Header Ads



முன்னாள் ஜனாதிபதிகளுக்கு, வெட்கம் உள்ளதா..?


முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வெட்கம் என்பதொன்று இருக்குமானால் அரச இல்லங்களிலிருந்து வெளியேற வேண்டும். ஆனால் இவர்களுக்கும்  வெட்கமில்லை, இவர்களின் பிள்ளைகளுக்கும் வெட்கமில்லை எனத்தெரிவித்த  சுகாதாரத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வசிக்கும் பௌத்தாலோக்க மாவத்தை வீடு 3128 மில்லியன் ரூபாயட பெறுமதியானது.  46 இலட்சம் ரூபா மாத வாடகை கொண்டதெனவும் கூறினார்.


பாராளுமன்றத்தில்  வியாழக்கிழமை (23)  இடம் பெற்ற   பல கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே  இவ்வாறு தெரிவித்த அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,


 முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும்  முன்னாள் ஜனாதிபதியின் பாரியார் ஆகியோரை பராமரிக்கும் பொறுப்பில் இருந்து நாட்டு மக்களை விடுத்துள்ளோம்.  முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவுக்கு கொழும்பு -05 பகுதியில் வீடு ஒன்று ஒதுக்கப்பட்டது. இந்த  வீட்டின் நடைமுறை சந்தை பெறுமதி  2598.5 மில்லியன் ரூபா .நடைமுறை மாத வாடகை கட்டணம் 1,275,000  ரூபாய்  இந்த வீட்டில் இருந்து கோத்தபாய  ராஜபக்ஷ வெளியேறியுள்ளார்.


 முன்னாள் ஜனாதிபதி  ரணில் விக்கிரமசிங்க கொழும்பு -07 பெஜ்ஜட் பகுதியில் வழங்கப்பட்டிருந்த வீடு 3,132 மில்லியன் ரூபாய் பெறுமதியானது. இதன் நடைமுறை சந்தை மாத  வாடகை கட்டணம் 29 இலட்சம் ரூபா .இந்த வீட்டில் இருந்து ரணில் விக்கிரமசிங்கவும் வெளியேறியுள்ளார்.  


முன்னாள் ஜனாதிபதி  ரணசிங்க பிரேமதாசவின் பாரியாரான ஹேமா பிரேமதாச கொழும்பு 07 இல் உள்ள அரசாங்கத்துக்கு சொந்தமான வீட்டில் வசித்தார். தற்போது அங்கிருந்து வெளியேறியுள்ளார்.


முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கொழும்பு -07 பகுதியில்  1005.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான வீடு வழங்கப்பட்டது. இவர் இன்றும் இந்த வீட்டில் தான் வசிக்கிறார்.அந்த வீட்டின் நடைமுறை சந்தை மாத வாடகை 9  இலட்சம் ரூபாயாகும் .


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வசிக்கும் பௌத்தாலோக்க மாவத்தை வீடு தொடர்பில் குறிப்பிட்டதன் பின்னர் ' மஹிந்தவின் வீட்டை பாதுகாப்போம் 'என்று அமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளது.இந்த வீடு 1 ஏக்கர் 13.8  பேர்ச்சஸ் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.   3128 மில்லியன் ரூபாயட பெறுமதியானது.  46 இலட்சம் ரூபா மாத வாடகை பெறுமதியானது.

 

 முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க வசிக்கும் வீட்டின் பெறுமதி மதிப்பிடப்படவில்லை. அவர் நாடு திரும்பியதும் வீட்டை மதிப்பிடுமாறு குறிப்பிட்டுள்ளார்.ஆகவே வெகுவிரைவில் அந்த வீட்டின் பெறுமதி தொடர்பான விபரங்கள்  பாராளுமன்றத்துக்கு அறிவிக்கப்படும்.


முன்னாள் ஜனாதிபதிகள் வசிக்கும் வீடுகளை பராமரிப்பதற்கும், பாதுகாப்பு வழங்குவதற்கும் மக்களின் வரிப்பணமே பயன்படுத்தப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வசிக்கும் வீட்டுக்கு  பெருமளவிலான நிதி செலவிடப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு  33 இலட்சம் ரூபா, 2022 ஆம் ஆண்டு 3, 45000   ரூபா,  2023 ஆம் ஆண்டு 18.மில்லியன் ரூபா, 2024 ஆம் ஆண்டு 9 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது.


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  2005 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில்  பௌத்தாலோக்க மாவத்தையில் உள்ள அரச இல்லத்தில் வசித்துள்ளார்.இக்காலப்பகுதியில் மாத்திரம் அந்த வீட்டை பராமரிப்பதற்கும், பாதுகாப்பதற்கும் 430 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது.


நாட்டு மக்கள் ஏன் முன்னாள் ஜனாதிபதிகளையும்,அவர்களின் குடும்பத்தாரையும் பராமரிப்பற்கு  பணம் செலவழிக்க வேண்டும்?வெட்கம் என்பதொன்று இருக்குமானால் இவர்கள் இந்த வீடுகளை விட்டு வெளியேற வேண்டும். வீடுகளில் இருப்பவர்களுக்கும் வெட்கமில்லை, அவர்களின் பிள்ளைகளுக்கும் வெட்கமில்லை.


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளார்கள். ஒருவர் கடற்படையில் இருந்ததாகவும், பிறிதொருவர்  விஞ்ஞானி என்றும் குறிப்பிடப்படுகிறது. பெற்றோரை பார்த்துக் கொள்ளும்  பொறுப்பு பிள்ளைகளுக்கு உண்டு. ஆகவே முன்னாள் ஜனாதிபதிகளை அவர்களின் பிள்ளைகள் கவனித்துக் கொள்ள வேண்டும்.


முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, சந்திரிக்கா பண்டாரநாயக்க மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் அரச இல்லங்களை விட்டு வெளியேற வேண்டுமென  பிரத்தியேகமாக குறிப்பிடத்  தேவையில்லை. வெட்கம் என்பதொன்று இருக்குமானால் இவர்கள் வெளியேற வேண்டும் என்றார். 

No comments

Powered by Blogger.