பாலியல் துன்புறுத்தல் - குற்றவாளிகளாக காணப்பட்ட மூவர் பணிநீக்கம்
இந்த விவகாரம் தொடர்பில் பல கட்டங்களாக விசாரணைகள் நடத்தப்பட்டு இதன் அடிப்படையில் மூன்று பணியாளர்கள் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டனர். இதனைத் தொடர்ந்து பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர அவர்களின் பரிந்துரைக்கு அமைய குறித்த மூன்று பணியாளர்களையும் பணிநீக்கம் செய்வதற்கு சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்ரமரத்ன அவர்கள் அண்மையில் ஒப்புதல் வழங்கினார்.
2021 மற்றும் 2022ஆம் ஆண்டு காலப்பகுதியில் பாராளுமன்ற பெண் பணியாளர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் 2023 ஜூலை 30 மற்றும் ஓகஸ்ட் 02ஆம் திகதிகளில் பத்திரிகைகளில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து அப்போதைய சபாநாயகரின் அறிவுறுத்தலுக்கு அமைய இது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள பாராளுமன்றத்தின் அப்போதைய நிர்வாகப் பணிப்பாளர் தலைமையில் மூவர் அடங்கிய உள்ளக விசாரணைக் குழுவை பாராளுமன்ற செயலாளர் நாயகம் 2023.08.04ஆம் திகதி நியமித்திருந்தார்.
இந்தக் குழு முன்னெடுத்த விசாரணைகளுக்கு அமைய பாராளுமன்ற பணியாளர்கள் இருவர் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்ததுடன், குழுவின் அறிக்கை 2023.08.23ஆம் திகதி பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளிக்கப்பட்டது. இது தொடர்பில் மேலதிக அறிவுறுத்தல்களைப் பெறுவதற்காக குறித்த அறிக்கை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது. சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய இது தொடர்பான விசாரணை பொலிஸ்மா அதிபரின் ஊடாக சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகத் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தப் பொலிஸ் பிரிவின் விசாரணைக்கு அமைய மற்றுமொரு பாராளுமன்ற பணியாளர் கைது செய்யப்பட்டு 2024.01.30ஆம் திகதி குறித்த பணியாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இதற்கு அமைய இது தொடர்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதையடுத்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என குற்றஞ்சாட்டப்பட் பணியாளர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் ஒழுக்காற்று விசாரணையை நடத்துவதற்காக ஓய்வுபெற்ற மேல்நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தன நியமிக்கப்பட்டார்.
இந்த ஒழுக்காற்று விசாரணையின் இறுதி அறிக்கை 2024.12.23ஆம் திகதி பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஹானி ரோஹணதீர அவர்களிடம் கையளிக்கப்பட்டதுடன், இதனை அடிப்படையாகக் கொண்டு சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மூவரும் இடை நீக்கம் செய்யப்பட்ட தினத்திலிருந்து பணி நீக்கம் செய்யுமாறு கௌரவ சபாநாயகரிடம் விடுத்த பரிந்துரைக்கு அமைய இவர்களைப் பணிநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Post a Comment