விக்டர் ஐவனை நன்றியுடன், நினைவுகூறும் முஸ்லிம் சமூகம் - SLMMF
மூத்த ஊடகவியலாளர் விக்டர் ஐவனின் மறைவு குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் சார்பில் அதன் தலைவர் என்.எம். அமீன் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் மேலும் கூறியிருப்பதாவது,
சுதந்திர ஊடக அமைப்பின் ஆரம்ப அங்கத்தவராக காலஞ்சென்ற விக்டர் ஐவன், அதன் ஏற்பாட்டாளராகவும், பொதுச் செயலாளராகவும் பதவி வகித்து ஊடகத்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கு அரும் பங்களிப்புச் செய்தார். அவர் இந்த நாட்டின் புலனாய்வு ஊடகத்துறைக்காக தான் ஆரம்பித்த ராவய பத்திரிகையின் மூலம் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தினார். நாட்டில் நீதித்துறை சுதந்திரத்திற்காக ஊழல் மிகு நீதிவான்களோடு மோதி அவர்களது செயற்பாடுகளை அம்பலப்படுத்தி, நீதித்துறை சுதந்திரத்தோடு செய்வதற்கு அச்சம், பீதி இன்றி அவர் ஆற்றிய பங்களிப்புக்காக அவர் பெயர் இலங்கையில் ஊடக வரலாற்றில் விஷேடமாக இடம்பெறும். கருத்து சுதந்திரம், தகவல் அறியும் உரிமைக்காக எப்போதும் குரல் கொடுத்த விக்டர் ஐவன், அவற்றைப் பேணுவதற்கும் முன்னேற்றுவதற்குமாகச் செயற்பட்டார்.
சிறுபான்மை தமிழ், முஸ்லிம் மக்களது உரிமைகளைப் பாதுகாப்பதற்காக தனது எழுத்து மூலம் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். நாட்டில் முஸ்லிம்களது பிரச்சினைகளின் போது, ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வேண்டுகோளுக்கு இணங்க எவ்வித தயக்கமும் பாராது குரல் கொடுத்து வந்தார். முஸ்லிம் மீடியா போரத்தின் மூன்று தசாப்த பணிகளில் விக்டர் ஐவன் பல விடயங்களில், பல சிறுபான்மையினர் முகம் கொடுக்கும் போது குரல் கொடுத்ததை நன்றியுடன் நினைவு கூர்கின்றோம்.
புலனாய்வுப் பத்திரிகையின் கலையை வளர்ப்பதற்கு தனது பத்திரிகை மூலம் கூடுதலான வாய்ப்புகளை அளித்தார். நாட்டின் சிறுபான்மை தமிழ், முஸ்லிம்கள் உரிமைகளுக்காக உரத்து குரல் கொடுத்த விக்டர் ஐவன், ஏனைய பத்திரிகைகள் சிறுபான்மை மக்களின் உரிமைகளுக்கு போதிய இடமளிக்காத போது, தமது பத்திரிகை மூலம் கூடுதலான இடமொதுக்கியது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமன்றி, சிறுபான்மை மக்களின் உரிமைகளுக்காக அவர் குரல் கொடுத்தே வந்தார்.
பத்திரிகையாளர் என்ற வகையிலும் சமூக செயற்பாட்டாளர் என்ற வகையிலும் சிறுபான்மை தமிழ், முஸ்லிம்களின் உரிமைகள் மறுக்கப்படும் போது உரத்துக் குரல் கொடுத்தார்.
முஸ்லிம் சமூகம் நாட்டில் பிரச்சினைகளை எதிர்நோக்கிய போது, முஸ்லிம் மீடியா போரத்தின் வேண்டுகோளில் உரியவர்களின் கவனத்திற்குக் கொண்டு வந்து அவற்றுக்கு தீர்வு கிடைக்க வழி செய்தமைக்கு நன்றியுடன் முஸ்லிம் சமூகம் இன்றும் நினைவு கூர்கின்றது என்றும் தெரிவித்துள்ளார்.
Post a Comment