Header Ads



NPP ஆதரவாளர்கள் மீது, துரத்தித் துரத்தி வாள்வெட்டு


யாழ். பருத்தித்துறை - கொட்டடிப் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில் இரண்டு பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் மீதே இந்த வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


நேற்று புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் பருத்தித்துறை - கொட்டடிப் பகுதியைச் சேர்ந்த ஜெயதீபன் கண்ணன் (வயது 28), விஜயராசா செந்தூரன் (வயது 29) ஆகிய இருவரும் தலை மற்றும் கால் பகுதிகளில் வெட்டுக்காயங்களுடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


நேற்று பிற்பகல் 3 மணியளவில் தொலைபேசி மூலம் பருத்தித்துறை - கொட்டடியைச் சேர்ந்த தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளருக்குத் தொடர்பு எடுத்த நபர் ஒருவ நீ தானே எம்.பி.பி. அமைப்பாளர். கரையோரப் பகுதிகளில் தேசிய மக்கள் சக்திக்காக நீ தானே வேலை செய்கின்றாய்?  உங்கள் கொட்டத்தை அடக்க உங்களது இடத்துக்கு வாள்வெட்டுக் குழுவென்று வருகின்றது பார்த்துக்கொள் என்று கூறிவிட்டு தொடர்பைத் துண்டித்துள்ளார்.


இவ்வாறு அச்சுறுத்தல் விடுத்து சுமார் பத்து நிமிடங்களில் கொட்டடிப்  பகுதிக்கு மோட்டார் சைக்கிள்களில் வந்திறங்கிய வாள்வெட்டுக் குழுவினர் அங்கிருந்தவர்களைத் துரத்தித் துரத்தி சரமாரியாக வெட்டியுள்ளனர்.


இந்தத் தாக்குதலில் தேசிய மக்கள் சக்தியின் பருத்தித்துறை அமைப்பாளரின் சகோதரன் உட்பட இருவர் படுகாயடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.  


இதனையடுத்து சம்பவ இடத்துக்குத் தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட அமைப்பாளரான கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவாட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் ஆகியோர் வருகை தந்து விடயங்களை ஆராய்ந்த பின்னர் பருத்தித்துறை பொலிஸ் நிலையம் சென்று பொறுப்பதிகாரியுடன் கலந்துரையாடிச் சென்றனர்.


தாக்குதல்தாரிகளைக் கைது செய்வதற்கான நடவடிக்கையில் பருத்தித்துறைப் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். 

No comments

Powered by Blogger.