கை விலங்குடன் தேசபந்து, 9 குற்றச்சாட்டுக்கள், இன்று நீதிமன்றத்திற்குள்ளே நடந்தவையின் விபரம்
அதன்படி, பாதுகாப்பு காரணங்களுக்காக சந்தேக நபரை தும்பர சிறைச்சாலையில் தடுத்து வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 2023 டிசம்பர் 31ஆம் திகதி மாத்தறை, வெலிகமவில் பகுதியில் பெலேன பகுதியில் உள்ள W15 ஹோட்டலுக்கு முன்னால் வெலிகம பொலிஸ் நிலைய அதிகாரிகளால், கொழும்பு குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகள் குழு மீது மேற்கொண்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கொழும்பு குற்றவியல் விசாரணைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் மரணமடைந்திருந்தார்.
அதற்கமைய, குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரான தேசபந்து தென்னகோனை இன்று (20) மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதைத் தொடர்ந்து மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கைவிலங்குகளுடன் நீதிமன்ற அறைக்கு அழைத்து வரப்பட்ட தேசபந்து தென்னகோன், வேறு எந்த கைதிகளும் தடுத்து வைக்கப்படாத நீதிமன்ற சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
பின்னர் மாத்தறை நீதவான் அருண புத்ததாச 12 பக்க பிணை உத்தரவை அறிவித்தார்.
தேசபந்து தென்னகோன் மீதான குற்றச்சாட்டுகள் கீழ்வருமாறு,
“மாத்தறையில் உள்ள W15 ஹோட்டலில் துப்பாக்கியால் சுட்டு குழப்பத்தை ஏற்படுத்தியதற்காக, பொலிஸ் பிரிவின் பிரதானி என்ற வகையில் 8 பொலிஸ் அதிகாரிகளை சட்டவிரோதமாக பயன்படுத்தி தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றத்தைச் செய்தல்.”
“உத்தியோகபூர்வ கடமையைத் தவிர வேறு தனிப்பட்ட தேவைகளுக்காக அச்சுறுத்தும் செயற்பாட்டிற்காக பொலிஸ் அதிகாரிகள் குழுவுடன் சதி செய்தல் மற்றும் பொய்யான ஆதாரங்களை உருவாக்குதல் உள்ளிட்ட 9 குற்றச்சாட்டுகள்.”
“இந்த வழக்கு தொடர்பான ஒரு முக்கியமான விசாரணை செயல்முறை எதிர்காலத்தில் நடத்தப்பட உள்ளதாலும், சந்தேக நபர் நீதிமன்ற உத்தரவை பின்பற்றத் தவறியதன் காரணமாக விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாததாலும், சந்தேக நபருக்கான பிணை மனுவை நிராகரிப்பதாக நீதவான் உத்தரவிட்டார்.”
எதிர்கால விசாரணை நடவடிக்கைகள் தொடர்பாகவும் பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.
மாத்தறை நீதவான் அருண புத்ததாச,
“இந்த சந்தேக நபர் சிறையில் இருக்கும் போதும், அவரைக் கொண்டு செல்லும் போதும் அவரது பாதுகாப்பில் விசேட கவனம் செலுத்துமாறு மாத்தறை சிறைச்சாலை கண்காணிப்பாளருக்கு நான் உத்தரவிடுகிறேன்.”
“சந்தேக நபர் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்.”
“சந்தேக நபர் ஒளிந்து கொள்ள உதவியவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு, உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக நீதிமன்றத்திற்கு சமர்ப்பணங்களை முன்வைக்க வேண்டும்.”
நீதவானின் உத்தரவைத் தொடர்ந்து, அரச தரப்பு சார்பாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸும் நீதிமன்றத்திடம் பல உத்தரவுகளைக் கோரினார்.
“சந்தேக நபரான தேசபந்து தென்னகோன் தடுப்புக் காவலில் இருக்கும் போது, அவரிடமிருந்து வாக்குமூலங்களைப் பெற விசாரணை அதிகாரிகளுக்கு அனுமதி கோருகிறேன்.”
“சந்தேக நபரின் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு தொலைபேசிகளையும், அவர் 20 நாட்கள் தலைமறைவாக இருந்தபோது பயன்படுத்திய தொலைபேசியையும் விசாரணைக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்க உத்தரவிடுமாறு நீதிமன்றத்தை கேட்டுக்கொள்கிறேன்.”
கோரிக்கைகளை நீதவான் ஏற்றுக்கொண்ட நிலையில், பின்னர் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் ஒரு சுருக்கமான உரையை நிகழ்த்தினார்.
“இந்த வழக்கில் நான் இந்த பிரதான சந்தேக நபருடன் மட்டுமே தொடர்பில் உள்ளேன். நான் உங்களிடம் ஒன்றைக் கோருகிறேன்... இந்த வழக்கு தொடர்பான விசாரணைகளை விரைவாக முடிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் கூறுங்கள். இல்லையெனில், இதுபோன்ற வழக்குகளை தாமதப்படுத்துவதன் மூலம் நீதி எப்போதும் திசைதிருப்பப்படுகிறது. சிலர் இதற்காக காத்திருக்கிறார்கள். இந்த வழக்கில் உள்ள மற்ற 6 சந்தேக நபர்களும் நாளை நீதிமன்றத்தில் சரணடைவதாக மனு மூலம் தெரிவித்துள்ளனர். அப்போது இந்த சம்பவத்தில் நீங்கள் குறிப்பிட்ட சந்தேக நபர்கள் முழுமையடைவார்கள். ஆனால் இந்த நேரத்தில் நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். இந்த பிரதான சந்தேக நபரான தேசபந்துவின் சம்பவத்துடன் வேறு எந்த அரசியல்வாதியோ அல்லது அதிகாரியோ தொடர்புபட்டிருந்தால், அவர்கள் உடனடியாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு கைது செய்யப்பட வேண்டும். அப்போதுதான் நீதி நிலைநாட்டப்படும். இன்று நீதிமன்ற அறையில் கூடியிருக்கும் ASP மற்றும் DIGக்கள் போன்ற அதிகாரிகள் ஊடகங்கள் முன் தோன்றுவதற்குப் பதிலாக நீதிக்காக பாடுபட வேண்டும் என்று நான் கூற விரும்புகிறேன்.”
Post a Comment