Header Ads



யாழ்ப்பாணத்திலிருந்து றிசாத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதம்


யாழில் காணித் தேவையுடன் நாலாயிரம் முஸ்லிம் குடும்பங்கள் ? அ.இ.ம.கா தலைவர் ரிஸாட் பதியுத்தீன் அவர்களுக்கு முன்னாள் யாழ் மாநகர முதல்வரின் ஊடக செயலாளர் அப்துல்லாஹ் அவசர கடிதம் 


பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவைலருமான கௌரவ ரிஸாட் பதிய்யுத்தீன் அவர்களுக்கு முன்னாள் மாநகர முதல்வரின் ஊடகச் செயலாளரும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் 13ஆம் வட்டார மூலக்கிளை செயலாளருமான என்.எம்.அப்துல்லாஹ் அவர்களினால் இன்று (22) அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே மேற்படி விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,  


யாழ்ப்பாணத்திலிருந்து 1990 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளினால் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்ட யாழ்ப்பாணம் முஸ்லிம்கள் உள்நாட்டு யுத்தத்த நிறைவுக்குப் பின்னர் உத்தியோகபூர்வமாக கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் படிப்படியாக மீள்குடியேற ஆரம்பித்தார்கள். இதுவரை மீள்குடியேறியுள்ள சுமார் 900 முஸ்லிம் குடும்பங்களில் 400 குடும்பங்களுக்கு மேல் சொந்தக் காணிகள் அற்ற நிலையில் வாழ்ந்து வருகின்றனர். காணிகள் அற்ற குடும்பங்கள் தற்காலிகமாக உறவினர் வீடுகளில், தனியார் காணிகளில் தற்காலிக கொட்டில்களில் மற்றும் வாடகை வீடுகளில் என மிகவும் சிரமத்திற்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். 


மேலும் முன்னாள் யாழ் அரச அதிபர் இமெடல்லா சுகுமார் அவர்களின் காலப்பகுதியில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட யாழ்ப்பாணம் முஸ்லிம் மக்களுக்கான விசேட நடமாடும் சேவையின் போது சுமார் 3600 குடும்பங்கள் தங்களுக்கு யாழில் சொந்தக் காணிகள் இல்லை என்றும் காணி வழங்கப்படும் சந்தர்ப்பத்தில் மீள்குடியேறுவோம் என்றும் உறுதிபட எழுத்து மூலம் யாழ் பிரதேச செயலகத்திற்கு விருப்புக் கடிதம் வழங்கி உறுதிப்படுத்தியிருக்கின்றனர். 


இந் நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி  மன்ற மாநகரசபைக்கான தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்ட தங்கள் கட்சி வேட்பாளருக்;கு ஆதரவு திரட்டும் நோக்கில் எமது மக்களுக்கு வழங்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளுக்கு அமைவாக தேர்தலில் வெற்றிபெற்ற தங்கள் கட்சி ஊடாக கொள்வனவு செய்யப்பட்ட காணித் தொகுதி உள்ளுராட்சி  மன்ற பதவிக்காலம் நிறைவுற்றும் நீண்டகாலமாக காணி அற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படாமல் காணப்பட்டது. 


இவ்வாறான சந்தர்ப்பத்தில் அண்மையில் யாழிற்கு விஜயம் செய்த தாங்கள் குறிப்பிட்டதற்கு அமைவாக யாழ்ப்பாணம் முஸ்லிம் சமூகத்தில் ஆயிரக்கணக்கானோர் காணித்தேவையுடன் இருக்கின்ற சந்தர்ப்பத்தில் சுமார் 50 குடும்பங்களை மீள்குடியேற்றக் கூடிய காணித் தொகுதியில் சுமார் 23 குடும்பங்களுக்கு மாத்திரமே முதற்கட்டமாக தங்கள் கட்சி ஊடாக காணிகளை பகிர்ந்தளித்துள்ளீர்கள். காணித் தேவையுடையவர்களில் இன்னும் சுமார் 27 குடும்பங்களுக்கே தங்களால் கொள்வனவு செய்யப்பட்ட மிகுதிக் காணிகள் போதுமானதாக காணப்படுகின்றது. 


தங்களால் கொள்வனவு செய்யப்பட்ட காணிகள் முழுமையாக ஐம்பது பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டாலும் காணித்தேவையுடன் சுமார் 400  குடும்பங்கள் யாழிலும் மேலும் சுமார் 3600 யாழ் முஸ்லிம் குடும்பங்கள் மீள்குடியேற்றக் கனவுகளுடன் 1990 களில் வெளியேறி வசித்துவரும் புத்தளம், நீர்கொழும்பு, கொழும்பு மற்றும் குருநாகல் உள்ளிட்ட பிற மாவட்டங்களிலும் வாழ்ந்து வருகின்றனர். மீள்குடியேறுவதற்கு காணிகள் வழங்கப்படுகின்ற சந்தர்ப்பத்தில் வெளிமாவட்டத்தில் இருந்து மீள்குடியேற விருப்பம் தெரிவித்திருக்கும் 3600 குடும்பங்களும் நிச்சயம் மீள்குடியேறுவார்கள் என்பது எமது நம்பிக்கை.  


இந் நிலையில் இன்றைய (22) பாராளுமன்ற உரையில் தாங்கள் "யாழ்ப்பாணம் முஸ்லிம்களில் காணித் தேவையுடையவர்களுக்கு காணிகளை பகிர்ந்தளித்திருக்கின்றேன்” என்று பொதுப்பட குறிப்பிட்டுள்ளமையானது முழுமையாக யாழ்ப்பாணம் முஸ்லிம்களின் காணித் தேவைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக அரசு மற்றும் பாராளுமன்றை பிரதிநிதித்துவம் செய்யும் ஏனைய கட்சிகள் மத்தியிலும் தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் எமது மக்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் உள்ளிட்ட பலரும் அதிருப்தி கொண்டுள்ளனர். 


எனவே இது தொடர்பில் மீண்டும் ஒரு தடவை முதற்கட்டமான குறைந்த எண்ணிக்கையான குடும்பங்களுக்கே காணி பகிர்ந்தளிப்பு இடம்பெற்றுள்ளது என்பதையும், இன்னும் காணித் தேவையுடன் நாலாயிரம் யாழ் முஸ்லிம்கள் எதிர்பார்ப்புடன் இருப்பதையும் தாங்கள் தவறாது உரிய தரப்பினருக்கு சுட்டிக்காட்ட வேண்டும் என்று யாழ்ப்பாணம் முஸ்லிம் மக்கள் சார்பில் தங்களை கேட்டுக் கொள்கின்றேன்.


மேலும் யாழ்ப்பாணம் முஸ்லிம்களின் தேவைகருதி முதற்கட்டமாக 23 குடும்பங்களுக்கு காணிகளை பகிர்ந்தளித்திருக்கின்றமைக்கும், தங்களின் முன்னைய எமது பிரதேசத்திற்கான சேவைகளுக்கும் யாழ்ப்பாணம் முஸ்லிம் மக்கள் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதோடு தாங்கள் அக்காணியில் குடியேற்றப்படும் முழுமையான குடும்பங்களின் அடிப்படைத் தேவைகளை பெற்றுக் கொடுப்பதில் வழமைபோன்று தொடர்ந்தும் மனமுவந்து முயற்சிக்க வேண்டும் என்றும் குடியேற்றப்பட்ட மக்கள் சார்பில் கேட்டுக் கொள்கின்றேன். 


50 குடும்பங்களை மீள்குடியேற்றத்தக்கதான தங்கள் காணியில் விரைந்து ஏனைய 27 குடும்பங்களுக்கும் காணிகளை பகிர்ந்தளிக்கின்ற சந்தர்ப்பத்தில் 50 குடும்பங்கள் என்ற பெரிய எண்ணிக்கையை சுட்டிக்காட்டி வடக்கு கிழக்கு மாகாணங்களின் பெரும்பான்மை தமிழ் பேசும் மக்களின் ஆணையைப் பெற்று 8 பாராளுமன்ற உறுப்பினர்கள் பலத்தை கொண்டிருக்கும் முதன்மையானதும் முதலாவதுமான தமிழ் கட்சி என்ற வகையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஊடாக முதற்கட்டமாக தங்களால் மீள்குடியேற்றப்படும் குடும்பங்களின் அடிப்படை தேவைகளை பெற்றுக் கொடுக்கும் முயற்சியில் நாமும் ஈடுபட பெரும் உதவியாக இருக்கும். 


மேலும் ஏனைய காணி அற்ற நாலாயிரம் குடும்பங்களுக்கு காணி பெற்றுக் கொடுக்கும் முயற்சிகளுகளையும் தங்களால் முடிந்த வரையில் இடைவிடாது தொடர வேண்டும் என்றும் யாழ்ப்பாணம் முஸ்லிம் மக்கள் சார்பில் கேட்டுக் கொள்வதோடு தங்கள் முயற்சிகளுக்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஆதரவும் ஒத்துழைப்பும் என்றும் இருக்கும் என்பதையும் உறுதிபடத் தெரிவித்துக் கொள்கின்றேன். 


வஸ்ஸலாம். 

இவ்வண்ணம்


என்.எம்.அப்துல்லாஹ் 

யாழ் மாநகர முன்னாள் முதல்வர் இ.ஆனல்ட் அவர்களின் முன்னாள் ஊடகச் செயலாளர்

செயலாளர் - 13ஆம் வட்டார மூலக்கிளை 

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி 


No comments

Powered by Blogger.