Header Ads



ரணிலின் குடியுரிமை பறிக்கப்படுமா..?


(எம்.மனோசித்ரா)


பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் அரசாங்கம் அதன் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பதை தெரிவிக்க வேண்டும். இதனை அடிப்படையாகக் கொண்டு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் குடியுரிமை பறிக்கப்படுமா அல்லது அவர் மீது வழக்கு தொடரப்படுமா என்று முன்னாள் அமைச்சர் சம்பிக ரணவக்க கேள்வியெழுப்பியுள்ளார்.


மேலும் 1983 - 1990க்கு இடையில் கொல்லப்பட்ட மற்றும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை குறித்த குறிப்பிட்ட புள்ளிவிவரங்கள் பாராளுமன்ற நூலகத்தில் இருப்பதாகவும், அதனை சபையில் சமர்ப்பித்தால் யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களது எண்ணிக்கையையும் ஜே.வி.பி. கலவரத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையையும் அறிந்து கொள்ள முடியும் என்றும் சம்பிக ரணவக்க வலியுறுத்தினார்.


உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய குடியரசு முன்னணியில் விகாரை சின்னத்தில் கொழும்பில் களமிறக்கப்படவுள்ள வேட்பாளர்கள் வேட்புமனுவில் கையெழுத்திடும் நிகழ்வு  சனிக்கிழமை (15) இடம்பெற்றது. இந்நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது சம்பிக ரணவக்க இதனைத் தெரிவித்தார்.


இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,


பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை சமர்ப்பித்த பிறகு அரசாங்கம் என்ன செய்ய திட்டமிட்டுள்ளது என்பதைத் தெரிவிக்க வேண்டும். ரணில் விக்கிரமசிங்கவின் குடியுரிமை இரத்து செய்யப்படுமா? அல்லது அவர் மீது வழக்குத் தொடரப்படுமா?


எவ்வாறிருப்பினும் இதனை ஒரு சாரார் மீது மாத்திரம் சுமத்துவது பொறுத்தமானதென நாம் கருதவில்லை. 1987 முதல் 1990 வரை இரு தரப்புக்களுமே இவ்வாறு கொலை செய்யும் போட்டிகளிலேயே இருந்தனர். 


அந்த வகையில் கொலைகளில் ஜே.வி.பி.யும் அன்று பங்கேற்றது. எனவே அவர்களுக்கும் இவ்விவகாரத்தில் பொறுப்பிருக்கிறது. அந்தப் பொறுப்பைத் தட்டிக்கழிக்க முடியாது. மறுதரப்பும் அதையே செய்தது. அந்த தரப்பு அதிக எதிரிகளைக் கொன்றதால் அவர்கள் வெற்றி பெற்றனர் என்று கூறப்படுகிறது.  


அதற்காகத்தான் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது என்றால், தனித்தனி இடங்களில் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதற்குப் பதிலாக, இரு தரப்பினரும் செய்த கொலைகளை விசாரிக்க ஒரு முறையான சுயாதீன ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டும்.


இந்த நடவடிக்கைகள் அரசியல் நோக்கத்திற்காக முன்னெடுக்கப்படவில்லை. அரசியல் நோக்கம் இருந்திருந்தால், இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடனேயே இவ்வாறான விடயங்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கும். இது அல் ஜசீரா எழுப்பிய கேள்வியால் ஏற்பட்ட விளைவாகும்.


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் உண்மைகளைக் கண்டறியும் ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. பின்னர் பரணகம ஆணைக்குழு, உடலகம ஆணைக்குழு, டெஸ்மண்ட் சில்வா ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டன.


இடம்பெற்ற கொலைகள் தொடர்பில் இவ்வாறு தனித்தனியாக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவது வெற்றிகரமான முறைமையாக அமையாது. 1983 மற்றும் 1990 க்கு இடையில் இறந்த மற்றும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை குறித்த குறிப்பிட்ட புள்ளிவிவரங்கள் உள்ளன. 


பாராளுமன்ற நூலகத்தில் கூட அந்த தரவுகள் உள்ளன. அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அப்போது அந்த நாற்பதாயிரம் பேரில் எத்தனை பேர் போரில் இறந்தார்கள் என்பதையும், அறுபத்தாறாயிரம் பேர் ஜே.வி.பி. கிளர்ச்சியில் இறந்தார்கள் என்பதையும் நாம் அறியலாம். ஏனென்றால் அது குறித்த ஒரு குறிப்பிட்ட பதிவு காணப்படுகிறது.


மற்ற எண்களைப் போல அல்ல. இந்த அரசாங்கம் எதிர்கொண்ட மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால், இந்தக் குறிப்பிட்ட அறிக்கைகளை பொதுமக்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும், குறிப்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கும் முறையாக விளக்கவில்லை. அல்ஜசீரா நேர்காணலிலும் இதுவே இடம்பெற்றது என்றார். 

No comments

Powered by Blogger.