச் சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி தலைமையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே இத்தெரிவு இடம்பெற்றது. இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் (கலாநிதி) சிறி வோல்ட் இதில் விருந்தினராகக் கலந்துகொண்டார்.
இதில் இலங்கை – சுவிட்சர்லாந்து பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் செயலாளராக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த ஹெட்டியாராச்சி தெரிவுசெய்யப்பட்டார்.
இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்த பிரதிச் சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி, 1956ஆம் ஆண்டு முதல் சுவிட்சலாந்துக்கும் இலங்கைக்கும் இடையில் காணப்படும் இருதரப்பு உறவுகளை இங்கு நினைவுகூர்ந்தார். விவசாயம், கால்நடை வளர்ப்பு, நீர்ப்பாசனம், கல்வி உள்ளிட்ட துறைகளில் இரு நாட்டுக்கும் இடையில் வலுவான அபிவிருத்தி ஒத்துழைப்புக்கள் காணப்படுவதாகவும், சுனாமி அனர்த்தத்தின் பின்னரான மீட்புப் பணிகளில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கொவிட் -19 தொற்றுநோய் காலப் பகுதியில் சுவிட்சலாந்து இலங்கைக்கு வழங்கிய உதவிகளை இங்கு வலியுறுத்திய பிரதிச் சபாநாயகர், இரு நாட்டுக்கும் இடையில் காணப்படும் பொருளாதார உறவுகள் உள்ளிட்ட ஒத்துழைப்புக்கள் மேலும் விஸ்தரிக்கப்படும் என்ற நம்பிக்கை இருப்பதாகக் கூறினார். இரு நாட்டுப் பாராளுமன்றங்களுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்கள் மற்றும் நட்புறவுகளை மேலும் பலப்படுத்துவதற்கு இந்த நட்புறவுச் சங்கம் சிறந்ததொரு தளமாக அமையும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இரு தரப்பு உறவுகளைப் பலப்படுத்துவதில் இலங்கை – சுவிட்சர்லாந்து பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் முக்கியத்துவத்தை இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் (கலாநிதி) சிறி வோல்ட் வலியுறுத்தினார். பொருளாதார அபிவிருத்தி, வர்த்தகம் மற்றும் பாராளுமன்ற பரிமாற்றம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்புக்களை மேம்படுத்துவதில் சுவிட்சர்லாந்து அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் இங்கு உரையாற்றிய சுவிட்சலாந்து தூதுவர் தெரிவித்தார்.
நட்புறவுச் சங்கத்தின் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்ட கௌரவ அமைச்சர் (கலாநிதி) உபாலி பன்னிலகே இங்கு கருத்துத் தெரிவிக்கையில், நல்லிணக்கம், சமாதானத்தைக் கட்டியெழுப்புவது உள்ளடங்கலான அபிவிருத்தி போன்றவற்றுக்கு சுவிட்சர்லாந்து தொடர்ச்சியாக வழங்கிவரும் ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்தார். பொருளாதார மீள்தன்மை, பசுமையான கண்டுபிடிப்புக்கள், தொழில் பயிற்சி, டிஜிட்டல் இணைப்பு மற்றும் சுற்றுலா மேம்பாடு போன்ற துறைகளில் ஒத்துழைப்புக்களை மேம்படுத்துவதற்கான புதிய வழிகளைக் கண்டுபிடிப்பதில் ஆர்வமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இரு நாடுகளுக்கும் இடையில் பரஸ்பர தொழில்நுட்ப பரிமாற்றங்களை விஸ்தரிக்க வேண்டியதன் அவசியத்தையும் கௌரவ அமைச்சர் வலியுறுத்தினார்.
இலங்கை – சுவிட்சர்லாந்து பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் புதிய செயலாளராகத் தெரிவுசெய்யப்பட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த ஹெட்டியாராச்சி உரையாற்றுகையில், இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம், முதலீடுகள் மற்றும் சுற்றுலாத் துறையை விஸ்தரிக்க வேண்டியிருப்பதாகவும் தெரிவித்தார். பலதரப்புக்கள் கலந்துகொள்ளும் மன்றங்களில் சுவிட்சர்லாந்து இலங்கைக்கு வழங்கிவரும் ஆதரவுக்கு மதிப்பளிப்பதாகவும், சுவிட்சர்லாந்தின் பொருளாதார வெற்றி, குறிப்பாக விவசாய மேம்பாடு மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் போன்ற துறைகள் வழங்கும் அனுபவங்கள் மற்றும் வாய்ப்புக்களையும் எடுத்துரைத்தார். சுவிட்சலாந்து தூதுவர் தொடர்ச்சியாக வழங்கிவரும் ஒத்துழைப்புக்களுக்கும் நட்புறவுச் சங்கத்தின் செயலாளர் நன்றி தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Post a Comment