அசாத் மெளலான வருவாரா..? கோட்டா கைது செய்யப்படுவாரா..??
- எப்.அய்னா -
வெளிநாடொன்றில் அகதி அந்தஸ்து கோரி தங்கியிருப்பதாக கூறப்படும், மொஹம்மது மிஹ்ளார் மொஹம்மது ஹன்சீர் அல்லது அசாத் மெளலானா இலங்கைக்கு மீள வரப்போவதாகவும், அவர் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்து சாட்சியம் அளிக்கப் போவதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவ்வாறான பின்னணியில் ஊடக சந்திப்பொன்றினை நடாத்திய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் சுரேஷ் சலே ஆகியோரை கைது செய்வதற்காக அசாத் மெளலானவை அழைத்து வர முயற்சிகள் இடம்பெறுவதாக தெரிவித்திருந்தார்.
அசாத் மெளலானாவுக்கு எதிராக கல்முனை நீதிவான் நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளதாகவும், ஐரோப்பிய நாடொன்றின் தூதரகத்துடன் பேச்சுக்கள் இடம்பெறுவதாகவும் கம்மன்பிலவின் கூற்றை தொடர்ந்து செய்திகள் வைரலாகின.
எனினும், செனல் 4 தொலைக்காட்சியில் அசாத் மெளலானா வெளிப்படுத்திய விடயங்கள் குறித்த விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்த விசாரணைகளில், பிள்ளையான் எனப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தனிடம் பல மணிநேர வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அது குறித்த மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.
அவ்வாறாயினும் செனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆவணப்படத்தில் அசாத் மெளலானா குறிப்பிட்ட உயிர்த்த ஞாயிறு தின சதி விவகாரம் தொடர்பில் பிள்ளையானிடம் போதுமான விசாரணைகள் இதுவரை இடம்பெறவில்லை என்பதை சி.ஐ.டி. தகவல்கள் அவற்றை வெளிப்படுத்துகின்றன.
காரணம், அந்த விடயங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க அசாத் மெளலானாவின் வாக்குமூலம் ஒன்று அவசியமாகின்றதாம். எனினும் வேறு சில சாட்சியங்களை முன்னிறுத்தியும் விசாரணைகளை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்தி, உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களின் சூத்திரதாரியை கண்டறிய விசாரணைகள் இடம்பெறுவதாக விசாரணையாளர்கள் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
உண்மையில் அசாத் மெளலானா, பிள்ளையானின் ஊடக செயலாளராக அவரது கட்சியின் முக்கியஸ்தராக இருந்தவர். இக்காலப்பகுதியிலேயே உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சதி இடம்பெற்றதாக அவரால் கூறப்படுகின்றது.
பின்னர், அசாத் மெளலானா தஞ்சம் கோரி வெளிநாடு சென்ற பின்னர், அவரது மனைவியரில் ஒருவர் எனக் கூறப்படும் பாத்திமா ஜெஸ்லி பெனாஷிர் செய்த முறைப்பாடொன்றுக்கு அமைய, வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டு, இப்போது அது நீக்கப்பட்டுள்ளதாக கம்மன்பிலவினால் கூறப்படுகின்றது.
உண்மையில் பீ /811/2023 எனும் கல்முனை நீதிவான் நீதிமன்றில் உள்ள வழக்குக்கு அமையவே வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டு, இப்போது அது நீக்கப்பட்டுள்ளது.
எனினும் அதன் பின்னணி வித்தியாசமானது.
அசாத் மெளலானாவுக்கு எதிராக அவரது மனைவி பொலிஸ் முறைப்பாடொன்றை செய்தது, அனுரகுமார திசாநாயக்க அரசின் கீழ் அல்ல. கடந்த 2022 ஜனவரி 30, பெப்ரவரி 22 ஆம் திகதிகளில் இரு முறைப்பாடுகள் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அது அசாத் மெளலானா கைவிட்டு சென்றமை, மஹராக மறுக்கப்பட்ட காசோலை வழங்கியமை போன்ற விடயங்களை மையப்படுத்தியதாகும்.
இந்த முறைப்பாடுகள் குறித்து உரிய விசாரணைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை. காரணம், அப்போது ஆட்சியில் இருந்த கோட்டா அரசாங்கத்தோடு அசாத் மெளலானாவுக்கு இருந்த தொடர்புகளாகும்.
அதன் பின்னர் 2022 மார்ச் 2 ஆம் திகதி குறித்த பெண், உதவி பொலிஸ் அத்தியட்சருக்கும் மே 18 ஆம் திகதி அம்பாறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருக்கும் முறைப்பாடு செய்து எதுவும் நடக்காத நிலையிலேயே, செனல் 4 தொலைக்காட்சியில் அசாத் மெளலானாவின் ஆவணப்படம் வெளியானது.
இதனைத்தொடர்ந்து, அந்த படத்தில் தோன்றியவர் அசாத் மெளலானா என அவரது மனைவி என கூறும் பெண் அம்பாறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருக்கு சென்று தெரிவித்த பின்னரேயே, அம்பாறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரின் ஆலோசனைப் பிரகாரம் கடந்த 2023 செப்டம்பர் 11 ஆம் திகதி அசாத் மெளலானா மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு உடன் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு, கல்முனை நீதிவான் நீதிமன்றுக்கு அறிக்கையிடப்பட்டுள்ளது. அவ்வழக்கிலேயே வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த விடயங்களை ஆராயும் போது, அசாத் மெளலானா பிள்ளையானுடன் இணக்கத்தில் இருந்த போது அவர் பொலிசாரிடம் இருந்து காப்பாற்றப்பட்டுள்ள நிலையில், செனல் 4 காணொளியின் பின்னர் அவரை கைது செய்ய பொலிஸார் யாரோ ஒருவரின் தேவைக்காக முயற்சித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இவ்வாறான நிலையில், செனல் 4 காணொளி தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், அசாத் மெளலானா வரவழைக்கப்பட்டு வாக்கு மூலம் பெறப்படலாம் என்பதால், அந்த நடவடிக்கைகளை தடுக்கும் முயற்சியாகவே கம்மன்பில போன்றவர்கள் தேவையற்ற விடயங்களை, உண்மைகளை மறைத்து பேசுவதாக தோன்றுகின்றது.
உண்மையில் அசாத் மெளலானா கடந்த 2022 ஜனவரி மாதம் நாட்டை விட்டு வெளியேறியதாகவே தகவல்கள் உள்ளன. அப்படியாயின் அவர் ஐரோப்பிய நாடொன்றில் அகதி அந்தஸ்த்து கோரியுள்ள பின்னணியில், அவர் மீள நாட்டுக்கு திரும்புவார் என எதிர்ப்பார்ப்பது கடினமாகும்.
எவ்வாறாயினும் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் உளவுத்துறை பணிப்பாளர் சுரேஷ் சலே மற்றும் முன்னாள் ஜனாதிபதி கோத்தாபயவை கைது செய்ய அல்லது அவர்களின் வகிபாகம் குறித்து விரிவான விசாரணைகள் தொடர வேண்டும்.- Vidivelli
Post a Comment