நவீன மருத்துவத்தில், சிகிச்சை முறையாகும் நோன்பு
Dr. MSM. நுஸைர் MBBS, MD (medicine)
நோன்பு (Fasting) என்பது இன்றைய உலகில் ஒரு முக்கியமான தலைப்பாக மாறியுள்ளது. உலகின் மதச்சார்பற்ற தன்மை மிக வேகமாக மக்கள் மத்தியில் பரவி வருகின்ற வேளையிலேயே நோன்பு என்பது எல்லோரிடத்திலும் ஒரு பெரும் வரவேற்பு பெற்ற ஒன்றாக தற்பொழுது மாறி வருகின்றது. மேற்கத்தைய நாடுகளிலேயே நோன்பு இருப்பது ஒரு சிகிச்சை முறையாக இப்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றது. உடல் எடையை குறைப்பதற்கு, உடலில் உள்ள மேலதிக கொழுப்புகளை அகற்றுவதற்கு, உடலின் ஆரோக்கியத்தை பேணுவதற்கு மற்றும் மன அழுத்தத்தை குறைப்பதற்கு என்று பல்வேறு நோய்களுக்கும் இந்த நோன்பிருத்தல் ஒரு சிகிச்சை முறையாக இப்போது பரிந்துரைக்கப்படுகிறது. இஸ்லாம் ரமலான் மாதத்தில் நோன்பு பிடிப்பதை கடமையாக்கி, இறையச்சத்தை (தக்வாவை) அதிகரிப்பதையே அதன் பிரதான இலக்காக குறிப்பிடுகிறது. இருப்பினும் இறையச்சத்தை அதிகரிப்பதற்கப்பால் நோன்பு நோற்பது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கும் பல நன்மைகளை அளிக்கிறது என்பதனை ஏற்கனவே பல ஆய்வுகள் உறுதி செய்துள்ள போதும் சமீபத்திய ஆராய்ச்சிகள் நோன்பின் அறிவியல் நன்மைகளை மேலும் உறுதிப்படுத்தியுள்ளன.
நோன்பு இருத்தல் பல நோய்களுக்கு சிகிச்சை முறையாக நவீன மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. முதலில், நோன்பு இருத்தல் டயாபிடீஸ் நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நோன்பு இருக்கும் போது உடலில் இன்சுலின் உணர்திறன் அதிகரிக்கிறது, இது இரத்த சீனியின் அளவை சீராக்க உதவுகிறது. இரண்டாவதாக, நோன்பு இருத்தல் இதய நோய்களின் அபாயத்தை குறைக்கிறது. நோன்பு இருத்தல் கொழுப்பு அளவை குறைத்து, இரத்த அழுத்தத்தை சீராக்கி, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மூன்றாவதாக, நோன்பு இருத்தல் புற்றுநோய் நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நோன்பு இருக்கும் போது உடலில் ஓட்டோபேஜி (Autophagy) செயல்முறை ஏற்படுகிறது, இது புற்றுநோய் செல்களை அகற்ற உதவுகிறது.
அதிக எடை குறைப்பில் நோன்பின் பங்கு
அதிக எடை என்பது இன்றைய உலகில் ஒரு பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. நோன்பு இருத்தல் அதிக எடையை குறைக்க உதவுகிறது. நோன்பு இருக்கும் போது உடலில் சேமிக்கப்பட்ட கொழுப்பு எரிந்து சக்தியாக மாற்றப்படுகிறது. இது உடல் எடையை குறைக்கும் செயல்முறையை துரிதப்படுத்துகிறது. மேலும், நோன்பு இருத்தல் பசி உணர்வை கட்டுப்படுத்த உதவுகிறது. இது அதிகப்படியான உணவு உட்கொள்ளலை தடுக்கிறது. நோன்பு இருத்தல் மனிதர்களுக்கு ஒரு சீரான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கிறது.
ஈரல் கொழுப்பு (Fatty liver)நோய்க்கு நோன்பு
ஒரே சிகிச்சை முறை
இன்று எம்மில் அதிகமானவர்கள் ஈரலில் கொழுப்பு படியும் ஈரல் கொழுப்பு நோயினால் (Fatty Liver Disease) பாதிக்கப்பட்டுள்ளனர். fatty liver என்பது இன்றைய உலகில் ஒரு பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. ஈரல் கொழுப்பு நோய் என்பது ஒரு கடுமையான நோயாகும், இது சரியாக சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் ஈரல் செயலிழப்பு அல்லது ஈரல் புற்றுநோய்க்கு வழிவகுக்கும். நோன்பு இருத்தல் ஈரல் கொழுப்பு நோயை குணப்படுத்த அல்லது கட்டுப்படுத்த ஒரு சக்திவாய்ந்த முறையாக வைத்தியர்களால் பரிந்துரைக்கப் படுகிறது. நோன்பு ஈரலில் உள்ள கொழுப்பை குறைக்கிறது, இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது, உடல் எடையை குறைக்கிறது. ஈரல் கொழுப்பு நோயை தடுக்க எந்த மருந்துகளும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், ஆரோக்கியமான உணவு முறை, வழக்கமான உடற்பயிற்சி மற்றும் நோன்பு இருத்தல் போன்ற முறைகளே சிகிச்சையாக பரிந்துரைக்கப்படுகின்றன.
நோன்பு உடலின் செல்கள் மற்றும் திசுக்களை புதுப்பித்து, கலங்கள் வயதாக்கத்தை (Cellular Aging) தடுக்க உதவும் ஒரு சக்திவாய்ந்த செயல்முறையாகும். கலங்களின் வயதாக்கம் என்பது உடலின் செல்கள் காலப்போக்கில் அவற்றின் செயல்பாட்டை இழப்பதைக் குறிக்கிறது, இது முதுமை மற்றும் பல்வேறு நோய்களுக்கு காரணமாகிறது.
நோன்பு இருத்தல் இந்த செயல்முறையை மெதுவாக்கி, செல்களை புதுப்பிக்கும் மற்றும் ஆரோக்கியமாக வைத்திருக்கும் பல்வேறு உடலியல் மாற்றங்களை ஏற்படுத்துகிறது.
அதாவது நோன்பு இருக்கும் போது உடலில் ஓட்டோபேஜி எனப்படும் ஒரு முக்கியமான கலச் செயல்முறை ஏற்படுகிறது. ஓட்டோபேஜி என்பது உடலில் உள்ள பழைய, சேதமடைந்த அல்லது செயலிழந்த புரதங்கள் மற்றும் செல்களை அகற்றி, புதிய மற்றும் ஆரோக்கியமான செல்களை உருவாக்கும் ஒரு செயல்முறை ஆகும். இந்த செயல்முறை செல்களை புதுப்பித்து, அவற்றின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. இது கல வயதாக்கத்தை மெதுவாக்கி, முதுமையை தாமதப்படுத்துகிறது. (முதுமை என்பது வயது மாத்திரமல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்)
2016 ஆம் ஆண்டில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த (நோபல் பரிசு பெற்ற) யோஷினோரி ஓசுமி என்பவர் ஓட்டோபேஜி செயல்முறையை கண்டுபிடித்தார். இந்த ஆராய்ச்சி நோன்பு இருத்தல் ஓட்டோபேஜியை ஊக்குவிக்கிறது என்பதை உறுதிப்படுத்தியது.
அதே போன்று உடலில் ஏற்படும் ஒக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை குறைப்பதிலும் நோன்பு பெரும் பங்கு வகிக்கிறது. (Reducing Oxidative Stress). ஒக்ஸிடேட்டிவ் அழுத்தம் (Oxidative Stress) என்பது உடலில் உள்ள மேலதிக வேதிப்பொருட்கள் (Free Radicals) மற்றும் ஆக்ஸிஜன் மூலக்கூறுகளின் சமநிலை குலைவதால் ஏற்படும் ஒரு நிலை ஆகும். இது செல்களுக்கு சேதம் விளைவித்து, கலங்களின் வயதாக்கத்தை துரிதப்படுத்துகிறது. நோன்பு இருத்தல் உடலில் உள்ள ஒக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை குறைக்கிறது. இது செல்களை பாதுகாக்கிறது மற்றும் அவற்றின் ஆயுளை நீட்டிக்கிறது.
2020 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சியில், நோன்பு இருத்தல் உடலில் உள்ள அன்டிஆக்ஸிடன்ட் (நச்சு வேதிப் பொருட்களை அழிப்பவை) அளவை அதிகரிக்கிறது என்பது கண்டறியப்பட்டது. இது செல்களை பாதுகாக்கிறது மற்றும் முதுமையை தாமதப்படுத்துகிறது.
நோன்பு நோற்பது எமது நிறமூர்த்தங்களில் கூட மாற்றங்களை ஏற்படுத்துகிறது. அதாவது எமது நிறமூர்த்தங்களில் முனைகளில் டெலோமியர்கள் (Telomeres) எனப்படும் மூடிகள் காணப்படுகின்றன, அவை செல்களின் பிரிவை கட்டுப்படுத்துகின்றன. இவற்றை சீராக்கி அவற்றின் நீளத்தை பாதுகாக்கும் பணியையும், உடலில் உள்ள DNA பழுதுபார்ப்பு செயல்முறையை ஊக்குவித்து DNA சேதத்தை சரிசெய்வதனால் புற்று நோய் போன்ற பல நோய்களை இருந்தும் கலங்கள் வயதாவதிலிருந்தும் பாதுகாக்கின்றது.
இவ்வாறான மருத்துவ பலன்களை பெற்றுக்கொள்வதற்கு நாம் நோன்பு நோற்கும் போது சில விடயங்களை கருத்திற் கொள்ள வேண்டும். மிகக் குறிப்பாக எமது உணவுகளை மிகச் சீராக அமைத்துக் கொள்ள வேண்டும். நோன்பு நோற்கின்ற போது ஸஹர் நேரத்தில் அதிகமான காபோவைதரேட்டுக்கள் – மாச்சத்து உணவுகளை எடுத்துக் கொள்ளக் கூடாது. இது மிக வேகமாக உடலில் இன்சுலினை சுரக்கச்செய்து மிக விரைவாகவே பசி உணர்வை தூண்டிவிடும். மாறாக புரத உணவுகள், பழங்கள், மரக்கறி வகைகள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளுதல், பால் அருந்துதல் என்பன ஆரோக்கியமான உணவுகளாக அமையும். ஸஹர் நேரத்தில் உணவருந்தி விட்டு தேநீர் அல்லது கோப்பி அருந்துவது உங்களின் சிறுநீர் சுரப்பை அதிகரித்து மிக வேகமாக தாகத்தை ஏற்படுத்தும். எனவே நோன்பு நோற்கும் போது தேயிலை அல்லது கோப்பி என்பவற்றைத் தவிர்த்து பால் அருந்துவது சிறந்தது. நோன்பு திறக்கின்ற போது பொதுவாக கஞ்சி அருந்துவது எமது வழக்கமாக இருக்கின்றது. இது மிக மிக ஆரோக்கியமான ஒரு உணவாகும்.
மிக நீண்ட நேரமாக உண்ணாமல், பருகாமல் இருந்த உடலுக்கு இந்த கஞ்சி போதுமான நீர்ச்சத்து, ஊட்டச்சத்துக்களை வழங்குவதோடு எமது உடலில் இருந்து இழக்கப்பட்ட கனியுப்புகளையும் மீள் நிரப்புவதற்கு உதவுகின்றது. கஞ்சி மிக இலகுவில் சமிபாடடையக்கூடியதாக இருப்பதால் நீண்ட நேரமாக ஓய்வில் இருந்த குடல்களுக்கு இது மிருதுவானதாக இருக்கும். கனமான உணவுகளை உண்ணுவது ஆபத்தானதாக அமையும். அதேபோன்று நோன்பு திறக்கின்ற போது அதிக எண்ணெய் கொழுப்பு உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளக் கூடாது. குறிப்பாக பொரித்த உணவுகளை தவிர்ந்து கொள்வது மிக மிக சிறந்தது. அதேபோன்று சிலர் குளிர்பானம் அருந்துகின்ற பழக்கத்தை உள்ளவர்களாக இருக்கின்றனர். நோன்பு திறக்கின்ற போது சோடா வகையான பானங்களை அருந்துவது மிக ஆபத்தானது. மிக நீண்ட நேரமாக நீர் பற்றாக்குறையிலிருந்த சிறுநீரகங்களுக்கு மிகச் செறிவான இந்த சோடா பானங்களை வழங்குகின்ற போது சிறுநீரகங்கள் பாதிப்படையக்கூடிய ஆபத்து இருக்கின்றது. காலப்போக்கில் இது சிறுநீரக செயலிழப்பாக கூட மாறலாம். எனவே பானங்கள் அருந்துவதாயின் வீட்டிலே தயாரித்த பழ ரசங்களை அருந்துவது மிகவும் பொருத்தமானது. அதேவேளை இரவு நேரத்தில் அதிகமாக நீரருந்த வேண்டும்.
நோன்பு என்பது உணவு குறைப்பு முறையாகும். எனவே நோன்பு காலத்தில் இரவு நேரங்களில் அதிகமாக சாப்பாடுகள் எடுத்துக் கொள்ளக் கூடாது. ஸஹர் நேரத்தில் மிகக் குறைவாக சாப்பிடுபவர்கள் இரவு வேளை உணவினை எடுத்துக் கொள்ள முடியும்.
ஸஹர் நேரத்தில் சாப்பிடுபவர்கள் நோன்பு சிறந்ததுக்கு பின்னர் இரவுணவை தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஸஹர் நேரத்திலும் இப்தார் நேரத்திலும் சாப்பிட்டுவிட்டு மீண்டும் இரவு நேரத்திலும் நாங்கள் சாப்பிடுவோமாயின் வழமையாக நாங்கள் சாப்பிடுகின்ற அளவைவிட அதிகமாக சாப்பிடுகின்ற ஒரு நிலை ஏற்படும். சரியான முறையில் நாங்கள் நோன்பு இருந்தால் நிச்சயமாக எங்களுடைய உடலின் எடையில் ஒரு குறிப்பிட்ட அளவு குறைவை 30 நாட்களுக்குப் பின்னால் நீங்கள் கண்டு கொள்ளமுடியும்.
கடுமையான நோயாளிகளுக்கு நோன்பு கடமையில்லை. ஆனால் தொடர்ச்சியாக சில நோய்களுக்கு மருந்துகளை பாவிப்பவராக நீங்கள் இருந்து நோன்பு நோற்கின்ற போது மருத்துவ ஆலோசனையை பெற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் மூன்று வேளை மருந்துகளை பாவிக்கின்ற ஒருவராக இருந்தால் உங்களது வைத்தியரை நாடி அதனை இரண்டு வேளை மருந்துகளாக ரமலான் மாதத்திலே மாற்றிக்கொள்ள வேண்டும். அதேபோன்று சிறிய பிள்ளைகள் நோன்பு நோற்கின்ற போது அவர்களை கட்டாயமாக சகர் உணவை நன்றாக சாப்பிட வைத்து நோன்பு நோற்பதற்கு அனுமதிப்பதோடு அவர்களை வெயில் வெளியில் ஓடி திரிவதை குறைத்து வீட்டில் களைப்படையாத வேலைகள் அல்லது விளையாட்டுக்களில் ஈடுபடுவதற்கு அனுமதிக்க முடியும். நோன்பு திறக்கின்ற போது அவர்களுக்கு நீராகாரங்களை வழங்கி இரவு நேரத்திலும் அவர்களுக்கு சிறந்த ஊட்டச்சத்துக்களை வழங்க வேண்டும்.
எனவே நோன்பு பிடித்தல் என்பது தக்வாவை – இறையச்சத்தை அதிகரிக்க கூடிய ஒரு இபாதத்தாக இஸ்லாத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் அது பல்வேறு வகையான மருத்துவ பலன்களை எங்களுக்கு தருகின்றது. இந்த ஆன்மீக ரீதியான மற்றும் உடல் ரீதியான அனைத்து வகையான நன்மைகளையும் முழுமையாக நாங்கள் பெற்றுக் கொள்வதற்கு எதிர்வரும் ரமழானை முழுமையாக திட்டமிட்டு பயன்படுத்த தயாராகுவோம்.
– Vidivelli -
Post a Comment