Header Ads



அரசின் மீது நம்பிக்கை வைத்து, விரைவாக நீதியை கோரும் குடும்பத்தினர்


சுயாதீன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் விரைவாக நீதியை நிலைநாட்டுமாறு கோருகின்றேன் என பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட தெரிவித்துள்ளார்.


சுயாதீன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை குறித்த நீதிமன்ற வழக்கு விசாரணைகள் இன்னமும் நிறைவடையாத நிலையில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவின்(Gotabaya Rajapaksa) உத்தரவுக்கு அமைவாக பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு, சுட்டுக்கொல்லப்பட்டார் என்று தன்னை முன்னாள் கடற்படை வீரர் என அடையாளப்படுத்தும் ஆர்.பி.டி.பி. பிரசன்ன பியசாந்த அண்மையில் ஒரு தனியார் யூடியூப் தளத்துக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்திருந்தார்.


இது குறித்து நீண்ட காலமாக நீதியைக் கோரி போராடி வரும் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவிடம் வினவியபோது, அவர் தான் அந்த நேர்காணலைப் பார்வையிடவில்லை எனப் பதிலளித்தார்.


இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், "பிரகீத் எக்னெலிகொட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கடந்த 2015 ஆம் ஆண்டின் பின்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மிகச் சிறப்பான முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.


அந்த விசாரணைகள் மீது எனக்கு முழுமையான நம்பிக்கை இருக்கின்றது.


அவற்றின் அடிப்படையில் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.


கோட்டாபயவின் உத்தரவின் பேரில் கொல்லப்பட்ட பிரகீத்.. விரைவான நடவடிக்கையை எதிர்பார்க்கும் மனைவி | Sandhya Eknaligoda Demands Justice


அவ்வாறிருக்கையில், அந்த வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்தி, நீதியை நிலைநாட்டுமாறு அரசிடமும், உரிய அதிகாரிகளிடமும் என்னால் கோர முடியுமே தவிர வேறு எதனையும் செய்ய முடியாது"என்றும் சந்தியா எக்னெலிகொட தெரிவித்துள்ளார்.


அத்தோடு கடந்த காலங்களில் தான் அரசிடமும், நீதிமன்றக் கட்டமைப்பின் ஊடாகவுமே நீதியைக் கோரி வந்திருப்பதாகச் சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய புதிய அரசின் மீது நம்பிக்கை வைத்து அவர்களிடமும் நீதியை விரைவாக நிலைநாட்டுமாறு கோருவதாகவும் குறிப்பிட்ட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.