Header Ads



கணேமுல்ல சஞ்சீவவை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்த, சிறைச்சாலை அதிகாரிக்கு சிக்கல்


கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பூஸா சிறைச்சாலை அதிகாரி ஒருவரை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (17) கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனவல முன்னிலையில் கொழும்பு குற்றவியல் பிரிவினால் ஆஜர்படுத்தப்பட்ட போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 


சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய கொழும்பு குற்றவியல் பிரிவு அதிகாரிகள், சம்பவ தினத்தன்று சந்தேக நபரான கணேமுல்ல சஞ்சீவவை குறித்த சிறைச்சாலை அதிகாரியே நீதிமன்றத்திற்கு அழைத்து வந்ததாகவும் தெரிவித்தனர். 


சந்தேகநபர் கடமை தவறியதன் காரணமாக இந்தக் குற்றம் நடந்ததா என்பதைக் கண்டறிய விசாரணை நடத்தி வருவதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். 


துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச்சென்ற சந்தேக நபரைக் கைது செய்ய சந்தேகநபர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 


சந்தேக நபரின் கையடக்க தொலைபேசி அழைப்புகளின் பதிவை பெற்றுக்கொள்வதற்கு அனுமதி வழங்குமாறும் நீதிமன்றில் பொலிஸார் கோரிக்கை விடுத்தனர். 


இந்தக் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், சந்தேக நபரை 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டது.

No comments

Powered by Blogger.