Header Ads



பெருந்திரளானோர் பங்கேற்புடன் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிமினது ஜனாஸா நல்லடக்கம்


- Zanhir ZA -


கொழும்பு தனியார் மருத்துவமனையில் காலமான புத்தளம், மத்ரஸதுல் காசிமிய்யா முன்னாள் அதிபர் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் அவர்களது ஜனாஸா இன்று (14.01.2025) புத்தளம் பகா மஸ்ஜித் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அன்னாரின் ஜனாஸாவில் தேசிய ரீதியாக பல பிரமுகர்கள் கலந்துகொண்டனர். நாட்டின் நாலா பாகங்களில் இருந்தும் கொட்டும் மழையின் மத்தியிலும்  பெருந்திரளானோர் ஜனாஸாவுக்கு வருகை தந்திருந்தனர். 


அன்னாரின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த ஜனாஸா இன்று நண்பகல் இரண்டு மணிக்கு, காஸிமிய்யா அறபுக் கல்லூரிக்கு பொதுமக்கள் பார்வைக்காகக் கொண்டுவரப்பட்டது. அதேவேளை கல்லூரியின் 'மஹ்மூத் ஹஸரத் மண்டபத்தில் இரங்கல் உரைகளும் இடம்பெற்றன. 


தேசிய சமாதனப் பேரவை நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா, புத்தளம் மாவட்ட சர்வ மத அமைப்பின் இணைத் தலைவர் புத்தியாகாம இரத்தின தேரர், அருட்தந்தை மேர்வின், புத்தளம் நகரக் கிளை ஜம்மிய்யதுல் உலமா சபைத் தலைவர் மெளலவி ஜிப்னாஸ், காஸிமிய்யா பழைய மாணவர் அமைப்பின் தலைவர் மெளலவி ரூமி (காசிமி) ஆகியோர் இரங்கலுரை நிகழ்த்தினர். மெளலவி ரிஸ்மி ஆதம்பிள்ளை (காசிமி) நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்க மெளலவி முஜீப் ஸாலிஹ் நன்றியுரை வழங்கினார்.


அப்துல்லாஹ் ஹஸரத் அவர்களின் ஜனாஸா, புத்தளம் பகா பள்ளிவாசலுக்குக் கொண்டுசெல்லப்பட்டு அஸர் தொழுகையைத் தொடர்ந்து நல்லடக்கம் செய்யப்பட்டது. அன்னாரின் மகன் மெளலவி அம்மார் மஹ்மூத் (காசிமி) தொழுகை நடத்தியதுடன், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் அமீர் அஷ் ஷேய்க் ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள் ஜனாஸா நல்லடக்க உரை நிகழ்த்தினார். 


அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமாவின் உப தலைவர்களுள் ஒருவரான அஷ் ஷேய்க் புர்ஹான் (பஹ்ஜி), ஜமாஅதுஸ் ஸலாமா தலைவர் ஆஸாத் முஈஸ், பறகஹதெனிய அன்சார் சுன்னத்துல் முகம்மதிய்யா தலைவர் அஷ் ஷேய்க் அபூபக்கர் சித்தீக் (மதனி), புத்தளம் மாவட்ட  ஜம்மிய்யதுல் உலமா தலைவர், செயலாளர் ஆகியோர் உட்பட புத்தளம் பங்குத் தந்தை, அருட்பணி டிலங்க பெரேரா அவர்களும் மற்றும் பலரும் ஆண், பெண் இன மத பேதமின்றி ஜனாஸாவுக்கு வருகைதந்திருந்தனர். 


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமாத் தலைவர் அஷ் ஷேய்க் ரிஸ்வி முப்தி, புத்தளம் பிள்ளையார் கோவில் பிரதம குரு, சுந்தர ராம குருக்கள் ஆகியோர் அடங்களாகப் பலர் தமது அனுதாபச்  செய்திகளை அனுப்பிவைத்திருந்தனர். 


© Z.A. Zanhir - 14. 01. 2025







No comments

Powered by Blogger.