கவர்ச்சிகரமான பிதேசமாக நீர்கொழும்பை மாற்ற வேண்டும்...
- இஸ்மதுல் றஹுமான் -
சுற்றுலாப் பயணிகளை கவரும் விதத்தில் நீர்கொழும்பு கடலோரப் பிரதேசத்தை கவர்ச்சிகரமாக வைப்பதற்கு கடலோரத்தை பயன்படுத்தும் மீனவர்களுக்கு பாதிப்பில்லாத விதத்தில் சில உத்திகளை கையாள இலங்கை சுற்றுலா சபையுடன் கலந்துரையாடியுள்ளதாக நீர்கொழும்பு சுற்றுலாத்துறை சங்க தலைவர் ஏ. வரணகுமார, அதன் உறுப்பினர் ஜானக வீரமந்திரி ஆகியோர் நீர்கொழும்பு ராணி ஹோட்டலில் நடாத்திய ஊடக சந்திப்பில் தெரிவித்தனர்.
அங்கு அவர்கள் கருத்துத் தெரிவிக்கும் போது கடந்த காலங்களில் நீர்கொழும்புக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பல நாட்கள் இங்கு தங்கி நின்றனர். இந்த நிலைமயை மீண்டும் ஏற்படுத்துவதற்காக இலங்கை சுற்றுலா சபை தலைவர் உட்பட பணிப்பாளர் சபையுடன் இதே இடத்தில் இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம். அவர்களிடம் சில முன்மொழிவுகளை வழங்கினோம்.
கடலோரத்தை பயன்படுத்தும் மீனவர்களை ஓரிடத்திற்கு மட்டுப்படுத்துவதற்காக தனியாக மீனவ கிராமத்தை உருவாக்கி அவர்கள் பாதுகாப்பாக தொழில் செய்யக்கூடிய சூழலை ஏற்படுத்திக் கொடுத்து கடலோரத்தை தூய்மைப்படுத்தி உல்லாசப்பயணிகளை கவரும் விதத்தில் அழகுபடுத்தும் வேலை திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.
2004 அழகான கடற்கரையாக இருந்த பிரதேசம் 2005 முதல் கருவாடு காய்த்தலுக்கு பயன்படுத்துவதன் மூலம் அப்பகுதி அசிங்கமாக காட்சியளிக்கின்றன.
நாம் முன்மொழிந்துள்ள மீனவ கிராமத்தை ஏற்படுத்தி மீனவர்களுக்கான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். அதற்கு மீனவர்களும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
நீர்கொழும்பு ஒல்லாந்த கோட்டையில் அமைந்துள்ள சிறைச்சாலையை வேறிடத்திற்கு இடமாற்றி காலி, யாழ்ப்பாணம் கோட்டைகளை போல் புரதான சின்னங்களை பாதுகாத்து உல்லாசப் பயணிகள் வந்து செல்லும் இடமாக மாற்றி அமைக்க வேண்டும்.
நீர்கொழும்பு சிறைச்சாலையை தழுபொத்தவில் 32 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள வாலிப குற்றவியல் திறந்த சிறைச்சாலை பிரதேசத்திற்கு கொண்டு செல்ல முடியும் என நாம் பரிந்துறைத்துள்ளோம் என அவர்கள் கூறினர்.
மேலும் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் களப்பு மற்றும் டச் கால்வாயை சுத்தம் செய்து ஆற்றின் இரு பக்கமும் கட்டுமானங்கள் அமைத்து பயணிகள் படகு சேவையை ஆரம்பித்தல்.
லுவிஸ் பிளேஸ், ஏத்துக்கால் பிரதேசங்களை உள்ளடக்கிய சுற்றுலா வலயத்தை அமைத்தல். இவ்வலயம் தொடர்பாக 1985 வர்த்தமானியில் மூலம் அனுமதி வழங்கப்பட்ட போதும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. எனவே புதிதாக வர்தமானி அறிவிப்பை வெளியிட்டு பாராளுமன்ற அங்கீகாரத்துடன் இதனை நடைமுறைப்படுத்த இனங்கியுள்ளனர்.
நீர்கொழும்பு மாநகர சபை, பிரதேச செயலகம், சிறைச்சிலை, பொலிஸ் நிலையம் என்பவற்றின் பூரண ஒத்துழைப்புடன் கடலோரத்தை சுத்தப்படுத்தி அழகுபடுத்த அவ்வப்போது நடவடிக்கைகள் எடுத்த போதும் உரிய உபகரணங்கள் பற்றாக்குறையினால் அவை தேக்கமடைகின்றன. எனவே நகரசபைக்கு "பீச் கிளீனர்" மற்றும் தேவையான உபகரணங்களை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் அனுசரனை வழங்க வேண்டும்.
கட்டுவ ரயில் நிலையம் நீர்கொழும்பு சுற்றுலா பிரதேசத்திற்கு மிக அண்மையில் அமைந்துள்ள ரயில் நிலையமாகும். இதனை எல்ல ரயில் நிலையம் மாதிரி நவீனமயப்படுத்தி சுற்றுலாப் பயணிகள் வந்திரங்கக் கூடிய இடமாக மாற்றியமைக்க வேண்டும் என்றனர்.
Post a Comment