தோற்றுப்போகும் போதெல்லாம், முனீபா மசாரியை நினைத்துக் கொள்ளுங்கள்...
என் அப்பாவை எனக்கு அதிகம் பிடிக்கும்..! எனக்கு பதினெட்டு வயதாகும் போது எனக்கு திருமணம் செய்யவேண்டும் என்று அப்பா விரும்பினார்...! ஆனால் எனக்கு திருமணத்தில் விருப்பமில்லை.. அதை அப்பாவிடம் காட்டிக் கொள்ளவும் இல்லை....!
"எனக்கு திருமணம் செய்து வைத்தால் உங்களுக்கு சந்தோஷமா அப்பா" என்றேன்.. "ஆமாம் என்று புன்முறுவலோடு தலையாட்டினார்.. அவருடைய சந்தோஷத்திற்காக அவர் பார்த்த மாப்பிள்ளையையே திருமணம் செய்து கொண்டேன்.. திருமணத்திற்கு பிறகும் எனக்கு பெரிய சந்தோஷம் இல்லை, ஆனாலும் வாழ்ந்து கொண்டு இருந்தேன்...!
ஒரு நாள் நானும், கணவரும் காரில் சென்றுகொண்டு இருந்தோம். அவர் தூக்கக் கலக்கத்தில் காரை தவறாக ஓட்டி, பள்ளத்தில் விழுந்து, விபத்துக்குள்ளாகும் நேரத்தில், அவர் மட்டும் கதவை திறந்து குதித்து விட நான் காருக்குள்ளேயே சிக்கிக் கொண்டேன்...! காப்பாற்றவே முடியாத சூழ்நிலையில் இருந்து உயிரை மட்டும் காப்பாற்றினார்கள்.
முதல் நாள் வந்து, உங்கள் இரண்டு கைகளும் உடைந்து விட்டது, இனி மேல் உங்களுக்கு பிடித்த ஓவியம் வரையும் பணியை செய்ய முடியாது என்றார்கள்..! அடுத்த முறை வந்து உங்கள் இரண்டு கால்களும் உடைந்து விட்டது உங்களால் இனிமேல் நடக்கமுடியாது Wheel chair தான் பயன்படுத்த வேண்டும் என்றார்கள்....! மீண்டும் ஒரு முறை வந்து, உங்களுடைய முதுகெலும்பும் இடுப்பு எலும்புகளும் உடைந்து விட்டதால் உங்களால் இனி எப்போதுமே ஒரு குழந்தைக்கு தாயாக முடியாது என்று சொன்னார்கள்...!
இனி வாழ்நாள் முழுவதும் Wheel chairல் உட்கார்ந்து எல்லாவற்றுக்கும் யாரோ ஒருவரின் உதவியை எதிர்ப்பார்த்து வாழ்கின்ற இந்த வாழ்க்கை எதற்கு, உயிரை மட்டும் மிச்சம் வைத்ததற்கு பதிலாக அந்த இறைவன் என்னை கொன்றிருக்கலாமே என்று தோன்றியது...!
அவர் கொல்லாவிட்டால் என்ன, நாமே தற்கொலை செய்து கொள்ளலாம் என்று தோன்றினாலும், அதை செய்யக்கூட கை கால் வேண்டுமே என்று படுக்கையிலேயே அழுது கொண்டிருந்தேன்..!
இந்த அதிர்ச்சியை எல்லாம் கடந்த இன்னொரு அதிர்ச்சி, நான் எதற்கும் உபயோகப்பட மாட்டேன் என்று என் கணவர் எனக்கு விவாகரத்து நோட்டிஸ் அனுப்பி இருந்தார்..!
விவாகரத்துக்கு ஒப்புக்கொள்ள முடியாமல், எதற்காக யாருக்காக நான் வாழவேண்டும் என்று எத்தனை முறை யோசித்து அழுதாலும் எனக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை...!
ஆனால், எல்லாவற்றுக்கும் சேர்த்து ஒருநாள் தெளிவு கிடைத்தது!
என்னிடம் இருந்து இத்தனையும் பறித்துக்கொண்ட இறைவன், ஏன் என் உயிரை மட்டும் மிச்சம் வைத்திருக்கிறான், இந்த உயிரை இன்னும் வைத்திருப்பதின் மூலம் நான் செய்ய வேண்டிய ஏதோ ஒரு வேலை, செல்ல வேண்டிய ஏதோ ஒரு பயணம் மிச்சமிருக்கிறது என்றே தோன்றியது....!
எல்லாவற்றையும் இறைவனிடம் விட்டு விட்டு, எதையும் எதிர் கொள்ளும் தைரியத்தை மட்டும் எனக்கு கொடு என்று வேண்டிக் கொண்டு தைரியமாக ஒரு முடிவு எடுத்தேன்...!
அந்த முதல் முடிவு, என் கணவருக்கு விவாகரத்து அளிப்பது. சந்தோஷப்பட்டார்..! இன்னொரு பெண்ணை திருமணமும் செய்து கொண்டார்....! மனப்பூர்வமாக வாழ்த்து மடல் அனுப்பினேன்...!
ஹாஸ்பிடலை விட்டு நகர முடியாமல் இன்னும் ஹாஸ்பிடலிலேயே இருந்தேன்...! படுத்த நிலையில் நான்கு பக்கமும் எந்த பக்கம் திரும்பினாலும் அதே வெள்ளை நிற சுவர்கள்..! குறைந்த பட்சம் இந்த சுவர்களின் நிறத்தையாவது மாற்றுங்கள், மாதக்கணக்கில் இதை பார்த்து பார்த்து பைத்தியம் பிடிக்கிறது என்று கத்தினேன்... மாற்றினார்கள்....!
உடைந்த கையை வைத்து எதையாவது அரை குறையாவது வரைய முடியாதா என்று முயன்றேன்..! என் முயற்சிக்கு கொஞ்சம் கொஞ்சம் பலன் கிடைத்தது...! வரைவது ஒன்றே எனக்கான ஜன்னலாக தெரிய தூங்கும் நேரத்தை தவிர மற்ற எல்லா நேரத்திலும் வரைந்து கொண்டே இருந்தேன்....!
நான் வரைந்த அந்த ஓவியங்களே என்னை உயிர்ப்போடு வைத்திருந்தது....! கால்கள் இல்லாவிட்டால் என்ன, வெளியே போக வீல் சேர் போதும் என்று தோன்றியது...!
குழந்தை பெற முடியாவிட்டால் என்ன, ஏற்கனவே பிறந்து அனாதையாக்கப்பட்ட எத்தனையோ குழந்தைகள் இருக்கிறார்கள் அவர்களில் ஒரு குழந்தையை தத்து எடுத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தேன்....!
உட்கார்ந்த இடத்தில் இருந்தே எழுத முடியுமே என்று எழுத ஆரம்பித்தேன்..!
குரல் நன்றாகத் தானே இருக்கிறது பாடலாமே என்று பாட ஆரம்பித்தேன்..! வாயும் நன்றாகத் தானே இருக்கிறது என்று பேச ஆரம்பித்தேன்...!
என்னை இறைவன் உயிரோட வைத்திருந்ததின் காரணம் கொஞ்சம் கொஞ்சமாக புரிய ஆரம்பித்தது... எழுந்திரிக்கவே முடியாத பள்ளத்தில் இருந்து எப்படி எழுந்து வந்தேன் என்ற என்னுடைய கதையையே எல்லோரிடமும் சொல்ல ஆரம்பித்தேன்....!
எப்படி முடிந்தது என்று எல்லோருமே ஆச்சர்யப்பட்டார்கள்..! அது அவர்களுக்கும் ஒரு நம்பிக்கையை கொடுத்தது..! வீல் சேரில் நகர்ந்து மேடைகளிலும் பேச ஆரம்பித்தேன்!
மீண்டும் மீண்டும் சலிக்காமல் என் கதையையே சொல்ல ஆரம்பித்தேன்!
என் கதையை சொல்லி நான் பரிதாபத்தை தேடிக்கொள்வதாகவும் பலர் சொன்னார்கள், நான் கவலைப்படவில்லை, என் கதை பரிதாபத்திற்குரியதாக இருந்தாலும் அது பலரை உத்வேகப்படுத்தியது,
அவர்களை எழுந்து நடக்க வைத்தது !
தோற்றுப்போன அவர்கள் எழுந்து நடப்பதை பார்க்க சந்தோஷமாக இருந்தது..! மீண்டும் மீண்டும், மீண்டும் மீண்டும் என என் கதைகளையே எல்லா மேடைகளிலும் பேசினேன், ஆயிரக்கணக்கான மக்கள் கூடினார்கள்.. என்னுடைய கதையே என்னை Motivational பேச்சாளராக மாற்றியது...! ஒரு தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் மாற்றியது....
என்னுடைய பாகிஸ்தானை கடந்து உலகம் முழுவதும் என்னுடைய கதை எல்லோருக்கும் தெரிய ஆரம்பித்தது..
எல்லோருக்கும் தன்னம்பிக்கையை உருவாக்கியது.! BBC ல் என்னை சிறப்பு பேட்டி எடுத்தார்கள்...! ஜநாவில் என்னை பேச அழைத்தார்கள், அங்கேயும் என் கதையை பேசினேன்...!
நிறைய இசை ஆல்பங்களை பாடி சேர்ந்து வெளியிட்டேன், நிறைய எழுதினேன்...! இவற்றை எல்லாம் எனக்கு கொடுக்க வேண்டும் என்று கடவுள் நினைத்திருந்தால் பிறகு எப்படி என்னை கார் விபத்தில் சாக விடுவார்...!
உனக்காக நிறைய வைத்திருக்கிறேன் மகளே, சீக்கிரம் எழுந்து வா என்று அவர் எனக்காககாத்திருந்ததாகத் தான் தோன்றுகிறது..!
விபத்துக்கு பின் என்னுடைய உடம்போடும் வீல் சீரோடும் சேர்த்து Urinal bag ஒன்று எப்போதுமே பொருத்தப்பட்டிருக்கும்..! எங்கு போனாலும் அது இல்லாமல் போக முடியாது என்னுடைய உடல் பிரச்சனை அவ்வாறானது..! சரி இருந்து விட்டு போ என்று என் சீட்டிற்கு பின்னாலேயே வைத்துக்கொண்டேன்..! அது என் இழப்பின் குறியீடு...! என்னை அது பின்தொடர்ந்து கொண்டு தான் இருக்கும். ஆனால், ஒருபோதும் என்னை முந்த முடியாது...!
எனக்கான இறப்பு என்றோ ஒரு நாள் இருக்கும், இருந்து விட்டு போகட்டும், அதற்கு முன் தன்னம்பிக்கையை இழந்து நானே ஏன் சாகவேண்டும்..?? தோற்றுப் போனதாய் நினைத்து விட்டாலே நான் செத்து விட்டதாக தான் அர்த்தம், நான் சாக விரும்பவில்லை, நீங்களும் சாகாதீர்கள்..!
தோற்றுப்போகும் போதெல்லாம் இந்த இஸ்லாமிய இரும்புப்பெண் முனீபா மசாரியை நினைத்துக் கொள்ளுங்கள்...
"உங்களின் விழியின் கூர்மை கண்டு, வெற்றியின் கதவு தானாய் திறக்கும்".
Post a Comment