சிறையிலுள்ள தேசபந்து வீட்டுச் சாப்பாடு கேட்டு அடம்பிடிப்பு
தற்போது விளக்கமறியலில் உள்ள பணி நீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் வீட்டிலிருந்து உணவு பெறுவது தொடர்பில் விடுத்த கோரிக்கையை பரிசீலித்து வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தேசபந்து தென்னகோன் தனது உணவை வீட்டிலிருந்து கொண்டு வர அனுமதி வழங்குமாறு கோரியுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளர் காமினி பீ.திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
குறித்த கோரிக்கைக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணங்களை சமர்ப்பிக்குமாறு அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இது தொடர்பான விடயங்களை கருத்தில் கொண்டு, தேசபந்து தென்னகோன் விளக்கமறியலில் இருக்கும் போது அவருக்கு வீட்டிலிருந்து உணவு வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வெலிகம பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு முன்னால் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், சுமார் 20 நாட்களுக்குப் பிறகு, தேசபந்து தென்னகோன் சமீபத்தில் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
பின்னர், ஏப்ரல் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதோடு, தற்போது அவர் தும்பர சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.
Post a Comment