Header Ads



தென்கொரியாவில் உள்ள இலங்கையர்களின் கவனத்திற்கு


குறிப்பிட்ட வீசா காலம் நிறைவடைந்த பின்னரும் தென்கொரியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள தொழிலாளர்களை, இலங்கைக்கு அழைத்து வருவதற்கு தேவையான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோசல விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.


இவ்வாறு சட்டவிரோதமாக தங்கியுள்ள நபர்களின் தகவல்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் சமர்ப்பிக்கப்பட்டு தேவையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.


தொழிலுக்காக செல்பவர்களின் செயற்பாடுகளின் காரணமாக இந்நாட்டிற்கு கிடைக்கும் வேலை ஒதுக்கீடு தீர்மானிக்கப்படும் என்பதால், நிர்ணயிக்கப்பட்ட விசா காலம் முடிவடைந்தால், சட்டவிரோதமாக தென் கொரியாவில் தங்க வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டார்.


இன்று (07) தென்கொரியாவில் வேலைக்காகச் செல்லும் 96 இலங்கையர்களுக்கான விமானச் சீட்டு வழங்கும் நிகழ்வில் பணியகத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


இவர்கள் இந்த ஆண்டு தென் கொரியாவில் உற்பத்தி துறையில் தொழிலுக்காக செல்லும் முதல் குழுவாகும்.


2025ஆம் ஆண்டில் ஏறக்குறைய 8,000 இலங்கையர்களுக்கு தென் கொரிய தொழில் வாய்ப்புகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.


 தென்கொரியாவிற்கு தொழிலாளர்களை சேர்த்துக்கொள்ளும் 16 நாடுகளில் இலங்கையில் இருந்து உயர் திறன் கொண்ட தரமான தொழிலாளர்களை அனுப்ப தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


புலம்பெயர் தொழிலாளர்கள் இலங்கைக்கு வருடாந்தம் 6,000 மில்லியன் அமெரிக்க டொலர்களை அனுப்புவதாகவும், நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு குறித்த பணம் பெரும் பணியை செய்து வருவதாகவும், அதற்காக அரசாங்கம் அவர்களுக்கு நன்றி செலுத்துவதாகவும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.