Header Ads



நிலத்தையும், பணத்தையும் கொள்ளையிட்ட அரசியல்வாதிகளின் விபரங்கள் பாராளுமன்றத்தில் தெரிவிப்பு


பல்வேறு பயிர்ச் செய்கைத் திட்டங்கள் என்ற போர்வையில் அரசியல்வாதிகள், அவர்களது உறவினர்கள் மற்றும் அதிகாரிகளுக்குக் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தையும் அரசாங்க காணிகளையும் பெற்று, எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தாமல் தனிப்பட்ட பயன்பாட்டிற்குப் பயன்படுத்தியுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். 


இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். 


குருநாகல் பெருந்தோட்ட நிறுவனத்திடமிருந்து 76 ஏக்கர் காணியை முன்னாள் அமைச்சர் சாலிந்த திசாநாயக்க தனிப்பட்ட முறையில் நிறுவிய நிறுவனத்திற்கு கையகப்படுத்தியுள்ளார். 


முன்னாள் அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவின் நண்பர் ஒருவருக்கு குருநாகல் பெருந்தோட்ட நிறுவனத்திற்குச் சொந்தமான 21 ஏக்கர் வளமிக்க காணியைத் தரிசு நிலம் எனக் கூறி வழங்கியுள்ளதாகவும், அதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கையெழுத்திட்டுள்ளதாகவும் கூறினார். 


முன்னாள் கைத்தொழில் அமைச்சர் தயாகமகேவின் மனைவி அனோமா கமகே, விவசாயத் திட்டத்திற்காக எனக் கூறி 140 மில்லியன் ரூபாயைப் பெற்றுள்ளதாகவும், ஆனால் அந்த நிதியைக் கொண்டு எந்தத் திட்டமும் செயல்படுத்தப்படவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார். 


பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சின் செலவினத் தலைப்பு மீதான குழுநிலை விவாதத்தின் போது அமைச்சர் இதனைத் தெரிவித்தார். 


முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவுக்கு பயிர்ச்செய்கை திட்டத்தை மேற்கொள்வதற்காக 180 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டதாக சமந்த வித்யாரத்ன தெரிவித்தார். 


மேலும் முன்னாள் அமைச்சின் செயலாளர் பந்துல விக்ரமாராச்சியின் மகனுக்கு பயிர்ச்செய்கை திட்டத்திற்காக 82 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டதாகவும் அமைச்சர் இதன் போது குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.