சவூதியின் பசுமை புரட்சிக்கு பங்களிப்பையும், ஆதரவையும் காட்டும் இலங்கைத் தூதரகம்
இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 50வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், ரியாத்தில் உள்ள இலங்கை தூதரகம், ரியாத் மாநகரசபையுடன் இணைந்து மரம் நடும் முயற்சியைத் தொடங்கியுள்ளது. இம்முயற்சியானது சவுதி அரேபியாவின் 2030 ஆம் ஆண்டுக்கான தொலைநோக்குப் பார்வையின் கீழ் (vision 2030), 10 பில்லியன் மரங்களை நடுவதை இலக்காகக் கொண்டுள்ள பசுமை புரட்சிக்கு (SGI) பங்களிப்பு வழங்குவதாகவும் அமைந்துள்ளது.
ரியாத் மாநகரசபையுடன் இணைந்து, ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் அறிமுகப்படுத்திய இந்த மரம் நடும் முயற்சியில் இலங்கை சமூகம் பங்கேற்பதற்கு ஐந்து வெவ்வேறு பூங்காக்களை ரியாத் மாநகரசபை ஒதுக்கியுள்ளது.
சவுதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் அவர்களின் தலைமையில், சலாம் பூங்கா, (டிசம்பர் 23, 2024 அன்று), அர் ரபி பூங்கா (டிசம்பர் 7, 2024 அன்று), மல்கா பூங்கா, (டிசம்பர் 14, 2024 அன்று) அல் தர்சீனா பூங்கா, (டிசம்பர் 21, 2024 அன்று) மற்றும் இர்கா பூங்கா (டிசம்பர் 30, 2024 அன்று) என ஐந்து வெவ்வேறு பூங்காக்களில் பல்வேறு நாட்களில் மரம் நடும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வுகளில் ரியாத் மாநகரசபையின் குடியிருப்பாளர் கூட்டாண்மைத் துறையின் இயக்குநர் டாக்டர் ஆரிஃப் அல் சுலாமி, மாநகரசபை தன்னார்வத் துறையின் இயக்குநர் திருமதி காடா பின்த் அப்துல்லா அல்-ஓம்ரான் மற்றும் ரியாத் மாநகரசபையின் பிற உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரக ஊழியர்கள், அவர்களது குடும்பத்தினர், இலங்கை சமூக உறுப்பினர்கள், சவுதி அரேபியா நடத்திய UNCCD COP 16க்கு வருகைதந்திருந்த இலங்கைப் பிரதிநிதிகள் மற்றும் இலங்கை சர்வதேசப் பாடசாலை மாணவர்கள் ஆகியோர் நிகழ்வுகளின் போது உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
சவூதி அரேபியாவின் பசுமை புரட்சிக்கு (SGI) பங்களிப்பு மற்றும் ஆதரவு காட்டும் வகையில், இலங்கைத் தூதரகம் சவூதி இராச்சியத்தின் பிற பகுதிகளிலும் அதன் மரம் நடும் முயற்சியில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகிறது.
இலங்கைத் தூதரகம்
ரியாத்
Post a Comment