பலஸ்தீன விவகாரத்தில் அரசாங்கம் மௌனம் காப்பது ஏன்..? ஹக்கீம் கேள்வி
பலஸ்தீன் நாட்டையும் மக்களையும் தொடர்ந்தும் பழிக்கடாவாக்க இடமளிக்க கூடாது. இதற்காக நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து குரல்கொடுக்க வேண்டும். இலங்கையில் இஸ்ரேலியர்களின் செல்வாக்கை நாங்களே தீர்மானிக்க வேண்டும். பாதுகாப்பு அமைச்சர் இதுதொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். வெளிவிவகார அமைச்சர் தொடர்ந்தும் மெளனமாக இருக்காமல் இஸ்ரேல் பலஸ்தீனில் மேற்கொண்டுவரும் அநியாயங்களுக்கு எதிராக கண்டன அறிக்கையை வெளியிட வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கரிஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (21) இரண்டாவது நாளாக இடம் பெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டத்தின் நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
சமாதான பேச்சுவார்தை இருக்கும் நிலையில் இஸ்ரேல் சமூக பொருளாதாரத்தை சிதைக்கும் வகையில் காசாவில் மீண்டும் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக குழந்தைகள், பெண்கள் என 500 பேருக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலக முஸ்லிம்கள் தியாகம், அமைதி, மனித உணர்வுகளை பேணிவரும் புனித ரமழான் மாதமாகும். அதையும் உணராமல் பலஸ்தீன் மக்கள் நோன்பு நோற்பதற்கு சாப்பிடடுக்கொண்ருக்கும்போதே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கையால், பலஸ்தீன் மக்களுக்கான உணவு தடுக்கப்பட்டுள்ளது. மருந்து பொருட்கள் இல்லை. மருத்துவ சேவைகளை மேற்கொள்ள முடியாமல் தடைப்பட்டுள்ளன. தொடர்ச்சியாக குண்டுகளை போட்டு வைத்தியர்கள், தாதியர்களை கொன்று வருகிறார்கள். கடந்த 15 வாரங்களாக அங்கு சமாதான நடவடிக்கைகளே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவர்களின் தாக்குதலில் பிரதான இலக்காக இருப்பது பெண்களும் குழந்தைகளுமாகவே இருக்கின்றன. இந்த இனத்தை முற்றாக அழிப்பதே இவர்களின் நோக்கம். அங்கு பாடசாலைகள் வைத்தியசாலைகள் என அனைத்தும் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன.மக்களுக்கான அடிப்படை வசதிகளே அங்கு இல்லை.
இஸ்ரேல் சர்வதேச சட்டத்தை மீறியுள்ளது. சவூதி அரேபியா உள்ளிட்ட பல நாடுகள் உடனடியாக அங்கு சமாதான பேச்சுவார்த்தை ஆரம்பிக்குமாறு தெரிவித்துள்ளன. இந்த இரண்டு நாடுகளும் உடனடியாக இதற்கு தீர்வுகாண வேண்டும் என தெரிவித்துள்ளன. அதேநேரம் இஸ்ரேலின் இந்த தாக்குதல் போர் குற்றம் என சர்வதேச நாடுகள் பல தெரிவித்துள்ளன.
ஐக்கிய நாடுகள் தொடர்ந்து இஸ்ரேலுக்கே ஆதரவளித்து வருகிறது. ஜனாதிபதி ட்ரம் 18 பில்லியன் டொலர்கள் பெறுமதியான இராணுவ உதவிகளை வழங்கியுள்ளது. இது மனிதாபிமானத்துக்கு எதிரானதாகும். அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு அரபு நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
பலஸ்தீன் பூமியை சுவீகரிப்பதே அவர்களின் நோக்கம்.அதேநேரம் காசாவில் இருக்கும் யாரையும் வெளியேற்ற வேண்டாம் என ஜனாதிபதி ட்ரம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். ஆனால் இஸ்ரேலுக்கான அனைத்து உதவிகளும் அமெரிக்காவில் இருந்தே வந்து கொண்டிருக்கின்றன. அதில் எந்த சந்தேகமும் இல்லை. காசாவில் இடம்பெறும் விமானத்தாக்குதல்களுக்கு அமெரிக்காவே உதவி வருகிறது.
மேலும் இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்வகையில் சிலி, கொலம்பியா போன்ற நாடுகள் தங்களின் தூதுவர்களை இஸ்ரேலில் இருந்து மீள அழைத்து இருக்கின்றன. இது ஒரு இனப்படுகொலை என கூறுகின்றன.பல ஆசிய, ஆபிரிக்க நாடுகள் இஸ்ரேலின் இந்த நடவடிக்கையை வன்மையாக கண்டித்திருக்கின்றன. சர்வதேச நீதிமன்றம் இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருக்கின்றன.
இந்த இனப்படுகொலையை நிறுத்துமாறு ஐ.சி.சி. தெரிவித்துள்ளது. எமது அண்மை நாடான இந்தியாவும் இதற்கு எதிராக குரல் எழுப்பி இருக்கிறது. அதேபோன்று சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சரும் இந்த பிரச்சினையை இரண்டு நாடுகளும் பேச்சுவாரத்தை மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்திருக்கி்றார்.
சர்வதேச சட்டங்களை மீறி செயற்படுகின்ற விடயங்களுக்கு எதிராக தண்டனை வழங்கப்பட வேண்டும்.சிவிலியன்கள் பொது மக்கள் கொல்லப்படுகின்றனர். புதுமாத்தளன், முள்ளிவாய்க்காலில் இவ்வாறான நிலைமைதான் இடம்பெற்றது. அப்போது சர்வதேச சமூகமே கிளர்ந்தெழுந்தது. எமது புலம்பெயர்ந்து வாழும் மக்களும் இதற்கு கண்டனம் தெரிவித்து வந்துள்ளார்கள். அதனால் பலஸ்தனில் இடம்பெறும் தாக்குதலுக்கு எதிராகவும் குரல்கொடுக்க வேண்டும். இஸ்ரேலின் இந்த நடவடிக்கை மனித உரிமை மீறலுக்கு எதிரான நேரடி வன்முறை என ஐ.சி.சி தெரிவித்துள்ளது. நெதன்யாஹுவை கைதுசெய்வதற்கு பிடியாணை விதித்துள்ளது.
எனவே காசாவில் இடம்பெறும் சம்பவங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இில் இலங்கையும் இணைந்துகொள்ள வேண்டும்.அங்கு சமாதான பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட வேண்டும். மனிதாபிமான நடவடிக்கைகள் இடம்பெற வேண்டும். எமது நாடும் இதற்காக ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பலஸ்தீனில் இடம்பெற்றுவரும் அநீதிக்கு எதிராக அரசாங்கம் குரல்கொடுக்க வேண்டும்.சர்வதேச சமூகத்தில் எமது குரலையும் எழுப்ப வேண்டும்.இஸ்ரேலுக்கு எதிராக பொருளாதார தடைகளை ஏற்படுத்த வேண்டும்.
பலஸ்தீன் நாட்டையும் மக்களையும் தொடர்ந்தும் பழிக்டாவாக்க இடமளிக்க கூடாது. இதற்காக நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து குரல்கொடுக்க வேண்டும். எமது வெளிநாட்டு அமைச்சர் இதற்கு எதிராக குரல்கொடுக்க வேண்டும். இலங்கையில் இஸ்ரேலியர்களின் செல்வாக்கை நாங்களே தீர்மானிக்க வேண்டும். பாதுகாப்பு அமைச்சர் இதுதொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். வெளிவிவகார அமைச்சர் தாெடர்ந்தும் மெளனமாக இருக்காமல் இஸ்ரேல் பலஸ்தீனில் மேற்கொண்டுவரும் அநியாயங்களுக்கு கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும் என்றார்.
(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
Post a Comment