டாக்டரின் கடமைக்கு இடையூறு - தந்தை, மகனுக்கு சிறையும், அபராதமும் - மன்னிப்பும் கேட்டனர்
- இஸ்மதுல் றஹுமான் -
டாக்டரின் கடமைக்கு இடையூறு விளைவித்து அவருக்கு தகாத வார்த்தைகளில் ஏசி அச்சுறுத்திய தந்தை, மகன் இருவருக்கும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்ற பிரதம நீதவான் ரகித்த அபேசிங்க தலா ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஆறு மாத சிறை தண்டனையும், ஒன்பதாயிரம் ரூபா அபராதம் விதித்தார். சந்தேக நபர்கள் திறந்த மன்றில் டாக்டரிடம் மன்னிப்பும் கேட்டனர்.
நீர்கொழும்பு, ஏத்துக்கால பிரதேசத்தைச் சேர்ந்த நிலார் துமிந்த றொட்ரிகோ, சுபுன் ஹியுமன்த ரொட்றிகோ ஆகிய இருவருக்கும் இத் தண்டனை வழங்கப்பட்டது.
சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது வயோதிப மாது ஒருவர் தாக்கப்பட்ட நிலையில் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்து சுகமடையவே ரிக்கட் வெட்டி வீடு சென்றுள்ளனர்.
இவ்வயோதிப பெண்ணுக்கு தலைசுற்றுவதாகக் கூறி மீண்டும் கடந்த 19ம் திகதி நீர்கொழும்பு வைத்தியசாலையில் 5 இலக்க வார்ட்டில் அனுமதிக்கப்பட்டுளளார்.
அவரை பரிசோதித்த வைத்தியர்கள் அவருக்கு நோய் எதுவும் இல்லை என்பதனால் 20ம் திகதி டிக்கட் வெட்டியுள்ளனர்.
கடந்த 20 ம் திகதி காலை 11.30 மணி அளவில் அனுமதியின்றி வார்ட்டுக்குள் உட்பிரவேசித்த இருவர் வைத்தியரின் அறைக்குச் சென்று வார்ட்டுக்கு பொறுப்பான டாக்டர் ரங்கநாதன் வரதனை தகாத வார்த்தைப் பிரயோகங்களால் ஏசி டாக்டரை அச்சுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக வைத்தியசாலை பொலிஸுக்கு அறிவிக்கவே பொலிஸார் இருவரையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களுக்கும் எதிராக அத்துமீறி வார்ட்டுக்குள் நுழைந்தமை, டாக்டரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை, தகாத வார்த்தைகளை பிரயோகித்து அச்சுறுத்தியமை போன்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு நீர்கொழும்பு பொலிஸாரினால் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்ற பிரதம நீதவான் ரகித்த அபேசிங்க முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
ஆள் அடையாள அனிவகுப்பிற்கு உட்படுத்துவதற்காக இருவரையும் நீதவான் ஜனவரி முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைத்தார்.
இவர்களின் வழக்கு விசாரணை மீண்டும் முதலாம் திகதி நீதவான் அபேசிங்க முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது சந்தேக நபர்கள் இருவரும் குற்றத்தை ஏற்றுக்கொண்டனர்.
இதனையடுத்து நீதவான் சந்தேகநபர்களான தந்தைக்கும் மகனுக்கும் ஆறு மாத சிறை தண்டனை விதித்து அதனை ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைத்தார். மேலும் தலா 9000 ரூபா அபராதம் விதித்து திறந்த மன்றில் டாக்டரிடம் மன்னிப்புக் கேட்குமாறு உத்தரவிட்டார்.
சந்தேக நபர்கள் சார்பாக சிரேஷ்ட சட்டதரணி நெல்சன் குமாரநாயக்க, சட்டதரணி சகுலா குணதிலக ஆகியோர் ஆஜரானதுடன் முறைப்பாட்டாளர் சார்பாக சட்டதரணிகளான ரன்ஜன் ஜயசிங்க, சுரேஷ் அமரசிங்க ஆகியோர் முன்னிலையாகினர்.
Post a Comment