Header Ads



அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களை நோக்கி, பாயும் மைத்திரிபால


பொலன்னறுவை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக விவசாய நிலங்கள் மற்றும் சொத்துக்கள் சேதமடைந்துள்ளமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். 


அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் முறையான ஒரு திட்டத்தை செயல்படுத்தத் தவறியதே இதற்குக் காரணம் என கூறியுள்ளார்.


“மொரகஹகந்த மற்றும் களுகங்கை நீர்த்தேக்கங்களிலிருந்து சேகரிக்கப்படும் நீர் பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள மினிபே நீர்த்தேக்கத்திற்கு மட்டுமே செல்வதால், 2019 ஆம் ஆண்டில், மொரகஹகந்த நீர்த்தேக்கத்திலிருந்து அனுராதபுரம் மற்றும் வடமேல் மாகாணத்தின் பகுதிகளுக்கு நீரைக் கொண்டு செல்வதற்காக 15-20 கிலோ மீற்றர் கால்வாயை அமைத்து, கட்டுமானப் பணிகளை மேற்கொண்டனர். 2019 முதல் 2024 வரை வடமேல் மற்றும் அனுராதபுரத்திற்கான கால்வாய்களின் பணிகள் அப்போது நடைபெற்று வந்தன. ஆனால் அதனை தொடர்ச்சியாக அரசாங்கங்கள் செயல்படுத்தவில்லை” என்று மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


2019 முதல் 2024 வரை வடமேல் பகுதிக்கும் மற்றும் அனுராதபுரத்திற்கும் செல்லும் முக்கிய கால்வாய்கள் வெட்டப்பட்டிருந்தால், பொலன்னறுவை இவ்வளவு பேரழிவை சந்தித்திருக்காது என்று சுட்டிக்காட்டியுள்ளார். 


தற்போதைய அரசாங்கம் இந்த விடயத்தில் கவனம் செலுத்தி, அனுராதபுரம் மற்றும் வடமேல் மாகாணத்திற்கு நீரை கொண்டு செல்லும் கால்வாய்களை நிர்மாணிக்கத் தொடங்கினால், பொலன்னறுவையை இத்தகைய அழிவில் இருந்து மீட்கலாம் என சுட்டிக்காட்டியுள்ளார். 


அனுராதபுரம் மற்றும் வடமேல் மாகாணத்திற்குச் செல்லும் கால்வாய்கள் உடனடியாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.

No comments

Powered by Blogger.