குடிகாரர்கள் அதிகரிப்பு - இவ்வருடத்தில் 61 பில்லியன் ரூபாய் வருமானம்
இலங்கையின் மூன்று முக்கிய வருமான ஈட்டும் துறைகளில் ஒன்றான இலங்கை மதுவரித் திணைக்களம் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 61 பில்லியன் ரூபாய்களை வருமானமாக ஈட்டியுள்ளது.
இதன்படி, நிதி அமைச்சகத்தின் கீழ் செயற்படும் உள்நாட்டு வருமான வரி, இலங்கை சுங்கத்திணைக்களம் என்பவற்றை அடுத்து, மூன்றாவது வருமானம் ஈட்டும் துறையாக மதுவரித்திணைக்களம் பட்டியலுக்குள் வந்துள்ளது.
இந்தநிலையில், அந்த திணைக்களத்திற்கு 2025 ஆம்ஆண்டிற்காக 242 பில்லியன் ரூபாய் வருமான இலக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த இலக்கிலிருந்து 2025 ஜனவரி, பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நாடு தழுவிய மதுபான விற்பனையிலிருந்து திணைக்களம் 61.3 பில்லியன் ரூபாய்களை ஈட்டியுள்ளது.
2025 காலாண்டுக்கான இலக்காக 42 பில்லியன்களே இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளபோதும், அதனையும் முந்தி 61 பில்லியன் ரூபாய்கள் வரி வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
இது 127வீத முன்னேற்றம் என்று திணைக்களத்தின் தலைவர் ஏ.எல் உதயகுமார தெரிவித்துள்ளார். மதுபான போத்தல் மூடிகளில் பாதுகாப்பு ஸ்டிக்கரை அறிமுகப்படுத்த எடுத்த நடவடிக்கைகள், சட்டவிரோத மதுபானங்கள் சந்தைக்குள் நுழைவதைத் தடுத்துள்ளன.
இதுவே வருமானத்தை அதிகரிக்க பெரிதும் உதவியது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment