தலதா விடுத்துள்ள தூது
(எம்.ஆர்.எம்.வசீம்)
ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வெளியேறி ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட வேறு கட்சிகளுடன் இணைந்தவர்கள் மற்றும் கட்சியில் இருந்து விலகியிருந்தவர்கள் மீண்டும் எம்முடன் இணைந்துகொள்ள முடியும். அதற்காக அவர்கள் அனைவருக்கும் திறந்த அழைப்பை விடுக்கிறேன் என ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய பொதுச் செயலாளர் தலதா அதுகோரல தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் வெள்ளிக்கிழமை (10) தனது அலுவலகத்தில் பணிகளை ஆரம்பித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
என் மீது நம்பிக்கை வைத்து இவ்வாறான பொறுப்பு மிக்க பதவியை வழங்கியமைக்காக கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நான் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்தக் கட்சி மீண்டும்் வெற்றிபெறும் கட்சியாக மாற்றுவதே எனது நோக்கம். இந்த எதிர்பார்ப்புடனே எனக்கு இந்த பதவியை வழங்கி இருக்கிறார் என நினைக்கிறேன்.
ரணில் விக்கிரமசிங்க மிகவும் கடினமான நேரத்தில் இந்த நாட்டை பொறுப்பேற்று உணவின்றி, வரிசைகளில் இருந்த மக்களையும் வங்குரோத்தடைந்திருந்த நாட்டையும் பொறுப்பேற்று பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்தார். இதன்படி கட்சியின் ஊடாக அதனை பூரணப்படுத்த எதிர்பார்க்கின்றார்.
அத்துடன் எனக்கு கிடைத்துள்ள இந்த பதவி சவால் மிக்கது. கட்சியின் அனைத்தும் பூரணமான நிலையில் நான் இந்த பதவிக்கு வரவில்லை. நான் மிகவும் விருப்பத்துடன் சவால்களை ஏற்றுக்கொள்ள விரும்புகின்றேன்.
எனது வாழ்நாளில் வந்த அனைத்து சவால்களையும் நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட ஒருவர் என்வகையில் இதனையும் ஏற்றுக்கொள்கின்றேன். ஒரு காலத்தில் எனது சகோதரரும் இந்தப் பதவியில் இருந்து கட்சியின் சகல உறுப்பினர்களின் நம்பிக்கையையும் பெற்றவராக பணியாற்றினார். அவரின் பாதையில் சென்று நாம் அனைவரும் ஒன்றிணைந்து கட்சியினர் மட்டுமன்றி நாட்டிலுள்ள அனைவர் தொடர்பிலும் செயற்படுவதே எனது எதிர்பார்ப்பாகும்.
இந்தக் கட்சியில் சிறந்த பல தலைவர்கள் இருக்கிறார்கள். நாங்கள் அனைவரும் ஒன்றிணைத்து கட்சியை மீண்டும் வெற்றி பெறச் செய்ய அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். கட்சியை வெற்றிப்பெறச் செய்வது என்பது நாட்டு மக்களைவெற்றிப்பெறச் செய்வது போன்றது. எனவே இந்த பாரிய கட்சியின் செயலாளர் பதவியை பொறுப்பேற்று நாட்டையும் மக்களையும் வெற்றிபெறச் செயயும் சவாலை நான் பொறுபேற்றிருக்கிறேன்.
மேலும் எம்மிடையே இருந்து பிரிந்து சென்றவர்கள், விலகி இருப்பவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து மக்களுக்காக ஏதாவது செய்வதற்கு அவரின் ஆசிர்வாதம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றேன். ஐக்கிய மக்கள் சக்தி , ஐக்கிய தேசிய கட்சி இந்த இரண்டு கட்சியும் இணைய வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நான் ஆரம்பம் முதல் இருந்து வருகிறேன்.
நான் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினரான பின்னர் 45 நாட்களில் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து அதற்கான இணக்கப்பாட்டை ஏற்படுத்த வேண்டும் என்று கூறினேன். எனது வீட்டில் ஐக்கிய மக்கள் சக்தி பொதுச் செயலாளர் மற்றும் கபீர் ஹசீமுடன் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டது.
அதில் ஐக்கிய தேசியக் கட்சி பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன, சாகல ரத்நாயக்க ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். இது இப்போது எடுத்த அவசர தீர்மானம் அல்ல. எனக்கு பொறுப்பொன்று இருந்தது. அந்தக் கட்சிக்குள் இருந்துகொண்டு எனக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் வாக்களித்தவர்களை பாதுகாக்க வேண்டியிருந்தது. இதனாலேயே அவ்விடத்தில் இருந்தேன்.
ஐக்கிய மக்கள் சக்தி புதிய கட்சியல்ல. அங்கிருப்பவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்தவர்கள். பிரதித் தலைவராக இருந்த சஜித் பிரேமதாசவே கட்சியை அமைத்துள்ளார். அதனால் அவர்கள் எங்களுடன் இணைந்துகொள்ள வேண்டும் என அவர்களுக்கு திறந்த அழைப்பை விடுக்கின்றேன். அதற்காக ரணில் விக்கிரமசிங்கவின் பூரண ஆசீர்வாதம் உள்ளது. அவர் எந்த வகையிலும் தடை போடமாட்டார். அப்படியென்றால் என்னையும் கட்சிக்குள் எடுத்திருக்க மாட்டார் என்றார்.
Post a Comment