Header Ads



பாராளுமன்றம் மூலம் பறிக்கப்படவுள்ள தென்னக்கோனின் பதவி


சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை பதவியிலிருந்து நீக்குவதற்கான பிரேரணை பாராளுமன்ற உறுப்பினர்களால் சபாநாயகரிடம் இன்று செவ்வாய்க்கிழமை (25) கையளிக்கப்பட்டுள்ளது.


இந்த பிரேரணையில் 115 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எரங்க குணசேகர தெரிவித்துள்ளார்.


2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13ஆம் திகதி மாத்தறை வெலிகம பெலேன பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.


அந்த நீதிமன்ற உத்திரவை தேசபந்து தென்னக்கோன் அவமதித்து சுமார் 20 நாட்கள் தலைமறைவாக இருந்த நிலையில், கடந்த புதன்கிழமை (19) காலை மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.


அதையடுத்து தேசபந்து தென்னக்கோன் ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.