புதிய அரசாங்கம் தெரிவான பின்னர், முதலீடு செய்வதில் அதிக ஆர்வம்
ஆய்வு மற்றும் அபிவிருத்திக்கான வணிகமயமாக்கல் அணுகுமுறையை ஏற்படுத்துவதற்காக ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (08) நடைபெற்ற நிகழ்விலேயே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.
ஆய்வு மற்றும் அபிவிருத்தி வணிகமயமாக்கலுக்கான அணுகுமுறை ஏற்படுத்த nirdc.gov.lk என்ற புதிய இணையதளம் இதன்போது அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்துடன் இணைந்த ஆய்வு மற்றும் அபிவிருத்தி செயல்முறை, (Research and Development) மற்றும் பெறுமதி சேர் (value added) பொருட்கள் மற்றும் சேவை உற்பத்தி என்பன நாட்டின் பொருளாதாரத்தை எழுச்சி பெறச் செய்து ஒட்டுமொத்த மனித மற்றும் சமூக வளர்ச்சிக்கும் பங்களிப்புச் செய்யும்.
நாட்டில், புத்தாக்க திறன் கொண்டவர்கள் கிராமிய அளவில் உருவெடுத்தாலும், அவர்களின் யோசனைகள் மற்றும் ஆக்கங்களை உள்வாங்க அல்லது அவர்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் குறைந்த அளவிலேயே வழங்கப்பட்டன. இந்த மனித வளத்திற்கு சுதந்திரமாக சிந்திக்க தேவையான சூழலை உருவாக்குவதன் ஊடாகவும், அவர்களின் புதிய யோசனைகளை ஆராய்ச்சி மற்றும் அவதானிப்பு அடிப்படையில் உருவாக்கப்பட்ட பொறிமுறையின் ஊடாக வழங்குவதன் மூலமும் இலங்கையை எதிர்காலத்தில் ஒரு புத்தாக்க மையமாக மாற்ற முடியும்.
இதுவரை, இலங்கை வருடாந்த மொத்த தேசிய உற்பத்தியில் 0.12%க்கும் குறைவாகவே ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்காக ஒதுக்கியது. இலங்கையில் ஏராளமான இயற்கை வளங்கள் இருந்தாலும், அவற்றின் முறையான முகாமைத்துவம் மற்றும் இந்த பெறுமதியான ஆராய்ச்சி என்பன இன்னும் பொருளாதார பிரதிபலன்களுக்காக பயன்படுத்தப்படவில்லை.
புதிய அரசாங்கம் தெரிவான பின்னர், பெருமளவிலான உள்நாட்டு மற்றும் சர்வதேச முதலீட்டாளர்கள் தற்போது இலங்கையில் முதலீடு செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இவை அனைத்தையும் தாமதமின்றி முகாமைத்துவம் செய்து நாட்டின் அபிவிருத்திக்காக பயன்படுத்த வேண்டும். அதற்கமைய விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு தற்போது நன்கு திட்டமிடப்பட்ட மற்றும் முறையாக முகாமைத்துவம் செய்யப்படுகின்ற நீண்ட கால ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பொறிமுறையை செயற்படுத்த ஆரம்பித்துள்ளது.
எனவே, பொருளாதாரத்திற்கு விரைவான ஊக்கத்தைப் பெறுவதற்காக ஏற்கெனவே ஆராய்ச்சியை நிறைவு செய்திருக்கும் அல்லது நிறைவடையும் தருவாயில் உள்ள திட்டங்களை, பெறுமதி சேர்த்து சந்தைப்படுத்தக்கூடிய பொருட்கள் மற்றும் சேவையாக விரைவாக மாற்றியமைப்பதே பயனளிக்கும் உபாயமாகும். ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரதிபலன்களை அறிந்துகொள்ளல்,பாராட்டுதல், நடைமுறைப்படுத்தல் மற்றும் செயல்படுத்தலுக்காகவும் விரைவாக வணிகமயமாக்கவும் "ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான தேசிய வணிகமயமாக்கல் அணுகுமுறை" [National Initiative for R&D Commercialization (NIRDC)] என்ற புதிய வேலைத்திட்டம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் சிரேஷ்ட ஜனாதிபதி ஆலோசகர் கோமிக உடுகமசூரிய ஆகியோரின் இணைத் தலைமைத்துவத்துடன் அறிவியல் ஆராய்ச்சி, தொழில்துறை,பொருளாதாரம், சட்டம்,கலை,தேசிய மரபுரிமைகள் உள்ளிட்ட துறைசார் நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க,
மனிதர்களின் தேவைகள் மாறாதவை எனவும், அந்த தேவைகளை பெற்றுக்கொள்ளும் முறை மாத்திரமே மாறும் என்றும், புத்தாக்கங்கள் ஊடாக அதற்கான மாதிரிகளை உருவாக்க முடியும் எனவும் தெரிவித்தார்.
தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் தொடர்பாக இலங்கையில் காணப்பட்ட கொள்கையினால், உலக சந்தையில் தனக்கான சரியான இடத்தைப் பெற்றுக்கொள்ளத் தவறியுள்ளதாகவும், உலகில் தொழில்நுட்பத்துடன் கூடிய சந்தை மாதிரியில் புதிய புரட்சி ஏற்பட்டுள்ள போதிலும், இலங்கை இன்னமும் தேயிலை, தேங்காய் மற்றும் ரப்பர் போன்ற பழைய பாரம்பரியங்களுக்குள் சிக்கிக்கொண்டிருக்கிறது என்பதையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
தொழில்நுட்பத்துடன் இணைந்து புத்தாக்கங்களை செய்த நிறுவனங்களே உலகை வெற்றிகொண்டுள்ளதாகவும், உலகில் முதல் 10 நிறுவனங்களில் 05 நிறுவனங்கள் தொழில்நுட்ப அடிப்படையிலான நிறுவனங்கள் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இலங்கையில் தொழில்நுட்பத் துறை புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், உலகின் வளர்ந்த நாடுகள் தொழில்நுட்பத் துறைக்கு முன்னுரிமை கொடுத்து அபிவிருத்தியை நோக்கி நகர்வதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
வறுமை ஒழிப்பு சமூக அவலங்களை ஒழிப்பதற்கானது மாத்திரமல்ல. மாறாக உரிமைகள் இன்றி மக்கள் நெருக்கடிக்கு உள்ளாகின்ற காரணத்தினால், புத்தாக்கங்கள் ஊடாக அந்த மக்களுக்கு பொருளாதார செயற்பாடுகள் மற்றும் புதிய தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் உரிமையை வழங்குவதற்காகவே கிராமிய வறுமை ஒழிப்பு அவசியப்படுகிறது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2025.01.08
Post a Comment