Header Ads



15 வயதுடைய பேத்தியின் அதிரவைக்கும் வாக்குமூலம் - 2 பெண்களை கொன்றது ஏன்..? (படங்கள்)


- அப்துல்சலாம் யாசீம் -


திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாஹா நகர் பகுதியில் 2 பெண்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இரு பெண்களை வெட்டிக் கொலை தொடர்பில் 15 வயதான சிறுமி குறித்த கொலையைச் செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார்.


அதன்படி திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாஹா நகர் பகுதியில் இரு பெண்களை வெட்டிக் கொலை செய்த குற்றச்சாட்டில் பேத்தியான 15 வயது சிறுமியை பொலிஸார் கைது செய்திருந்தனர்.


மூதூர் – தாஹா நகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து நேற்றுமுன்தினம் (14) அதிகாலை சகோதரிகளான பெண்கள் இருவர் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டிருந்தனர்.


சம்பவ இடத்திற்கு மூதூர் நீதிமன்ற நீதிபதி திருமதி. தஸ்னீம் பௌசான், சட்ட வைத்திய அதிகாரி, பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் விஜயம் மேற்கொண்டு விசாரணை மேற்கொண்டிருந்தனர்.


குறித்த சம்பவத்தில் 68 வயதான சிறிதரன் ராஜேஸ்வரி, 74 வயதான சக்திவேல் ராஜகுமாரி ஆகிய இரு பெண்களே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


மூதூர் தாஹா நகர் பகுதியைச் சேர்ந்த குடும்ப நல மருத்துவமாதாக கடமையாற்றிவரும் சிறிதரன் தர்ஷினி என்பவருடைய வீட்டிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் இடம்பெற்ற தினம் அதிகாலை சிறிதரன் தர்ஷினி மூதூர் வைத்தியசாலையில் வியாழக்கிழமை இரவுக் கடமைக்காக சென்றிருந்த நிலையில் குறித்த வீட்டில் 15 வயதான அவரது மகள், தாயாரான சிறிதரன் ராஜேஸ்வரி மற்றும் பெரியம்மாவான சக்திவேல் ராஜகுமாரி ஆகியோர் மாத்திரம் வீட்டில் இருந்துள்ளனர்.


இந்நிலையில் அதிகாலை வேளை குறித்த கொலை இடம்பெற்றுள்ளதாகவும் குறித்த படுகொலைச் சம்பவத்தின்போது கூரிய ஆயுதங்களைக் கொண்டு தாக்கியதில் இருவருடைய கழுத்துப் பகுதிகளில் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டு இருவரும் உயிரிழந்த நிலையில் 15 வயதான மகள் சிறு காயங்களுடன் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.


இதன்போது குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் குறித்த சிறுமியிடம் பொலிஸார் மேற்கொண்ட நீண்ட நேர விசாரணையின் பின்னர் குறித்த சிறுமி தானே கொலையைச் செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார்.


அம்மம்மா தன்னைத் திட்டுவதாகவும், தன்னில் பாசம் காட்டுவதில்லை எனவும் மன அழுத்தம் காரணமாக இருவரையும் கொலை செய்ததாகவும் பொலிஸாரிடம் ஒப்புக் கொண்டுள்ளார்.


இதன் பின்னர் குறித்த சிறுமி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு மூதூர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் திருகோணமலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.


உயிரிழந்தவர்களின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




No comments

Powered by Blogger.