Header Ads



முதலைகளுக்கு சலாம் கூறியபின் இறங்கினோம் - ஜனாசா மீட்பில் ஈடுபட்டவர்கள் தெரிவிப்பு


• மர்ஹூம் ஏ.எல்.எம். இக்ராம் அவர்களின் ஜனாசாவினை கரைசேர்க்க உதவிய சாய்ந்தமருது ஜனாசா நலன்புரி மக்கள் பேரவையின் பணி மகத்தானது.! 

• சுழியோடிகளுக்கும் நன்றிகள்.!

• பதவிகளுக்காக பதறித்திரிபவர்களுக்கும், கதிரைகளைக் காப்பாத்த ஓடிக்கொண்டிருப்பவர்களுக்கு படிப்பினை.!

• கெப்டன் அஸ்வரின் பணி மகத்தானது.


நிந்தவூர் பிரதேசத்தை சேர்ந்த சகோதரர் மர்ஹூம் இக்ராம் அவர்கள் நேற்றைய தினம் (13.01.2025) இறை அழைப்பை ஏற்றுக் கொண்டார்.


அவர் மற்றும் அவரது மனைவி பிள்ளையுடன் பகல் சாப்பாட்டிற்காக வயல் வெளியில் சென்றதாக அறியக் கிடைத்தது. நிந்தவூர் ஆலயடிக்கட்டில் தன்னுடைய மனைவி குழந்தைகளை இறக்கிவிட்டு, தான் மோட்டார் சைக்கிளில் சென்று, சைக்கிளை வைத்துவிட்டு, தன் மனைவி மற்றும் பிள்ளைகளை அழைத்து வருவதற்கு இடையில், கட்டு முடியும் இடத்தில் மோட்டார் சைக்கிள் குடைசாய்ந்து அவர் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டு இறை அழைப்பை ஏற்றுக் கொண்டார்.


அது அல்லாஹ்வின் நாட்டம்.!


நான் பகல் சாப்பாடு உண்டு விட்டு இருக்கும் நிலையில், பிற்பகல் 2:30 மணி இருக்கும் நண்பர் ஒருவர் அழைப்பெடுத்தார். ஆத்தியடிக் கட்டில் தனது நண்பரின் உறவினர் ஒருவர் ஆற்று நீரில் அடித்துச் சொல்லப்பட்டுள்ளார்.. உடனே அப்டேட் தாருங்கள். இந்த செய்தி உண்மையா.? பொய்யா.? என்பதை தெளிவுபடுத்துங்கள் என்று கூறிய போது.. எனக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. உண்ட சாப்பாடும் எரிந்து விட்டது.!


உடனே இஸ்வா ஜனாசா வாகன சேவையின் தௌபீக் அவர்களுக்கு அழைப்பெடுத்து, சம்பவத்தை கூறியதன் பிறகு, அந்த இடத்திற்கு வருவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு கூறி, சம்பவம் இடம்பெற்ற இடத்திற்குச் சென்றேன். செல்லும்போது.. எனக்கு முன் கெப்டன் Aswar Abdul Salam அங்கு நின்றதை கண்டுவிட்டு ஆச்சரியமடைந்தேன்..


அதன் பின்னால் ஒரு நீலப் படை வந்தது. அதன் கைகளில் ஒரேஞ்ச் நிற மிதப்பு ஆடை இருந்தது..


அப்படி இருக்கும்போது Simly Hafizh Nintavur ஷிம்லி மௌலவி அவர்களின் அழைப்பு வருகிறது.. 


ஹாஜி எங்க இருக்கீங்க.?

நான் கூறினேன் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் நிற்கின்றேன். கொஞ்சம் பொறுங்க இன்னா வந்துட்டேன் என்று சொன்னார்..


பிறகு சகோதரர் Naasiroon Sulaiman நாசிரூனிற்கு அழைப்பெடுத்து சம்பவத்தை கூறி, உடனடியாக கடற்படையினை தளத்திற்கு அனுப்புவதற்கான வழி வகைகளைச் செய்யுங்கள் என்று கூறி, அவரிடம் சில பொறுப்புகளை ஒப்படைத்தேன். (அவர் வேகமாக பணியை செய்ய துவங்கினார். அவை எல்லாவற்றையும் இங்கு கூற முடியாது.!) (அல்லாஹ்வின் நாட்டம் அன்றைய தினம் எங்களுக்கு அதிகமான நிகழ்வுகள் இருந்தன. அந்த நிகழ்வுகள் அனைத்தும் தடைப்பட்டிருந்ததைக் கண்டோம்)


அப்போது ஷிம்லி மௌலவி அவர்கள் கடும் பிசியாக இருந்தார்.


அதற்கிடையில் கெப்டன் அஸ்வர் அவர்கள் அந்த ஆற்றில் இடுப்புக்கு பிடித்த தண்ணீர் வரை இறங்கிய போது.. 


சகோதரர் ஒருவர் ப்ரோ.. அவ்விடத்தில் முதலைப்பாளி என்று கூறிய பிறது, கரையேறினார்..


அப்போது மர்ஹும் இக்ராம் அவர்களை இழுத்துச் சென்ற ஆலயடிக்கட்டில் தண்ணீர்... பாரிய இரைச்சல் சத்தத்துடன் சீறிப்பாய்ந்தோடிக் கொண்டிருந்தது...


அப்போது நாங்களும் (எங்களோடு அதிகமான எமதூர் இளைஞர்கள் நின்றனர்) சகோதரர் அஸ்வருடைய அணியினரும் அங்கும் இங்குமாக சுமார் முக்கால் மணிநேரம் நடந்து கொண்டிருந்தோம். அந்த நேரம் எங்களுக்கு அரை நாள் போல் தெரிந்தது.. ஏனென்றால் ஒவ்வொரு நிமிடமும் மிகப் பெறுமதியாக இருந்தது. 


அப்போது அஸ்வர் அவர்கள்.. 

றாபி ப்ரோ.. அன்னா கெடக்கு பாருங்க என்றார்.. நான் ஜனாசாவா என்று கேட்டேன்..

இல்ல.. இல்ல.. முதலை என்று காட்டினார்.. அங்கே பார்த்தால் அது மிகப்பெரிய முதலை எப்படி இருக்கும் அந்த கட்டம்.?


இதற்குள் எப்படி இறங்குவது என்ற ஏக்கம் அவர் கண்களுக்குள் தெரிந்தது..


அப்படி பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் ஆட்டோ ஒன்றில் கல்முனையை சேர்ந்த சுழியோடி சகோதரர்கள் வந்திறங்கினர்..


அதற்கிடையில் நீர்மட்டம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.. எப்படியாவது நீர்மட்டத்தினைக் குறைக்க வேண்டும். என்று மசூறா முன்வைக்கப்படுகிறது. உடனடியாக உள்ளாத்துக் கட்டில் இருக்கும் அமீன் வட்டானை வந்தார்... வந்து என்னை அழைத்து...


மருமகன்... உடனடியாக 16 பேரை அனுப்புங்கள். உள்ளத்துக்கட்டு கதவை நாங்க மூடுவோம். பிறகு இந்த கட்டின் கதவையும் மூடினால் தண்ணீர் குறையும் என்று கூறியவுடன்.. கொஞ்சம் அங்க போங்களேன் என்றவுடன்.. எனக்கு அருகில் நின்ற இளைஞர்களின் மோட்டார் சைக்கிள்கள் அணுகிய சத்தத்தோடு பறந்தன.. (உடனே புறப்பட்ட அந்த இளைஞர்களின் வாழ்க்கையில் அல்லாஹ் பரக்கத் செய்வானாக) 


இந்த இடத்தில் நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர் மற்றும் அவரது உத்தியோகத்தர்கள் உடனடியாக களமிறங்கி அந்த வேலைகளை கச்சிதமாக செய்வதற்கு உதவி புரிந்தனர். இந்த சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு ஊர் மக்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். 


பின்னர் இரண்டு கட்டுக்களின் கதவுகளும் மூடப்பட்டன. அதற்கிடையில் சுழியோடிகளை ஆற்றுக்குள் இறக்குவதற்கான ஏற்பாடுகளை சாய்ந்தமருது ஜனாஸா நலம்புரி மக்கள் பேரவை அமைப்பினர் செய்து கொண்டு வந்தார்கள். இரண்டு பக்கமும் நீலக்கயிறுகளால் கட்டி அதனை நெடுந்தூரமாக போட்டார்கள். என்ன செய்யப் போகிறார்கள் என்று நானும் யோசித்துக் கொண்டிருந்தேன்..


அதற்கிடையில் உள்ளத்துக்கட்டு மற்றும் ஆலயடிக்கட்டில் உள்ள இரண்டு பகுதிகளின் கட்டின் கதவுகள் மூடப்பட்டபடியினால் நான்கடி தண்ணீர் மட்டம் குறைந்தது. 


அப்போது மெல்ல மெல்ல நீர் குறைய துவங்கியவுடன் சுழியோடிகள் மற்றும் சாய்ந்தமருது ஜனாசா நலன்புரி அமைப்பினர்களின் தொண்டர் அணியினர் முதலைகள் உள்ள ஆற்றுக்குள் இறங்கிய போது ஒரு வகையான உணர்வு என்னுள் ஏற்பட்டது.. அதனை எப்படி விவரிப்பது.?


என்ன தியாகம்..

என்ன பண்பு.. 

என்ன பொறுப்பு.. 

என்ன சமூகப்பற்று..

என்ன தைரியம்.. 

சுபுஹானல்லாஹ்..

அத்தனையும் கண் முன்னே கண்டேன்.!


முதலைகள் இருக்கும் என்று தெரிந்தும் கூட உயிரை துச்சம் என மதித்து இறங்குவதற்கு ஒரு தைரியம் வேண்டும் அல்லவா.? அவர்கள் தைரியசாலிகள். அல்லாஹ்வின் உதவியோடு இருப்பவர்கள் என்பது மட்டும் நிரூபனமானது.


அப்படி இருக்கும் சந்தர்ப்பத்தில், கெப்டன் அஸ்வர் எந்தவித பாதுகாப்பு அங்கிகளும் இல்லாமல் ஆற்றுக்குள் இறங்கி நீந்தி சுழியோடுகிறார்.. பிறகு அவரைக் காணவில்லை.. நான் நின்ற இடம் அவர் சென்ற இடத்தை மறைத்தது.. 


மறுபக்கம் எல்லோருடைய மனங்களிலும் ஒரு அச்சம் நிலவி இருந்தது. ஏனென்றால் இது முதலைகள் அதிகம் நடமாட்டம் செய்கின்ற இடம். சில வேலைகளில் முதலைகளின் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கலாம் என்று எல்லோர் மனங்களிலும் கவலைகள் உறைந்து போயிருந்ததை கண்டோம்.


இந்நிலையில் ஆற்றுக்குள் எமது ஊரைச் சேர்ந்த சகோதரர் றுசைத் மற்றும் நஜாத் ஆகியோரும் இறங்கினர். ஜனாஸா தென்படுகிறது.. ஒரு மரத்தடியில் மரத்தை பிடித்த வண்ணமாக இருப்பதைக் கண்டு, ஜனாஸாவைக் கண்டெடுக்கின்றனர். பிறகு ஜனாசா கரையேற்றப்படுகிறது. 


நான் நினைக்கின்றேன்.. மர்ஹூம் இக்ரம் அவர்கள் மரணித்து, சுமார் இரண்டு மணித்தியாலங்களின் பின்னர், அவரது ஜனாஸா கண்டெடுக்கப்பட்டிருந்தது. 


பிறகு ஜனாசாவை கரை சேர்த்து அதனை நல்லடக்கம் செய்கின்ற விடயங்களில் அல்லாஹ்வின் உதவியோடு நாம் ஈடுபட்டோம். 


பின்னர் ஜனாஸா நல்லடக்கம் செய்வதற்கான சகல ஏற்பாடுகளையும் விசாரணைகளையும், நிந்தவூர் பொலிஸார் மேற்கொள்கின்றனர். இந்த சந்தர்ப்பத்தில் அன்றைய தினம் பதில் கடமையாற்றிய, நிந்தவூர் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஏ.எம். அஷ்ரப் அவர்களை மறந்து விட முடியாது. அத்துடன் இன்னும் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஜுனைதீன் அவர்களையும் மறந்து விட முடியாது.! உண்மையில் மிகப் பொறுப்புணர்ச்சியோடு அவர்கள் கடமையாற்றி இருந்தார்கள். 


அவர்களுக்கும் எமது ஊர் மக்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.


பின்னர் அவருடைய ஜனாஸாவினை வீடு கொண்டு சேர்க்கும் பணி இடம்பெற்றது. அந்த நேரம் நிந்தவூர் ரஹ்மத்துல்லாஹ் பள்ளிவாசலில் மஹ்ரிப் தொழுகை இடம்பெற்றுக்கொண்டிருந்தது.


மறுபக்கம் தம்பி நாசிறூனைத் தேடும் பொழுது, ஜனாஸா சம்பந்தமான வேலைகளில் மரணித்தவர்களின் குடும்ப சகிதம் தான் பொலிஸ் நிலையத்தில் இருப்பதாகக் கூறினார்.


பின்னர் ஜனாசாவினை நல்லடக்கம் செய்கின்ற பணி இரவு 10:30 மணியளவில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற பொழுது கடும் மழை பெய்து கொண்டிருந்தது. ஜனாசா வீட்டில் அடிக்கப்பட்ட கூடாரத்திற்குள் நானும் சாய்ந்தமருது ஜனாசா நலன்புரிச்சங்க தலைவர் மற்றும் சக உறுப்பினர்களும் பேசிக் கொண்டிருந்தோம். 


அப்பொழுது பாதுகாப்பு அங்கி அணிந்திருந்த ஒரு சகோதரர் நொண்டி நொண்டி வந்து என் அருகில் நின்று கொண்டார்.


என்ன பிரதர் இப்படி வருகின்றீர்கள் என்று கேட்டேன்.. 


புன்னகைத்துவிட்டு சொன்னார்.


பிரதர் நாங்க இறங்கின இடத்தில் அதிகமான கல் இருந்தது. அந்த கல் என்னுடைய முழங்காலில் அடிபட்டு என்னுடைய முழங்கால் வீங்கிப் போய்விட்டது. இன்ஷா அல்லாஹ் வீடு போய் ஒத்தடம் போட வேண்டும் என்று கூறினார். நான் அவருடைய வலது முழங்காலை தொட்டுப் பார்த்த பொழுது, "ஆ.." என்ன சத்தம் கேட்டது.. அவருடைய முழங்கால் வீக்கமடைந்திருப்பதைக் கண்டு என் கண்கள் கலங்கின..


அப்போது அவர் கூறினார். 


பிரதர் எங்களுக்கு இது வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவங்களில் ஒன்று. நாங்கள் சென்ற இடத்தில் எல்லாம் எப்படியான சம்பவங்களைக் காணவில்லை. இது ஒரு வித்தியாசமான அனுபவம். முதலைகள் உள்ள இடத்தில் இறங்குவது எமக்கு புதிதல்ல. 


ஆனால் இந்த ஆற்றுக்குள் இறங்கும்போது முதலைகளுக்கு சலாம் கூறிவிட்டு தான் இறங்கினோம். என்னுடைய தந்தையும் சுழியோடி. அவர் இறங்கிய இடமும் முதலைப் பாளி என்று கூறிவிட்டு அவர் இன்னொரு விடயத்தினை சொல்லும் பொழுது எனக்கு புல்லரித்துவிட்டது.! 


பிரதர்.. 

நாங்கள் சலாம் கூறின பிறகு, ஆற்றுக்குள் நிற்கின்றோம். எங்களுக்கு அருகாமையில் முதலை போவதைக் கண்டு ஆச்சரியமடைந்தோம். அது எங்களை ஒன்றும் செய்யவில்லை. இன்னும் அல்லாஹ் தைரியத்தைத் தந்தான். என்று கூறினார். இந்த விடயங்களை எழுதுவதற்கு மட்டுமே சாத்தியமாகும் ஆனால் களத்தில் கண்டவர்களுக்குத் தான் அதன் பெறுமதி தெரியும். அந்தக் கட்டம் எப்படி இருக்கும் என்று நீங்கள் நினைத்துப் பாருங்கள்.!


எனக்கு மயிர் கூச்செறிந்தது..

பிறகு ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டதன் பின்னர் நானும் ஷிம்லி மௌலவி அவர்களும், சகோதரர் நாசிறூன் அவர்களும், கெப்டன் அஸ்வர் அவர்களும் ஒரு இடத்தில் சந்தித்துக் கொண்டு பல விடயங்கள் பற்றி பேசினோம். நேரமும் நல்லிரவைத் தாண்டி விட்டது.


அப்போது எங்கள் பக்கம் இருந்து, சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவைக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் எங்களிடம் ஏற்பட்டது. அதனை விரைவில் நிறைவேற்றுவதற்கான வழிவகைகளை அல்லாஹ் செய்து தருவான் என்ற நம்பிக்கையோடு வாக்குறுதி அளித்தோம்.


இன்ஷா அல்லாஹ் அது நிறைவேறும்.! அதனை விரைவில் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம்.


ஊர் தாண்டி உதவி புரியும் உள்ளங்களை ஒதுக்கி வைக்கலாமா.? இல்லையே.. 

அவர்களுக்கு நேசக் கரம் நீட்டி, அரவணைப்பதுதான் எமது கடமை.


சாய்ந்தமருது ஜனாஸா நலன்முறை மக்கள் பேரவைக்கு நிந்தவூர் வந்து களம்காண என்ன தேவை.? 


அவர்களின் பணி புனிதமானது.. 

சிந்தனை தெளிவானது என்பதனைப் புரிந்து கொண்டோம்.


வாழ்த்துக்கள் அல்லாஹ் உங்களது பணியை பொருந்திக் கொள்வான். நீங்கள் நினையா புறத்திலிருந்து இன்னுமின்னும் உதவிகள் வந்து கிட்டும்.  

உங்கள் பயணம் தொடரட்டும்..


வாழ்த்துக்கள்.!


மறுபக்கம் கவலையான பதிவு இது.!


சம்பவம் நடைபெற்ற செய்தியினை நான் Nintavur TODAY நிந்தவூர் டுடேயில் நேரடியாக லைவ் செய்திருந்தேன். காரணம், இந்த செய்தி ஊரிலுள்ள அரசியல்வாதிகள், ஜும்மா பள்ளிவாசல் உறுப்பினர்கள் இன்னும் சமூக அக்கறையானவர்களுக்கு இந்த தகவல் போய்ச் சேர வேண்டும் என்ற நோக்கத்தில் லைவ் செய்தேன். ஆனால் களம் கண்டு பணி புரிய பிரதான இரு தரப்பினர் எவரும் வரவில்லை என்பது கசப்பான உண்மை. 


நீங்கள் செய்ய வேண்டிய வேலைகளை யாரோ செய்கின்றார்கள்.


ஆனால் நீங்கள் 


மத்ரஷாக்களுக்கு ஆக்கள் போடுவதிலும், பள்ளிவாசல் கதிரைகளை காப்பாற்றுவதிலும், அதனை கைப்பற்றுவதிலும் சிலர் காலம் கடத்துவதையிட்டு கவலைப்பட்டேன். facebookக்கிலும் whatsapp பிலும் ஊடக அறிக்கைகளை மட்டும் வெளியிட்டு, வீராப்பு காட்டுவதுதோடு நின்றுவிடுகிறார்கள். இதுதான் நிலைமை. இந்த நிலை என்று மாறுமோ அல்லாஹ்வே அறிவான்..


இந்த சந்தர்ப்பத்தில் ஜனாசாவினை மீட்பதற்கு ஆற்றுக்குள் இறங்கிய சகோதரர் நஜாத் அவருடைய நண்பர் றுசைத் இன்னும் ஒருவர் (பெயர் தெரியாது) அவர்களுக்கு அல்லாஹ் பரக்கத் செய்வானாக. அவர்களின் ஆயுளை நீடித்து வைப்பானாக.!


பிராத்திப்போம். 


மர்ஹும் இக்ராம் அவர்களின் மறுமை வாழ்விற்காகவும், அன்னாருடைய குடும்பத்தினரிற்காகவும் அல்லாஹ்விடத்தில் இருகரம் ஏந்திப் பிரார்த்திப்போம்.!


சுலைமான் றாபி 


No comments

Powered by Blogger.