ரோஹிங்கியர்கள் பற்றி, சாதக சமிஞ்சை
(நா.தனுஜா)
ரோஹிங்கியாவிலிருந்து வருகைதந்திருப்பவர்கள் ஆட்கடத்தலால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதற்கு சான்றழிக்கக்கூடிய பல்வேறு தகவல்களும் கிடைக்கப்பெற்றிருப்பதனால், அவர்களை மியன்மாருக்கு அன்றி, ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவரகம் இயங்கிவரும் பிறிதொரு நாட்டுக்கு அனுப்பிவைப்பதற்கான சாத்தியப்பாடுகள் குறித்து அரசாங்கம் ஆராய்ந்துவருவதாகப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரும், பாராளுமன்ற சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
சில வாரங்களுக்கு முன்னர் மியன்மாரிலிருந்து படகில் வந்த 115 அகதிகள் முல்லைத்தீவு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டனர்.
கப்பலில் இருந்த 12 பணியாளர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன், எஞ்சிய 103 பேர் முல்லைத்தீவு விமானப்படைத்தளத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அகதிகளைப் பார்வையிடுவதற்காகக் கடந்த மாதம் 26 ஆம் திகதி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் முல்லைத்தீவு விமானப்படைத்தளத்துக்குச் சென்றிருந்த போதிலும், குடிவரவு, குடியகல்வுத் திணைக்களக் கட்டுப்பாட்டாளர் நாயகத்தின் அனுமதியின்றி அகதிகளைப் பார்வையிடுவதற்கு இடமளிக்கமுடியாது எனக்கூறி விமானப்படை அதிகாரிகள் அனுமதி மறுத்திருந்தனர்.
அதனையடுத்து கடந்த மாதம் 30 ஆம் திகதி கொழும்பிலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்துக்கு அழைக்கப்பட்ட குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகத்திடம் ஆணைக்குழுவின் தவிசாளர் எல்.ரி.பி.தெஹிதெனியவினால் விளக்கம் கோரப்பட்டது.
அதற்குப் பதிலளித்த கட்டுப்பாட்டாளர் நாயகம், நாட்டை வந்தடைந்த ரோஹிங்கிய அகதிகளிடமிருந்து நோய்த்தொற்றுக்கள் பரவக்கூடிய சாத்தியம் காணப்பட்டமையினாலேயே அவர்களைப் பார்வையிடுவதற்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு அனுமதி அளிக்கவில்லை எனத் தெரிவித்திருந்தார். அதுமாத்திரமன்றி இதுகுறித்த விரிவான அறிக்கையினை ஜனவரி முதல் வாரத்தில் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே இந்த அகதிகள் தொடர்பில் மியன்மார் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும், தற்போதைய சூழ்நிலையில் அவர்களை மீண்டும் மியன்மாருக்குத் திருப்பியனுப்புவதற்கு உத்தேசித்திருப்பதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபாலவை மேற்கோள்காட்டி அண்மையில் ஆங்கில நாளிதழொன்று செய்தி வெளியிட்டிருந்தது.
இவ்வாறானதொரு பின்னணியில் தற்போது ரோஹிங்கிய அகதிகள் விவகாரத்தில் அரசாங்கம் எத்தகைய நிலைப்பாட்டில் இருக்கிறது என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரும், பாராளுமன்ற சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்கவிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.
இதுகுறித்து மேலும் கருத்துரைத்த அவர், இலங்கையில் இயங்கிவந்த ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவரகம் தற்போது மூடப்பட்டிருக்கும் பின்னணியில், ரோஹிங்கியாவிலிருந்து வந்திருப்பவர்கள் அகதிகளா அல்லது ஆட்கடத்தலுக்கு உள்ளானவர்களா என்பது பற்றி ஆராயவேண்டியிருப்பதாகத் தெரிவித்தார்.
"இந்நிலையில் அவர்கள் ஆட்கடத்தலால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதற்கு சான்றளிக்கக்கூடிய பல்வேறு தகவல்களும் கிடைக்கப்பெற்றிருப்பதன் காரணமாக, அவர்களை மியன்மாருக்கு அன்றி, ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவரகம் இயங்கிவரும் பிறிதொரு நாட்டுக்கு அனுப்பிவைப்பதற்கான சாத்தியப்பாடுகள் குறித்து அரசாங்கம் ஆராய்ந்துவருகிறது" என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
Post a Comment