கல்முனையில் நீதிமன்றத் தடையை மீறி, திருவள்ளுவர் சிலை
(பாறுக் ஷிஹான்)
நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்ட நிலையில் சர்ச்சைக்கு மத்தியில் 10 அடி உயரமான திருவள்ளுவர் சிலை கொட்டும் அடை மழைக்கும் மத்தியில் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கிட்டங்கி வீதியில் அமைந்துள்ள கல்முனை தமிழர் கலாசார பேரவை வளாகத்தில் குறித்த சிலை பொலிஸாரின் பாதுகாப்பிற்கும் மத்தியில் இன்று(19) மாலை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சிலை திரை நீக்கம் செய்யும் நிகழ்வில் மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் மேலாளர் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மற்றும் வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே அதிசயராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் கல்முனை தமிழர் கலாசார அபிவிருத்தி பேரவை உறுப்பினர்கள் உட்பட கல்முனை பிராந்திய இளைஞர் அமைப்புகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அத்துடன் கல்முனை பகுதியில் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலை அனுமதியற்ற கட்டுமானம் என குறிப்பிட்டு எழு நாட்களுக்குள் அகற்ற மாநகர சபை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கல்முனை தமிழர் கலாசார அபிவிருத்தி பேரவையால் ஞயிற்றுக்கிழமை(19) கல்முனை தமிழர் கலாசார அபிவிருத்தி பேரவை வளாகத்தில் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட உள்ளதாகவும் அந்த திறப்பு விழாவுக்கான அழைப்பிதழில் கல்முனை மாநகரசபை ஆணையாளர் ஏ.ரி.எம்.றாபி கௌரவ அதிதியாக கலந்து கொள்ள உள்ளதாகவும் அச்சிடப்பட்டிருந்த நிலையில் கல்முனை மாநகர சபையினால் கல்முனை தமிழர் கலாசார அபிவிருத்திப் பேரவை செயலாளருக்கு முகவரியிட்டு வெள்ளிக்கிழமை(17) "கல்முனை கல்லடிக்குளப் பிரதேசத்தில் அனுமதியற்ற கட்டுமானம் என்ற தலைப்பில் கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில் எமது KMC/Eng/App/2023 ஆம் இலக்க 2023.04.25 ஆம் திகதிய மற்றும் KMC/WD/COMP/10 ஆம் இலக்க 2023.09.07 ஆம் திகதிய கடிதங்களுக்கு மேலதிகமாக, தாங்கள் மேற்படி இடத்தில் கட்டுமானம் ஒன்றை மேற்கொண்டுள்ளமையும், சிலை ஒன்றை அமைத்துள்ளமையும் அவதானிக்கப்பட்டுள்ளது. மேற்குறித்த கட்டுமானம் மற்றும் சிலை வைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உரிய சட்ட நடைமுறைகளுக்கு அமைவாக கல்முனை பிரதேச செயலகத்திலிருந்து காணி தொடர்பான அனுமதிப்பத்திரத்தினையும், கல்முனை மாநகர சபையினூடாக நிர்மாணத்தினை மேற்கொள்வதற்குரிய அனுமதியினையும் பெற்ற பின்னரே குறித்த குறித்த காணிக்குள் நிர்மாண வேலைகளை மேற்கொள்ளுமாறு ஏற்கனவே மேற்குறித்த கடிதங்கள் மூலம் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது.
ஆகவே இவ்வறிவுறுத்தல் கிடைக்கப்பெற்று ஏழு (7) நாட்களுக்குள் தங்களால் அனுமதியின்றி செய்யப்பட்ட நிர்மாண வேலைகளை அகற்றி ஆதனத்தினை முன்பிருந்த நிலைக்குக் கொண்டுவருமாறு வேண்டப்படுகின்றீர். தவறும் பட்சத்தில் தங்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்பதனை அறியத்தருகின்றேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலை சிலை திரை நீக்கம்- நீதிமன்ற தடையுத்தரவு
கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் முறைப்பாட்டிற்கமைய கல்முனை நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் அஹமட்லெப்பை நாதீர் கல்முனை கல்லடி நில குளத்தில் கல்முனை மாநகர சபையின் அனுமதியின்றி சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை திறப்புவிழா நடவடிக்கைகளில் ஈடுபடுவதிலிருந்து கல்முனை தமிழ் காலாச்சார பேரவை தலைவர் செயலாளர் உப தலைவர் ஆகியோருக்கு 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கை முறை சட்டக்கோவை பிரிவு 106(1) இன் கீழான தடை உத்தரவு பிறப்பித்திருந்தார்.
மேலும் குறித்த சட்டவிரோத கட்டுமான நடவடிக்கையால் பல்லின இனங்கள் வாழும் இப்பிரதேசத்தில் இனமுறுகல் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளதாகவும் குறித்த குறித்த திறப்பு விழாவினை உடனடியாக தடை செய்து கட்டளை வழங்குமாறு விண்ணப்பம் செய்துள்ளபடியால் மேற்குறித்த விடயங்களைக் கருத்தில் கொண்டு குறித்த திறப்புவிழா நடவடிக்கைகளை இன்றிலிருந்து 14 நாட்களுக்கு தடைசெய்கின்ற விதமாக இத்தால் உமக்கு எதிராக தடையுத்தரவு பிறப்பிக்கப்படுகின்றது என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் குறித்த சிலை திறப்பு விழாவுக்கு பிரதம அதிதியாக அம்பாறை அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம கலந்துகொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கல்முனை தமிழர் கலாசார அபிவிருத்தி பேரவை அமைந்துள்ள காணி குத்தகை முறையான விதத்தில் இல்லையென்றும் அங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள நிர்மாணிப்புக்கள் அனுமதியில்லாத முறையற்ற விதத்தில் அமைந்துள்ளமை தொடர்பில் விமர்சனங்கள் எழுந்து வண்ணம் இருக்கும் நிலையில் இப்போது இந்த விடயம் பேசுபொருளாக மாறியுள்ளது.
Post a Comment