இலங்கையில் உள்ள ரோஹிங்கியர்களின் தற்போதை நிலை..
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் முல்லைத்தீவு விமானப்படைத்தளத்தில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் மியன்மார் அகதிகளை நேரில் சென்று பார்வையிட்டிருப்பதுடன், அவர்களால் வெகுவிரைவில் சமர்ப்பிக்கப்படவிருக்கும் எழுத்துமூல அறிக்கைக்கு அமைவாக ஆணைக்குழுவினால் அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
சில வாரங்களுக்கு முன்னர் மியன்மாரில் இருந்து படகில் வந்த 115 அகதிகள் முல்லைத்தீவு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டனர். கப்பலில் இருந்த 12 பணியாளர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன், எஞ்சிய 103 பேர் முல்லைத்தீவு விமானப்படைத்தளத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அகதிகளைப் பார்வையிடுவதற்காக கடந்த மாதம் 26 ஆம் திகதி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் முல்லைத்தீவு விமானப்படைத்தளத்துக்குச் சென்றிருந்த போதிலும், குடிவரவு, குடியகல்வுத் திணைக்களக் கட்டுப்பாட்டாளர் நாயகத்தின் அனுமதியின்றி அகதிகளைப் பார்வையிடுவதற்கு இடமளிக்கமுடியாது எனக்கூறி விமானப்படை அதிகாரிகள் அனுமதி மறுத்திருந்தனர்.
அதனையடுத்து கடந்த மாதம் 30 ஆம் திகதி கொழும்பிலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்துக்கு அழைக்கப்பட்ட குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகத்திடம் ஆணைக்குழுவின் தவிசாளர் எல்.ரி.பி.தெஹிதெனியவினால் விளக்கம் கோரப்பட்டது.
அதற்குப் பதிலளித்த கட்டுப்பாட்டாளர் நாயகம், நாட்டை வந்தடைந்த ரோஹிங்கிய அகதிகளிடமிருந்து நோய்த்தொற்றுக்கள் பரவக்கூடிய சாத்தியம் காணப்பட்டமையினாலேயே அவர்களைப் பார்வையிடுவதற்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு அனுமதி அளிக்கவில்லை எனத் தெரிவித்திருந்தார்.
அதுமாத்திரமன்றி இதுகுறித்த விரிவான அறிக்கையினை ஜனவரி முதல் வாரத்தில் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே இந்த அகதிகள் தொடர்பில் மியன்மார் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும், தற்போதைய சூழ்நிலையில் அவர்களை மீண்டும் மியன்மாருக்குத் திருப்பியனுப்புவதற்கு உத்தேசித்திருப்பதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபாலவை மேற்கோள்காட்டி அண்மையில் ஆங்கில நாளிதழொன்று செய்தி வெளியிட்டிருந்தது.
நாட்டை வந்தடைந்த மியன்மார் அகதிகளின் பெயர் விபரங்கள் அடங்கிய பட்டியல் அந்நாட்டு அரசாங்கத்திடம் வழங்கப்பட்டிருப்பதாக அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்ததாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இவ்வாறானதொரு பின்னணியில் மியன்மார் அகதிகள் தொடர்பில் குடிவரவு, குடியகல்வுத் திணைக்களக் கட்டுப்பாட்டாளர் நாயகத்தின் விரிவான அறிக்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்குக் கிடைக்கப்பெற்றுள்ளதா என ஆணைக்குழுவின் உறுப்பினர் கலாநிதி கெஹான் குணதிலகவிடம் வினவியபோது, அதற்கு அவர் இன்னமும் அறிக்கை கிடைக்கப்பெறவில்லை எனப் பதிலளித்தார்.
அதேவேளை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் கடந்த வியாழக்கிழமை (9) முல்லைத்தீவு விமானப்படைத்தளத்தில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அகதிகளைச் சென்று பார்வையிட்டதாகவும், அவ்வதிகாரிகளின் அறிக்கை வெகுவிரைவில் கிடைக்கப்பெறும் எனவும் தெரிவித்த கெஹான் குணதிலக, அவ்வறிக்கையின் அடிப்படையில் ஆணைக்குழுவினால் அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனக் குறிப்பிட்டார்.
அத்தோடு அவ்வதிகாரிகளின் வாய்மூல தகவல்களின் பிரகாரம் விமானப்படைத்தளத்தில் மொத்தமாக 116 பேர் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களில் 3 பேர் உடல்நலக்குறைவின் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அறியமுடிகிறது எனத் தெரிவித்த அவர், இருப்பினும் அதிகாரிகளின் எழுத்துமூல அறிக்கை கிடைக்கப்பெற்றதன் பின்னரே சரியான தகவல்களை வெளியிடமுடியும் என்றார்.
மேலும் சொந்த நாட்டிலிருந்து தப்பி வந்தவர்களுக்கு அந்த நாட்டில் அச்சுறுத்தல் நிலவும் பட்சத்தில், சர்வதேச சட்டங்களின் பிரகாரம் அவர்களை மீண்டும் அதே நாட்டுக்கே திருப்பியனுப்பிவைக்கக்கூடாது எனவும், மாறாக அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்பு ஏனைய நாடுகளுக்கு உண்டு எனவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் கலாநிதி கெஹான் குணதிலக விளக்கமளித்தார்
Post a Comment