முன்னாள் அமைச்சரை கைதுசெய்ய, இடைக்காலத் தடை உத்தரவு
பத்திரிகைகளை அச்சிடுவதற்குப் பயன்படுத்தப்படும் பத்திரிகைத் தாள் விநியோக ஒப்பந்தத்தை மீறிய குற்றச்சாட்டில், முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் உள்ளிட்ட தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர்களைக் குற்றப் புலனாய்வு திணைக்களம் கைது செய்வதிலிருந்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்த இடைக்கால உத்தரவு எதிர்வரும் 21 ஆம் ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தனியார் நிறுவனம் தாக்கல் செய்த ரிட் மனுவை பரிசீலித்ததன் பின்னர், இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஷஷி மகேந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த மனுவில் பிரதிவாதிகளாக பொலிஸ் மா அதிபர், குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் மற்றும் தனியார் நிறுவனம் உள்ளிட்ட 6 பேர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
சட்டத்தரணி சனத் விஜேவர்தனவின் ஆலோசனையின் பேரில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், மனுதாரர் நிறுவனம், பத்திரிகை அச்சிடுவதற்குத் தேவையான காகிதத்தைப் பெற்றுக்கொள்வதற்காக, பிரதிவாதியான தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மனுதாரர் நிறுவனத்தின் பணிப்பாளரான முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தனது அமைச்சுப் பதவியை இழந்ததையடுத்து, பிரதிவாதியான தனியார் நிறுவனம் உரிய உடன்படிக்கையின் விதிமுறைகளை மீறியுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பின்னர் இந்தச் சம்பவம் தொடர்பாக எதிர்தரப்பு நிறுவனம் பொலிஸில் முறைப்பாடு செய்ததாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், மனுதாரர் நிறுவனத்தின் பணிப்பாளர்கள் கைது செய்யப்படும் அபாயம் உள்ளதால், அவர்களைக் கைது செய்ய இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது.
Post a Comment