முஸ்லிம்களின் உணர்வுகளோடு மிக மோசமாக விளையாடியவர்களுக்கு எதிராக, குற்றவியல் விசாரணை சாத்தியமா..?
- எப்.அய்னா -
கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணமடைந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களை கட்டாய தகனம் செய்தமையை தவறான முடிவு அல்லது தன்னிச்சையான ஏற்றுக்கொள்ள முடியாத நடவடிக்கை என அனைத்து தரப்பும் இப்போது ஏற்றுக்கொள்ளும் நிலையில், அதற்கான பரிகாரம் அல்லது நீதியை வழங்க தயக்கம் காட்டப்படுவது கவலைக்குரிய விடயமாகும்.
இலங்கையில் கொரோனாவால் முதல் மரணம் கடந்த 2020 மார்ச் 28 ஆம் திகதியன்று பதிவானது. மாரவில பகுதியை சேர்ந்த 60 வயதான நபர் ஒருவரின் மரணமே அது. எனினும் 2020 மார்ச் 27 ஆம் திகதி கொரோனா தொற்று நோய் தொடர்பில் வழிகாட்டல்களை வெளியிட்ட, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அந்த தொற்றால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்யவோ அல்லது தகனம் செய்யவோ முடியும் என்ற உலக சுகாதார ஸ்தாபனத்தின் நடைமுறையை அங்கீகரித்திருந்தார். ஆனால் 2020 மார்ச் 31 ஆம் திகதி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் ஒருவர் நீர்கொழும்பு பகுதியில் உயிரிழந்ததை தொடர்ந்து, எந்த முன்னறிவித்தலும் இன்றி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் 2020.03.27 அன்று வெளியிட்ட வழிகாட்டல்களை திருத்தி, கட்டாய தகனத்தை வலியுறுத்தியிருந்தார்.
கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் கட்டாய தகனம் செய்யப்பட்டமை தொடர்பில் இன்று வரை நீதி கோரி முழு சமூகமும் காத்திருக்கின்றது. பாராளுமன்றத்துக்கு உள்ளும் வெளியேயும் இதற்கான குரல்கள் ஒலித்த போதும், அப்போதைய கோட்டாபய அரசாங்கம் (2020) அறிவியல் ஆதாரங்களுக்கு அப்பால்பட்டு எடுத்த முடிவு என அதற்கு விளக்கம் சொல்லி கடந்து செல்ல தற்போதைய அரசாங்கமும் முயற்சிப்பது கவலைக்குரியதாகும். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அமைச்சரவை, இந்த விடயத்தில் முஸ்லிம்களிடம் மன்னிப்பு கோர அமைச்சரவை தீர்மானம் எடுத்து மன்னிப்பு கோரியது. ஆனால் வெறும் மன்னிப்பு என்ற அமைச்சரவை தீர்மானம் ஊடாக, முஸ்லிம் சமூகத்தின் காயங்களுக்கு மருந்திட முடியாது.
முஸ்லிம்களின் உணர்வுகளோடு மிக மோசமாக விளையாடிய தருணங்களில் ஒன்றே, ஜனாஸாக்களை எரித்தமையாகும்.
கொரோனா காரணமாக இலங்கையில் மொத்தமாக 13183 சடலங்கள் தகனம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் குறிப்பிட்டிருந்த்தார்.
இதில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸிலின் தகவல்களின்படி சுமார் 200 க்கும் மேற்பட்ட முஸ்லிம் ஜனாஸாக்கள் தகனம் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், கொரோனா பரவல் ஆரம்பித்து சுமார் ஒரு வருட காலத்தின் பின்னர் அரசாங்கம் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை விஷேட மையவாடியொன்றில் அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கியது. இதற்கென ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட சூடுபத்தின சேனை மஜ்மா நகரில் காணியொதுக்கப்பட்டது.
மஜ்மா நகர் கொவிட் 19 விஷேட மையவாடியில் 2021 மார்ச் மாதம் 5 ஆம் திகதி முதல் ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டது. இம் மையவாடியில் 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5ஆம் திகதி வரை ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டு வந்தன. இம்மையவாடியில் 2986 முஸ்லிம்களினது ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. இதனைவிட 293 பெளத்தர்களினதும், 269 இந்துக்களினதும், 86 கிறிஸ்தவர்களினதும் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. 2022 மார்ச் மாதம் 5ஆம் திகதியுடன் இவ் ஏற்பாடுகள் முடிவுக்கு வந்ததுடன் கொவிட் ஜனாஸாக்களை நாட்டின் எப்பாகத்திலுமுள்ள மையவாடிகளில் அடக்கம் செய்யலாம் என அனுமதி வழங்கப்பட்டது.
இந்த அனைத்து நிலைமையின் போதும், முஸ்லிம்கள் இறுதிக் கிரியைகளை நிறைவேற்றிக் கொள்வதில் பல்வேறு சவால்களை சந்தித்தார்கள்.
இவ்வாறான நிலையில் தான் கொரோனா தொற்றின் முதல் முஸ்லிம் மரணம் பதிவான 2020 மார்ச் 31 முதல் 2021 மார்ச் 5 வரை, கொரோனாவால் உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் கட்டாய தகனத்துக்கு உட்படுத்தப்பட்டது. இந்த கட்டாய நடவடிக்கையானது, ஒரு திட்டமிட்ட சதியின் வெளிப்பாடு என்று சந்தேகிக்கப்படுகின்றது.
குறிப்பாக, கொவிட் தொற்றால் மரணமடையும் நபர்கள் தொடர்பில் நிபுணர்கள் குழு மற்றும் தொழில் நுட்பக் குழுவின் நடவடிக்கைகள் இச்சதியின் ஒரு அங்கமா என சந்தேகிக்க தோன்றுகின்றது. இதன் வெளிப்பாடே, உயர் நீதிமன்றம், சட்ட மா அதிபரை இந்த விவகார வழக்கின் போதும் தவறாக வழி நடாத்த ஏதுவானதா என எண்ணத் தோன்றுகின்றது.
இவ்வாறான பின்னணியிலேயே, கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்களை கட்டாய தகனம் செய்த நடவடிக்கையின் பின்னால் உள்ள சதியை வெளிப்படுத்தவும், இனவாத நோக்கங்களை கண்டறிந்து நீதியை நிலைநாட்டுமாறும் கோரி பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் செயற்பாட்டாளர் சிரந்த ரன்மல் என்டனி அமரசிங்க இந்த முறைப்பாட்டை கடந்த 2024 டிசம்பர் 22 ஆம் திகதி பதிவு செய்துள்ளார்.
இந்த குற்றவியல் நடவடிக்கை கோரும் முறைப்பாட்டில் கடந்த 2020 மார்ச் 31 ஆம் திகதியாகும் போது சுகாதார அமைச்சராக இருந்த பவித்ரா வன்னி ஆரச்சி, அதே காலப்பகுதியில் சுகாதார அமைச்சின் செயலாளர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆகியோரும் 2021.02.14 அன்று சுகாதார அமைச்சின் செயலாளராக இருந்தவர், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை தகனம் செய்வது தொடர்பில் முடிவெடுத்த தொழில்நுட்பக் குழுவின் உறுப்பினர்கள், கொரோனாவால் உயிரிழந்தவர்களை தகனம் செய்ய வேண்டும் என முடிவுக்கு வர காரணமாக இருந்த நிபுணர்கள் குழுவில் இருந்தோர் (சட்ட வைத்திய ஆலோசகர் சன்ன பெரேரா, வைத்திய ஆலோசகர் ஆனந்த விஜேவிக்ரம, சட்ட வைத்திய ஆலோசகர் ரொஹான் ருவன்புர, சட்ட வைத்திய ஆலோசகர் பி.பீ. தசநாயக்க, நுண்ணுயிரியல் ஆலோசகர் ஷிரானி சந்ரசிறி, நுண்ணுயிரியல் ஆலோசகர் மாலிக கருணாரத்ன, வைத்தியர் துல்மினி குமாரசிங்க, சட்ட வைத்திய ஆலோசகர் பிரபாத் சேனசிங்க, சட்ட வைத்திய அதிகாரி சிரியந்த அமரரத்ன, பேராசிரியர் மெத்திகா விதானகே, வைத்தியர் ஹசித்த திசேரா) ஆகியோரை பொறுப்புக் கூற வேண்டியவர்கள் என பெயரிட்டு குற்றவியல் விசாரணை கோரியுள்ளார்.
குறிப்பாக 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி தொடர் தாக்குதலின் பின்னர் முஸ்லிம்கள் மீதான இனவாத அடக்குமுறை, அரச அங்கீகாரத்தோடு வியாபித்ததாக குறித்த முறைப்பாட்டில் சுட்டிக்கட்டியுள்ள மனித உரிமைகள் செயற்பாட்டாளர் சிரந்த ரன்மல் என்டனி அமரசிங்க, அதன் தொடர்ச்சியே கொவிட் தொற்றினால் மரணமடைந்த ஜனாஸாக்களை தகனம் செய்த நடவடிக்கை எனவும், அது முற்று முழுதாக முஸ்லிம்களை இலக்குவைத்தது எனவும் சுட்டிக்கட்டியுள்ளார்.
அதனால் இந்த விடயம் குறித்து முழுமையான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.
இந்த முறைப்பாடு தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் புத்திக மனதுங்கவை விடிவெள்ளி தொடர்புகொண்டு வினவிய போது, அது குறித்து ஆராய்ந்து பதிலளிப்பதாக கூறினார்.
இந்த விவகாரம் இலங்கையில் இன நல்லிணக்கம், மனித உரிமைகள், மற்றும் அரசின் கொள்கை அமுல்படுத்தலின் நம்பகத்தன்மை ஆகியவற்றை பிரதிபலிக்கக் கூடியதாக அமையும். கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்களை கட்டாய தகனத்திற்கு உட்படுத்திய நடவடிக்கைகள் முன்னைய அரசின் தவறான முடிவு மற்றும் இனவாத நோக்கத்துடன் செயல்பட்ட சதியாக கருதப்படுகின்றன. இதன் மூலம் முஸ்லிம் சமூகத்தின் மத, கலாசார உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் மக்களின் கோபத்தை சமாளிக்க ரணில் அரசாங்கத்தால் கையாளப்பட்ட மன்னிப்பு தீர்மானங்கள் போதுமானவையாக அமையவில்லை. இதற்கான நீதியும் நஷ்டஈடும் வழங்கப்படாமல் விட்டுவிடுவது தொடர்ந்தும் சமூகப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கக்கூடும். அதனால், முறைப்பாட்டின் அடிப்படையில் முழுமையான, வெளிப்படையான மற்றும் சுதந்திரமான விசாரணைகள் மேற்கொண்டு, குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
இது போன்ற நிகழ்வுகள் மீண்டும் நிகழாமல் தடுக்க, இனவாத மற்றும் இன அடக்குமுறைகளை நீக்குவதற்கான நீண்டகால நடவடிக்கைகள் தேவை. சமத்துவமான மற்றும் நீதி நிறைந்த சமூகத்தை உருவாக்கும் நோக்குடன் அரசு, சமூக அமைப்புகள், மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இணைந்து செயல்பட வேண்டும்.- Vidivelli
Post a Comment