முஸ்லிம் MP யை தொடர்புபடுத்தி 2 ஆவது, ஈஸ்டர் தாக்குதல் என பிரச்சாரம் - நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
(எப்.அய்னா)
எஸ்.எல். இலக்ஷன் யூ ரியூப் மற்றும் முகப்புத்தகம், டிக்டொக் உள்ளிட்ட சமூக வலைத்தள பக்கங்களில் ‘2 ஆவது ஈஸ்டர் தாக்குதல் குருணாகலில்? திசைகாடி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பின்னணியில்’ எனும் தலைப்பில் வெளியிடப்பட்ட காணொளியை உடனடியாக அனைத்து தளங்களில் இருந்தும் அகற்றுமாறு கொழும்பு மாவட்ட நீதிவான் சந்துன் கமகே உத்தரவிட்டுள்ளார்.
சட்டத்தரணி மொஹம்மட் சுல்தான் ஷமீல் மொஹம்மட் கொழும்பு மாவட்ட நீதிமன்றில் சட்டத்தரணி சந்தீப கமஎத்தி ஊடாக தாக்கல் செய்துள்ள ஒரு பில்லியன் ரூபா நட்ட ஈடு கோரும் மான நட்ட ஈட்டு வழக்கினை ஆராய்ந்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குருணாகல் அஸ்வெத்தும ஜும்ஆ பள்ளிவாசலில் செயலாளராக சட்டத்தரணி மொஹம்மட் சுல்தான் ஷமீல் மொஹம்மட் செயற்படுவதாகவும், அவர் அப்பள்ளிவாசலில் சம்பிரதாயபூர்வமான முஸ்லிம் கலாசார நடவடிக்கைகளுக்கு தடை ஏற்படுத்தி அடிப்படை வாதத்தை வளர்ப்பதாகவும், அவரது பின்னணியில் தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் அஸ்லம் இருப்பதாகவும் கூறி, எஸ்.எல். இலக்ஷன் எனும் யூ ரியூப் தளத்தில் காணொளி ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. அதில் மேலும் பல விடயங்கள் கூறப்பட்டிருந்த நிலையில், சட்டத்தரணி சட்டத்தரணி மொஹம்மட் சுல்தான் ஷமீல் மொஹம்மட்டின் நற் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தப்படுவதாக கூறி, கொழும்பு மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
குருணாகல் பகுதியை சேர்ந்த ஷஷிக திசாநாயக்க, எஸ்வெத்தும பகுதியை சேர்ந்த மொஹம்மட் ஹனீபா மொஹம்மட் நசார், மொஹம்மட் ஹனீபா மொஹம்மட் ரிஸ்வான், மல்லவபிட்டியை சேர்ந்த மொஹம்மட் ஹனீபா மொஹம்மட் ராசிக் ஆகியோருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இவ்வழக்கானது கடந்த திங்களன்று கொழும்பு மாவட்ட நீதிவான் சந்துன் விதான முன்னிலையில் ஆராயப்பட்டது. இதன்போது சட்டத்தரணிகளான மனதுங்க ஆரச்சி, ரிஸ்வான் உவைஸ் உடன் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப், மனுதாரர் சார்பில் விடயங்களை நீதிபதிக்கு தெளிவுபடுத்தினார்.
அந்த வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி சந்துன் விதான, முதல் சந்தர்ப்பத்திலேயே வழங்க முடியுமான தடை உத்தரவை பிறப்பித்து, குறித்த காணொளியை யூ ரியூப், பேஸ் புக், மற்றும் டிக் டொக் தளங்களில் இருந்து அகற்ற பிரதிவாதிகளுக்கு உத்தரவிட்டார். இதனை நீதிமன்ற பதிவாளர் ஊடாக அறிவிக்கவும் நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிடப்பட்டது.
அத்துடன் குறித்த வழக்கை பரீசீலிக்க தீர்மானித்த நீதிபதி, பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் அனுப்பவும் உத்தரவிட்டு வழக்கை எதிர்வரும் பெப்ரவரி 17 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார். – Vidivelli
Post a Comment