சிறைக்கு அழைத்துச்செல்லும் போது, ஞானசாரர் குறிப்பிட்ட விசயங்கள்
- எப்.அய்னா -
பொதுபல சேனா அமைப்பின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் இஸ்லாத்தை அவமதித்தமை தொடர்பில் குற்றவாளியாக காணப்பட்டு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. ஞானசார தேரருக்கு எதிராக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினால் இந்த விவகாரத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அவ்வழக்கின் இறுதியிலேயே ஞானசார தேரருக்கு 9 மாத கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன் 1500 ரூபா அபராதமும் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வழக்கின் தீர்ப்பு கடந்த 9 ஆம் திகதி கொழும்பு மேலதிக நீதிவான் பசன் அமரசேனவால் அறிவிக்கப்பட்டது. குறித்த தீர்ப்பு ஏற்கனவே மூன்று முறை ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் கடந்த 9ஆம் திகதி, தீர்ப்பறிவிப்பதற்காக கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தது.
அதற்கு முன்னைய வழக்கு திகதியில் மன்றில் ஞானசார தேரர் ஆஜராகாமல் இருந்த போதும், 9 ஆம் திகதி பிரதிவாதியான ஞானசார தேரர் மன்றில் ஆஜராகியிருந்தார்.
இஸ்லாம் ஒரு புற்று நோய் என ஞானசார தேரர் வெளியிட்ட கருத்துக்கு எதிராக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் பொரளை ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர் ரிகாஸ் முன் வைத்த முறைப்பாட்டுக்கு அமைய, கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் மேலதிக நீதிவான் (3 ஆம் இலக்க அறை) முன்னிலையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2016 ஜூலை 8, அன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, இஸ்லாம் தொடர்பான அறிக்கை மத நல்லிணக்கத்தை மீறுவதாகவும், அதன்படி, குற்றவியல் சட்டத்தின் 291 (பி) பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் இழைக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் சாட்சி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு, முறைப்பாட்டாளர் தரப்பின் சாட்சியாளர் உள்ளிட்ட சாட்சியாளர்கள் நீதிமன்றில் சாட்சியமளித்துள்ளனர்.
இவ்வாறான நிலையில், குறித்த வழக்கை சுமுகமாக முடித்துக்கொள்ளும் நோக்கில் தனது சேவை பெறுநர் நீதிமன்றில் பகிரங்க மன்னிப்புக் கோர தயாராக இருப்பதாக ஞானசார தேரரின் சட்டத்தரணி காமினி அல்விஸ் நீதிமன்றுக்கு அறிவித்திருந்தார்.
இவ்வாறான நிலையில் சாட்சி விசாரணைகள் நிறைவடைந்த நிலையில், முறைப்பாட்டில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் முன்வைக்கப்படாத நிலையில், குற்றம்சாட்டப்பட்டவரை விடுதலை செய்யுமாறு சிரேஷ்ட சட்டத்தரணி காமினி அல்விஸ் நீதிமன்றில் கோரினார்.
இவ்வாறான நிலையிலேயே குறித்த வழக்கின் தீர்ப்பு 9 ஆம் திகதி அறிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட தரப்புக்காக சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் ஆஜரானார்.
திறந்த மன்றில் தீர்ப்பை அறிவித்த நீதிவான் பசன் அமரசேன, அரசியலமைப்பின் 10வது உறுப்புரை, ஒருவர் விரும்பும் எந்தவொரு மதத்தையும் அல்லது நம்பிக்கையையும் பின்பற்றுவதற்கான சுதந்திரத்தை அடிப்படை மனித உரிமையாக உறுதி செய்துள்ளது. அதன்படி, முஸ்லிம்கள் தங்கள் மதத்தில் நம்பிக்கை கொள்ள முழு உரிமையும் அவர்களுக்கு உண்டு என்று நீதிவான் தனது தீர்ப்பை அறிவித்து குறிப்பிட்டார்.
“கடந்த 2016 ஜூலை 8 ஆம் திகதி அன்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பிரதிவாதியான ஞானசார தேரர் தெரிவித்த சில கருத்துக்கள் முஸ்லிம்களின் மத நம்பிக்கைகளை அவமதித்ததாகக் கூறி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அரசியலமைப்பின் விதிகள் மற்றும் தண்டனை சட்டக் கோவையின் 291 (அ) பிரிவின் படி, மத நம்பிக்கைகளைப் புண்படுத்தும் வகையில் செயல்பட முடியாது. முஸ்லிம்களின் மத நம்பிக்கைகள் அவமதிக்கப்பட்டுள்ளமை பிரதிவாதி தொடர்புடைய ஊடக மாநாட்டில் வெளியிட்ட கருத்துக்கள் ஊடாக தெளிவாகத் தெரிகிறது. அந்த கருத்துக்கள் அலட்சியத்தால் செய்யப்பட்டவை அல்ல, மாறாக பிரதிவாதியால் வேண்டுமென்றே வெளியிடப்பட்டன என்பதும் தெளிவாகிறது. அதன்படி, பிரதிவாதி வேண்டுமென்றே தொடர்புடைய இந்த குற்றத்தைச் செய்ததாக வழக்கு விசாரணையில் நிரூபிக்கப்பட்டுள்ளது அதன்படி, பிரதிவாதிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி முறைப்பாட்டாளர் தரப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால் பிரதிவாதியை குற்றவாளி என இந்த நீதிமன்றம் தீர்மானிக்கின்றது.’ என நீதிவான் பசன் அமரசேன அறிவித்தார்.
ஞானசார தேரரை குற்றவாளி என நீதிவான் அறிவித்த போது, கூண்டில் நின்றிருந்த அவர், திறந்த நீதிமன்றில் பேசினார். “கனம் நீதிவான் அவர்களே… நான் ஒரு பௌத்த துறவி. நான் சுமார் இருபது ஆண்டுகளாக இஸ்லாமிய அடிப்படைவாதம் பற்றிப் பேசி வருகிறேன். ஒவ்வொரு நாளும் இப்படியே இருக்க முடியாது. அதற்கு என்னை உடனடியாக கொன்றுவிடுங்கள்..’ என குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த நீதிவான், தனது முடிவில் திருப்தி அடையவில்லை என்றால், மேன்முறையீடு செய்ய வாய்ப்பிருப்பதாக கூறினார்.
அதன் பின்னர், ஞானசார தேரர் சார்பாக மன்றில் சட்டத்தரணி இரோஷ் செனவிரத்னவுடன் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி காமினி அல்விஸ், ஞானசார தேரருக்கு இலகு தண்டனை ஒன்றினை அளிக்குமாறும் அவர் மீண்டும் சமூகத்தில் ஒன்றிணைவதற்கு அது ஏதுவாக அமைய வேண்டும் எனவும் கோரினார்.
அனைத்து தரப்பினரின் வாதங்களையும் பரிசீலித்த பின்னர், நீதிவான் ஞானசார தேரருக்கு 9 மாத கால சிறைத்தண்டனையும் 1500 ரூபா அபராதமும் விதித்தார்.
இதனையடுத்து பிரதிவாதி சார்பில் ஆஜரான சட்டத்தரணி காமினி அல்விஸ், இந்த முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அதன்படி கொழும்பு மேல் நீதிமன்றிலும் மேன் முறையீடு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து நீதிவான் நீதிமன்றின் தீர்ப்புக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் மேன் முறையீடு செய்துள்ளதை மையப்படுத்தி, தீர்ப்பளித்த கொழும்பு மேலதிக நீதிவான் பசன் அமரசிங்கவிடம் பிணை விண்ணப்பம் முன் வைக்கப்பட்டது.
ஞானசார தேரர், முதுகுப் பகுதியில் ஏற்பட்டுள்ள உபாதைக்கு ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவது பிணை கோரிக்கைக்கான விஷேட காரணியாக முன் வைக்கப்பட்டது. இதனைவிட 9 மாத கால சிறை என்பது சிறைச்சாலை நாட்காட்டி பிரகாரம் சுமார் 6 மாதங்கள் வரை குறைந்த காலத்தை கொண்டது எனவும், அது மேன் முறையீட்டு நடவடிக்கைக்கு சென்று நிவாரணம் பெற்றுக்கொள்வதற்கு போதுமான காலம் அல்ல என்பதால், அதனையும் விஷேட காரணியாக கருதி பிணையில் ஞானசார தேரரை விடுவிக்குமாறு, அவர் சார்பில் மன்றில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி காமினி அல்விஸ் கோரினார்.
இதன்போது ஞானசார தேரருக்கு சிறையில் உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகவோ வேறு காரணிகளோ இருக்கின்றனவா என நீதிவான் ஆராய்ந்தார். இதன்போது அவ்வாறு எந்த அச்சுறுத்தலும் இல்லை என உறுதி செய்த நீதிவான், ஞானசார தேரருக்கு சிகிச்சை பெறும் நடவடிக்கைகளை சிறையில் இருந்து முன்னெடுக்க முடியும் எனவும், மேன் முறையீட்டு நடவடிக்கைகளையும் அங்கிருந்து முன்னெடுக்க பாதிப்பு இல்லை எனவும் சுட்டிக்காட்டி, பிணை கோரிக்கையை நிராகரித்தார்.
அதன்படி, கலகொட அத்தே ஞானசார தேரர் சிறைத் தண்டனை கைதியாக வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அவரை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லும் போது, சிறைச்சாலை பஸ் வண்டி அருகே ஊடக வியலாளர்களை நோக்கி, கருத்து தெரிவித்த ஞானசார தேரர் தெரிவித்த விடயங்கள் , தான் கூறிய கருத்துக்கள் தொடர்பில் பச்சாதாபப்படுவதை வெளிப்படுத்தவில்லை. மாற்றமாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை மீண்டும் ஒருமுறை ஒட்டுமொத்த முஸ்லிம்கள் மீதும் பழி சுமத்தும் விதமான கருத்துக்களையே ஞானசார தேரர் வெளிப்படுத்தியதை அவதானிக்க கூடியதாக இருந்தது.- Vidivelli
Post a Comment