Header Ads



மாணவிக்கு, மாணவன் I LOVE YOU சொன்ன விவகாரம் - அதிபருக்கு எதிராக முறைப்பாடு


பாடசாலை ஒன்றில் தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவி ஒருவருக்கு தன் காதலை தெரிவித்த அதே வகுப்பில் கல்வி கற்கும் சக மாணவனை அதிபர் பிரம்பால் கண்டித்ததையடுத்து மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், அதிபருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள சம்பவம் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பாடசாலை ஒன்றில்  வெள்ளிக்கிழமை (14) இடம்பெற்றுள்ளது.


ஆண், பெண் பிள்ளைகள் கற்றுவரும் கலவன் பாடசாலையில் தரம் 10 இல் கல்வி கற்று வரும் மாணவி ஒருவரை பார்த்து அதே வகுப்பில் கல்வி கற்று வரும் மாணவன் ஐ லவ் யூ என கூறி  தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார்.


இதனையடுத்து மாணவி பாடசாலை அதிபரிடம் இது தொடர்பாக முறைப்பாடு செய்ததையடுத்து அதிபர் குறித்த மாணவனை தனது காரியாலயத்துக்கு வரவழைத்து பிரம்பால் மாணவன் மீது இரண்டு அடி கொடுத்து ஒழுக்கமாக நடக்குமாறு தெரிவித்து எச்சரித்து அனுப்பியுள்ளார்.


இதனை தொடர்ந்து வீட்டிற்கு சென்ற மாணவன் அதிபர் தனக்கு அடித்துள்ளார் என தெரிவித்ததையடுத்து மாணவனின் பெற்றோர் அவரை மட்டு.போதனா வைத்தியசாலையில் அனுமதித்ததுடன், அதிபருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். 


அதிபரை விசாரணைக்கு அழைத்துள்ளதாக தெரிவித்த பொலிஸார்

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை  மேற்கொண்டு வருகின்றனர்.


கனகராசா சரவணன்


No comments

Powered by Blogger.