Header Ads



பணயக்கைதியாக மாறியுள்ள ஜனாதிபதி - சஜித்


இன்று முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட உரையையும், முன்னர் ஜனாதிபதித் தேர்தல் மேடைகளில் முன்வைக்கப்பட்ட வளமான நாடு அழகான வாழ்க்கை என்ற தேர்தல் விஞ்ஞாபனத்தையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இந்த வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி அவர்கள் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வழங்கிய வாக்குறுதிகள் எந்தளவுக்கு நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதை நாம் ஆராய வேண்டும். நாடு அநுரவிற்கு என்று அதிகாரத்தை வழங்கினாலும், நாடு IMF க்கு வளங்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் வரம்புகளுக்குட்பட்டு வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். 


வரவு செலவுத் திட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.


இந்த வரவுசெலவுத் திட்டத்தில் வறுமையை ஒழிக்கும் வேலைத்திட்டமோ, நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாண்மையாளர்களின் கடன் பொறிக்கோ தீர்வுகள் இல்லை. விவசாயம், கடற்றொழில் துறை, தோட்ட கைத்தொழில் துறையினர் தொடர்பில் வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.


புதிய கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைக்கு செல்வதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தேர்தல் மேடையில் கூறியிருந்த போதும், அவர் நேரடியாகவே சர்வதேச நாணய நிதியத்தின் அடிச்சுவடுகளை பின்பற்றி வருகின்றார். ஆட்சிக்கு வந்ததும் IMF உடன்படிக்கையில் திருத்தங்களை மேற்கொள்வதாக கூறினாலும், அதற்கு மாற்றமாகவே ஜனாதிபதி இந்த வரவுசெலவுத் திட்டத்தை முன்வைத்துள்ளார். இந்த வரவு செலவுத் திட்டத்தில் திருத்தங்களை கொண்டு வருமாறு எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.


தற்போதைய ஜனாதிபதி மக்கள் ஆணையை புறக்கணித்து சர்வதேச நாணய நிதியத்தின் பணயக்கைதியாக மாறியுள்ளார். இந்த வரவு செலவுத் திட்ட உரையையும், தேர்தல் விஞ்ஞாபனத்தையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அரச சேவையில் ஒவ்வொரு 6 மாதத்திற்கு ஒரு தடவையும் சம்பள உயர்வு வழங்கப்படும் என்றனர், ஆனால் இறுதியில் 3 வருடங்களில் சொற்ப தொகையே சம்பளம் உயர்த்தப்படுகின்றது. இன்றைய வாழ்க்கைச் செலவுக்கு இது போதாது. தனியார் துறையினருக்கு மாற்றாந்தாய் கவனிப்பு வழங்கப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

No comments

Powered by Blogger.