Header Ads



இருதய அறுவைச் சிகிச்சை நிபுணர், மர்ஹும் லாஹிக்கு அதி உயர் விருது


இலங்கையில் நவீன இருதய அறுவை சிகிச்சைத் துறையில் ஆற்றிய அளப்பரிய சேவைக்காக மறைந்த டாக்டர் . வை. கே .எம் லாஹீ  வாழ்நாள் சாதனையாளர் விருது  வழங்கி கௌரவிக்கப்படவுள்ளார். 


வெள்ளிக்கிழமை(10)மாலை பத்தரமுல்லை, வோட்டர்ஸ் எஜ் ஹோட்டலில் ஆரம்பமாகும் இலங்கை இருதய  மற்றும் மார்பு அறுவை சிகிச்சை நிபுணர்களின் சங்கத்தின் புலமைத்துவ அமர்வின் போது(Academic session)  இந்த அதி உயர் விருது அவருக்காக வழங்கி வைக்கப்படவுள்ளது. 


கொழும்பு ரோயல் கல்லூரியில் கல்வி கற்ற டாக்டர் யூசுப் காமில் முஹம்மத் லாஹி, கொழும்பு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ பட்டதாரியானார்.  இங்கிலாந்தில் மிடில் செக்ஸ் பல்கலைக்கழகத்தில் இருதய அறுவை சிகிச்சைத் துறையில் பட்டப் பின்படிப்பை 1992 தொடக்கம்1995 வரை மேற்கொண்டு  நிறைவு செய்து நாடு திரும்பி,  பின்னர் கொழும்பு பெரியாஸ்பத்திரி லேடி ரிஜ்வே சிறுவர் ஆஸ்பத்திரி ஆகியவற்றில் இருதய அறுவை சிகிச்சை துறையில் பணியாற்றி பல  புரட்சிகரமான சாதனைகளை  நிகழ்த்தியதன் பின்னர் தனது 63 ஆவது வயதில் ஓய்வு பெற்று, மேஜர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் பணியாற்றிய போது சடுதியாக ஏற்பட்ட மாரடைப்பினால் 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி அவர் மரணித்தார்.


அன்னாரின் ஜனாஸா மறுநாள் கொழும்பு ஜாவத்தை முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. 


 வெள்ளிக்கிழமை (10) நடைபெறும் பிரஸ்தாப  இலங்கை   இருதய மற்றும் மார்பு அறுவை சிகிச்சை நிபுணர்கள்  சங்கத்தின் புலமைத்துவ அமர்வில் ( (Academic Session) , இங்கிலாந்து ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக பேராசிரியர் டேவிட் டிக்கர்ட் (Prof. David Tiggart) பிரதம அதிதியாகக் கலந்து கொள்கிறார்.

No comments

Powered by Blogger.