Header Ads



ரணில், தினேஸ் ஆகியோரிடம் வாக்குமூலங்களை பதிவு செய்ய நடவடிக்கை


முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல முன்வைத்த அமைச்சரவை பத்திரத்துக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் பிரதமர் தினேஸ் குணவர்தன ஆகியோரிடம் வாக்குமூலங்களை பதிவு செய்வதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களம் தீர்மானித்துள்ளது. 


நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டுக்கு தீர்வு பெற்றுத்தரும் வகையில் இந்திய கடன்திட்டத்தின் கீழ் 182 வகையான மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்கெல்லவினால் அமைச்சரவையில் யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது. 


அத்துடன், தற்போது, இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியதன் பின்னர் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அதன்பின்னர், இது தொடர்பில் முன்னாள் பிரதமர் தினேஸ் குணவர்தனவிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளது. 


நாட்டுக்கு தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய நீதவான் லோச்சனி அபேவிக்ரம குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு இந்த அனுமதியை வழங்கியுள்ளார். 


முன்னதாக, இந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, பந்துல குணவர்தன, ரமேஷ் பத்திரன, ரொஷான் ரணசிங்க, டக்ளஸ் தேவானந்தா, ஹரீன் பெர்னாண்டோ, பிரசன்ன ரணதுங்க, விஜேதாச ராஜபக்ஷ, விதுர விக்கிரமநாயக்க, கஞ்சன விஜேசேகர ஆகியோரிடமும் குற்றப் புலனாய்வு திணைக்களம் வாக்குமூலம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.