எரிசக்தி அமைச்சு விடுத்துள்ள விசேட அறிவிப்பு
மின்சார கட்டண திருத்தம் தொடர்பாக எரிசக்தி அமைச்சு விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்டு செயல்படுத்த திட்டமிடப்பட்ட புதிய மின்சார கட்டண திருத்தத்தை நிதி அமைச்சின் அறிவுறுத்தல்களின்படி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார கட்டண திருத்தம் தொடர்பான இறுதி அறிக்கையை இன்று வௌியிட்ட நிலையில், இன்று (17) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 20 சதவீதத்தால் மின்சாரக் கட்டணங்களை குறைக்க தீர்மானித்திருந்தது.
அதன்படி, வீட்டுப் பிரிவின் கீழ், 0-30க்கு இடைப்பட்ட அலகுக்கான கட்டணம் 6 ரூபாயில் இருந்து 4 ரூபாவாகவும், 31-60க்கு இடையில் 9 ரூபாவிலிருந்து 6 ரூபாவாகவும் குறைக்க தீர்மானித்திருந்தது.
அதேபோல் இந்த மின்சார கட்டண திருத்தத்தின்படி, வீட்டுப் பிரிவிற்கான மின்சாரக் கட்டணத்தை 20 சதவீதத்தாலும், மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கான மின்சாரக் கட்டணத்தை 21 சதவீதத்தாலும் குறைக்க தீர்மானித்திருந்தது.
உணவகங்களுக்கு 31 சதவீதமும், தொழில்துறைக்கு 30 சதவீதமும் மற்றும் பொது நோக்கத்திற்கான மின்சாரக் கட்டணங்களை 12% குறைக்கவும் தீர்மானித்திருந்தது.
அரசு நிறுவனங்களுக்கான கட்டணங்களை 11 சதவீதத்தாலும் மற்றும் தெரு விளக்குகளுக்கான கட்டணங்களை 11 சதவீதத்தால் குறைக்கவும் தீர்மானிக்கப்பட்டிருந்து.
Post a Comment