Header Ads



அர்ச்சுனாவின் எம்.பி. பதவியை இரத்துச் செய்யும் மனுவின் விசாரணை


யாழ்ப்பாண மாவட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் ஜனவரி 31ஆம் திகதி பரிசீலனைக்கு அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


புதிய சுதந்திர முன்னணியின் தலைவர் ஓஷல ஹேரத் இந்த மனுவை தாக்கல் செய்தார். 


இந்த மனு மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் மஹேன் கோபல்லவ முன்னிலையில் இன்று (15) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 


பிரதிவாதியான நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சேனானி தயாரத்ன, இந்த வழக்கு தொடர்பாக ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்யத் தனது கட்சிக்காரருக்குக் கால அவகாசம் வழங்குமாறு கோரினார். 


இருப்பினும், அமர்வு முறையாக அமைக்கப்படாததால், நாளை மறுதினம் இந்தக் கோரிக்கையை முன்வைக்குமாறு நீதியரசர், சட்டத்தரணியிடம் தெரிவித்தார். 


இதையடுத்து, குறித்த மனு எதிர்வரும் 31ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது.


நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கடந்த பொதுத் தேர்தலின் போது அரச வைத்தியராகக் கடமையாற்றிய நிலையில், வேட்பு மனுவைச் சமர்ப்பித்ததாக மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார். 


அரச சேவையிலிருந்து விலகாமல் இவ்வாறு வேட்புமனு தாக்கல் செய்வது சட்டவிரோதமானது எனச் சுட்டிக்காட்டியுள்ள மனுதாரர், அது தேர்தல்கள் சட்ட விதிகளுக்கு முரணானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.