Header Ads



பட்டலந்த அறிக்கையால் அமைதியற்ற நிலைமை ஏற்படலாம் - வஜிர

 
(எம்.மனோசித்ரா)


பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு நாட்டில் மீண்டும் அமைதியற்ற நிலைமை ஏற்படலாம். எனவே அவ்வாறானதொரு நிலைமை ஏற்படாமல் தடுப்பதற்கு சகல அரசியல் கட்சிகளும் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும். ஆனால் இவ்விவகாரத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதற்காக இலக்கு வைக்கப்படுகின்றார் என்பது எமக்கு புரியவில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.


பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை விவகாரம் தொடர்பில் திங்கட்கிழமை (17)  விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,


1960 ஐ.தே.க. ஆதரவாளர்கள் ஜே.வி.பி.யினரால் கொல்லப்பட்டுள்ளதாக பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையின் மூன்றாவது அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜே.வி.பி.யால் அரசாங்க சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதம் ஆபத்தான அளவில் பெரியது என்று ஆணைக்குழு அறிக்கை தெளிவாகக் கூறுகிறது. 1987 ஆகஸ்ட் மாதத்திலிருந்து நாட்டின் பாதுகாப்பு நிலைமை படிப்படியாகவும் தொடர்ச்சியாகவும் மோசமடைந்து, அரசியல்வாதிகளின் உயிருக்கு கடுமையான அச்சுறுத்தல் ஏற்பட்டிருந்தாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


அன்று ஆட்சியமைத்த ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல்வாதிகள்தான் ஜே.வி.பி.யின் வலுவான இலக்காகக் காணப்பட்டனர். பாரம்பரிய இடதுசாரித் தலைவர்களும் இந்த அச்சுறுத்தல்களுக்கு இலக்காகினர். இந்த அறிக்கையை தற்போதைய ஜனாதிபதியாலும் நிராகரிக்க முடியாது என்று சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். எனவே தற்போது சகல அரசியல் கட்சிகளும் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று நான் நினைக்கின்றேன்.


உதாரணமாக, இந்த அறிக்கைக்கமைய 1971 ஏப்ரல் கிளர்ச்சி, 1987, 1988, 1989 காலகட்டங்களில் இடம்பெற்ற தொடர் சம்பவங்களின் சிறப்பு பகுப்பாய்வு அதன் நூற்றுக்கணக்கான பக்கங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் கவனமாகச் செயல்பட வேண்டும். இதுபோன்ற சூழல் முதன் முதலாக 1971ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.


இதன் போது, பொலீசாரிடம் இருந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வங்கிக் கொள்ளைகள் நடந்தன. மக்களின் பணம் பலவந்தமாகப் பறிக்கப்பட்டது. வரலாற்றில் முதல்முறையாக, ஒரு கிளர்ச்சிக்கான ஒத்திகையை நடத்தியதன் மூலம், நமது சமூகம் இதுபோன்ற ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது.


இதன் விளைவாக, அவர்கள் 1987, 1988 மற்றும் 1989 ஆம் ஆண்டுகளில் இலங்கையில் ஆயுதங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூகத்தை மீண்டும் நிறுவுவதற்கு முன்னோடியாக இருந்தனர். இதே நிலைமை வடகிழக்கில் விடுதலைப் புலிகளால் ஆரம்பிக்கப்பட்டதால் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டன.


பல தமிழ் அரசியல் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். தமிழ் அரசியல் கட்சிகளை முற்றிலுமாக அழிக்கவும் அவர்கள் செயல்பட்டனர். தெற்கில், ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் லங்கா சமசமாஜக் கட்சி உள்ளிட்டவற்றின் ஆதரவாளர்களான மக்களின் வாழ்க்கை அரசியல் ரீதியாக தீர்மானிக்கப்பட்டது.


குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் சுமார் 1960 உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக மதிப்பிட்டுள்ளதாக இவ்வறிக்கையின் 3ஆவது அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்களில் ஐ.தே.க.வின் செயலாளர்களான ஹர்ஷ அபேவர்தன மற்றும் நந்தலால் பெர்னாண்டோ ஆகியோருடன் சில பாராளுமன்ற உறுப்பினர்களும் இருந்ததாக ஆணைக்குழு அறிக்கை தெளிவாகக் கூறுகிறது.


அரசியல்வாதிகள் மாத்திரமின்றி பாதுகாப்புபடையினர், புலனாய்வுப்பிரினர் உள்ளிட்ட பல முக்கியஸ்களும் கொல்லப்பட்டனர். இந்த சிந்தனைகள் மீண்டும் தூண்டப்பட்டால் நாட்டில் அமைதியின்மை ஏற்படும் என்பதாலேயே அரசியல் கட்சிகள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன். ஆனால் இவ்விவகாரத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதற்காக இலக்கு வைக்கப்படுகின்றார் என்பது எமக்கு புரியவில்லை.


இவ்வாறான சூழல் ஏற்படுவதை தடுத்து நிறுத்துவது அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் முக்கியமானதாகும். அவ்வாறில்லை எனில் நாடு மீண்டும் பாதாளத்தில் விழும். ஆணைக்குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ள உண்மைகளுக்கமைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீது எந்த குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை. மேலும் அவர் மீதான ஒரே குற்றச்சாட்டு பாதுகாப்பு துறையினருக்கு வீட்டுவசதி வழங்கியமையாகும். அவை வழங்கப்பட்டதற்கான காரணம் இலங்கை முழுவதும் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காகவே தவிர, அவசரகாலச் சட்டம் மற்றும் ஊரடங்குச் சட்டத்தின் கீழ் அரசு நிறுவனங்களையோ அல்லது தனியார் நிறுவனங்களையோ கையகப்படுத்துவதற்காக அல்ல என்பதை நினைவூட்ட விரும்புகிறேன் என்றார்.

No comments

Powered by Blogger.