அமெரிக்காவிடம் இலங்கை விடுக்கவுள்ள கோரிக்கை - அமெரிக்க
அமெரிக்காவினால் விதிக்கப்பட்டுள்ள பரஸ்பர தீர்வை வரி அமுலாக்கத்தின் இடைநிறுத்தக் காலத்தை நீடிக்குமாறு இலங்கை அரசாங்கம் கோரிக்கை முன்வைக்கவுள்ளது.
இலங்கை மீதான பரஸ்பர தீர்வை வரியை 44 சதவீதமாக அதிகரித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பை வெளியிட்டதை அடுத்து, இலங்கையில் பெரும் பொருளாதார பாதக நிலை உணரப்பட்டிருந்தது.
இதனை அடுத்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டதுடன், இதற்கான நிபுணர் குழு ஒன்றும் நியமிக்கப்பட்டது.
அத்துடன் இந்த விடயம் தொடர்பில் தீர்வையும் ஒத்துழைப்பையும் கோரி ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால், அமெரிக்க ஜனாதிபதிக்கு உடனடியாக கடிதம் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டது.
எவ்வாறாயினும் இந்த வரி விதிப்பினால் உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய பாதிப்பின் காரணமாக, புதிய வரி அமுலாக்கத்தை 90 நாட்களுக்கு அமெரிக்கா ஒத்திவைத்தது.
இந்த காலத்தை ஆறு மாதங்களாக நீடிக்குமாறு இலங்கை அரசாங்கம் அமெரிக்காவிடம் கோரிக்கை விடுக்கவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரம் அமெரிக்காவிலிருந்து மேற்கொள்ளப்படுகின்ற இறக்குமதிகளை அதிகரிப்பதன் ஊடாக, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக இடைவெளியைக் குறைத்து, வரிச் சலுகையைப் பெற்றுக் கொள்வது குறித்தும் ஆராயப்படுகிறது.
இரு நாடுகளுக்கும் இடையில் கடந்த 2024 ஆம் ஆண்டு 3.4 பில்லியன் டொலர் பெறுமதியான வர்த்தகம் இடம்பெற்றுள்ளது.
இதில் இலங்கைக்கு அமெரிக்காவிலிருந்து 368.2 மில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களே இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
எனினும் இலங்கை 3 பில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது.
இந்த வர்த்தக இடைவெளியே அமெரிக்க அரசாங்கத்துக்குக் கரிசனைக்குரிய விடயமாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்ற நிலையில், அதனை நிவர்த்தி செய்யும் வழிகளை இலங்கை அரசாங்கம் ஆராய்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை அமெரிக்காவிலிருந்து விலங்குகளுக்கான உணவுப் பொருட்கள், மருந்து பொருட்கள், மின்சாதனப் பொருட்கள் போன்றவற்றை இறக்குமதி செய்து வருகின்றது.
Post a Comment