மியன்மார் நிலநடுக்கத்தில் 700 முஸ்லிம்கள் உயிரிழப்பு..? பள்ளிவாசல்கள் நிர்மூலம் - மீட்பு நடவடிக்கைகளை தவிர்க்கும் இராணுவம்
வெள்ளிக்கிழமை மியான்மரைத் தாக்கிய 7.7 ரிச்டர் அளவிலான நில நடுக்கப் பேரழிவில் சுமார் 700 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதாக உள்ளூர் முஸ்லிம்கள் தெரிவித்துள்ளனர்.
புனித ரமழானின் இறுதி வெள்ளிக்கிழமையன்று ஜும்ஆத் தொழுகையின் போது நிலநடுக்கம் ஏற்பட்டது, அதன்போது, பல பர்மிய முஸ்லிம்கள் (ரோஹிங்கியாக்கள் அல்லர்) பள்ளிவாயல்களில் கூடியிருந்தனர்.
தாய்லாந்தில் உள்ள நாடுகடந்து வாழும் பர்மியர்களால் நடத்தப்படும் செய்தி வலைத்தளமான தி இராவதி (The Irrawaddy) நிலநடுக்கத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மண்டலே மற்றும் சகாயிங் பகுதிகளில் 60 பள்ளிவாசல்கள் அழிக்கப்பட்டதாக திங்களன்று ஸ்பிரிங் புரட்சி மியான்மர் முஸ்லிம் வலையமைப்பை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டது.
இந்த பள்ளிவாசல்களுள் பெரும்பாலானவை 19 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டவையாகும் எனக் கூறப்படுகிறது.
மண்டலே, சாகெய்ங், நய்பிடாவ், பைன்மனா, பியாவ்ப்வே, யமெதின், தாஸி, மெய்க்டிலா, கியாக்ஸே மற்றும் பலேக் நகரங்களில் உள்ள பள்ளிவாசல்ளும் குறிப்பிடத்தக்க சேதத்தை எதிர்கொண்டுள்ளன..
‘இந்த மாதம் ரமழான் என்பதால் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டதாக நாங்கள் மதிப்பிடுகிறோம். எங்களிடம் இன்னும் சரியான புள்ளிவிவரங்கள் இல்லை, ஆனால் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர் என்பது எங்களுக்குத் தெரியும்,’ என முஸ்லிம் கோ ஷாகி ஊடகத்தினால் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
மியான்மரின் இரண்டாவது பெரிய நகரமான மண்டலேயில் குறைந்தது 18 பள்ளிவாசல்கள் சேதமடைந்தன, அவற்றுள் பல 19 ஆம் நூற்றாண்டின் கட்டிடங்களாகும். அவை ஒருபோதும் பழுதுபார்க்கப்படிருக்கவில்லை என்று முஸ்லிம் கோ ஷாகியினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவ ஆதரவு பெற்ற தீவிர தேசியவாதக் குழுவான இனம் மற்றும் மதப் பாதுகாப்பு சங்கம் (மா பா தா), நாட்டில் பள்ளிவாசல்களுக்கு எதிர்ப்பு உணர்வுகளை வளர்ப்பதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தது என்றும் கோ ஷாகியினால் குறிப்பிடப்பட்டுள்ளது.
வழக்கமான பராமரிப்பு பணிகளுக்கு அனுமதி மறுக்கப்படுவததை காரணம் காட்டி 2017 ஆம் ஆண்டு, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அது தொடர்பில் எச்சரிக்கை விடுத்தது.
சேதங்கள் தொடர்பான ஆரம்ப அறிக்கைகளில் மடாலயங்களைச் சேர்த்திருந்தாலும், அழிவடைந்த சொத்துக்களுள் பள்ளிவாசல்களை இராணுவ ஆட்சிக்குழு பட்டியல் இடவில்லை.
இராணுவ ஆட்சி குழுவின் மீட்புக் குழுக்கள் பள்ளிவாசல்களில் தேடல் மற்றும் மீட்பு முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Vidivelli,
(எம்.ஐ.அப்துல் நஸார்)
Post a Comment