ரோஹிங்யா அகதிகளை மியன்மார் நாட்டிடம் ஒப்படைக்க முடியுமா..? சட்டம் என்ன சொல்கிறது..?
மியன்மார் அகதிகள் எவ்வாறு இலங்கை வந்தார்கள்?
மியன்மாரில் இடம்பெறுகின்ற பாரிய மனித உரிமை மீறல்கள், இனப்படுகொலைகள், சித்திரவதைகள், வன்முறைகளுக்கு பயந்து அங்கு வாழ்ந்து வருகின்ற மக்கள் தங்களது உயிர்களை காத்துக் கொள்வதற்காக கடலில் வள்ளங்களூடாக தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு தப்பித்து வருகின்றார்கள். அந்த வகையில் தற்பொழுது இலங்கை வந்தடைந்துள்ள அகதிகள் தாங்கள் மூன்று வள்ளங்களில் மியன்மாரை விட்டு தப்பித்து வந்ததாகவும் மற்ற இரண்டு படகுகளுக்கும் என்ன ஆனது என்பது தங்களுக்கு தெரியாது என்றும் கூறுகின்றார்கள். இவர்களுடைய படகில் 115 நபர்கள் வந்ததாகவும் அதில் நான்கு சிறுவர்கள் உட்பட ஆறு பேர் பசியின் காரணமாக இறந்து விட்டதாகவும் வேறு வழியின்றி அவ் உடல்களை கடலிலே வீசி விட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இன அழிப்பின் காரணமாக, உயிருக்குப் பயந்து தாங்கள் கடலிலே பயணித்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கை அரசின் செயற்பாடு
திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் தாங்கள் அடைக்கலம் தேடி வந்ததாக இந்த அகதிகள் குறிப்பிட்டுள்ளனர். எனவே நீதிமன்றம் அவர்களை மிரிஹான தடுப்பு முகாமில் தங்க வைக்கும்படி தீர்ப்பளித்திருந்தது. இருப்பினும் இடப்பற்றாக்குறை காரணமாக அவர்கள் முல்லைத்தீவின் கேப்பாபுலவு விமானப் படைத் தளத்தில் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
இலங்கை அரசு இந்த அகதிகளுக்கு மருத்துவ வசதிகள் உணவு பராமரிப்பு போன்ற விடயங்களை செய்து வருவது வரவேற்கத்தக்கது. அதுமாத்திரமல்லாமல் 2022 டிசம்பரில் 100 மியன்மார் ரோஹிங்கிய அகதிகள் கரையோதுங்கிய போது அவர்களை இலங்கை கடற்படை மீட்டு பாதுகாத்து பராமரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இது சர்வதேச மனிதாபிமான சட்டங்களின் கீழ் அரசுகள் செய்ய வேண்டிய கடப்பாடுகளுள் ஒன்றாகும் என்பதும், இந்த விதிமுறையின் கீழ் தான் இலங்கை அகதிகள் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் தங்க வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
தஞ்சம் கோருவோரை திருப்பி அனுப்பலாமா?
அகதிகளாக வருபவர்களை, அல்லது தஞ்சம் கோருவோரை வலுக்கட்டாயமாக சித்திரவதை செய்கின்ற, இனப்படுகொலை செய்கின்ற, துன்புறுத்துகின்ற, தடை செய்யப்பட்ட கடுமையான அபாயகரமான ஆபத்துக்களை விளைவிக்கின்ற அவர்களின் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்புவது சர்வதேச சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்டதாகும்.
சர்வதேச சட்டத்தின் ‘திருப்பி அனுப்பாமைக் கோட்பாடு’
(Non-refoulement Principle)
1951 ஆம் ஆண்டின் சர்வதேச அகதிகள் உடன்படிக்கையின் 13 ஆவது பிரிவானது அகதிகளை வலுக்கட்டாயமாக அவர்களின் சொந்த நாட்டில் இன, மத, தேசிய அடையாளம் அல்லது ஏதாவது ஒரு அரசியல் கட்சியை அல்லது சமூகத்தைச் சார்ந்திருத்தல் போன்றவை காரணமாக உயிருக்கும் சுதந்திரத்திற்கும் அச்சுறுத்தலும் அபாயகரமான நிலைமைகளும் இருக்கின்ற பொழுது அந்த நாட்டிற்கு திருப்பி அனுப்புவது தடை செய்யப்பட்டது என குறிப்பிடுகின்றது.
இலங்கை சர்வதேச அகதிகள் உடன்படிக்கையில் கையொப்பம் இடவில்லை என்ற காரணத்தை காட்டி இந்த விதிமுறைக்கு மாற்றமாக செயற்பட முடியாது என்பதை சர்வதேச வழக்காற்றுச் சட்டம் குறிப்பிடுகின்றது. இதன் பிரகாரம் சர்வதேச வழக்காற்றுச் சட்டத்தில் ‘திருப்பி அனுப்பாமை’ கோட்பாடானது ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதன் காரணமாகவும் இலங்கை சர்வதேச வழக்காற்றுச் சட்டத்தின் ஒரு அங்கத்துவம் என்பதன் காரணமாகவும் அவர்கள் இந்த விதிக்கு கட்டுப்பட்டவர்களாவர். எனவே இலங்கை, அகதிகள் உடன்படிக்கையில் கையெழுத்திடா விட்டாலும் அவர்கள் அதனை பின்பற்றி செயல்படுவது சர்வதேச வழக்காற்றுச் சட்டத்தின் படி அவர்களது பொறுப்பாகும்.
அகதிகளை திருப்பி அனுப்புவது சர்வதேச மனித உரிமைகள்
சட்டத்தை மீறும் செயல்
சர்வதேச மனித உரிமை சட்டங்களின் மூலமும் அகதிகளை திருப்பி அனுப்புவது மனித உரிமை மீறலாக குறிப்பிடப்பட்டுள்ளது.எடுத்துக்காட்டாக சித்திரவதைக்கு எதிரான சர்வதேச சமவாயத்தில் அதன் உறுப்புரை மூன்று எந்த ஒரு நபரையும் அவர்களுக்கு சித்திரவதை செய்கின்ற அல்லது மோசமான மனிதாபிமானமற்ற தண்டனைகளை வழங்குகின்ற நாட்டுக்கு திருப்பி அனுப்புவது தடை செய்யப்பட்டது என்று குறிப்பிடுகின்றது. இலங்கை அரசாங்கம் இந்தச் சட்டத்தை 1994 ஆம் ஆண்டில் ஏற்று கையொப்பமிட்டுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
மேலும் சர்வதேச சிவில் அரசியல் உரிமைகள் சமவாயத்தின் ஒரு உறுப்புரை 7 ஆனது சித்திரவதை மற்றும் கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது இழிவான சிகிச்சை அல்லது தண்டனையை தடைசெய்கிறது, இது ‘மீள்அனுப்பாமை கோட்பாட்டை’ மறைமுகமாக ஆதரிக்கின்றது என்பது எல்லா தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகும். இலங்கை அரசாங்கம் இந்த சட்டத்தினையும் 1980 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஏற்று கையொப்பமிட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
மியன்மாருக்கு ஏன் திருப்பி அனுப்பக் கூடாது?
மியன்மாரில் இருந்து அகதிகள், குறிப்பாக ரோஹிங்கியா சமூகம் மற்றும் இராணுவ ஆட்சிக்குழுவை எதிர்க்கும் மற்றவர்கள், பெரும்பாலும் இனச் சுத்திகரிப்பு, தன்னிச்சையான தடுப்புக்காவல், சித்திரவதை மற்றும் சட்டத்திற்கு புறம்பான கொலைகள் உள்ளிட்ட கடுமையான மனித உரிமை மீறல்களை எதிர்கொள்கின்றனர். அத்தகைய நபர்களை மியன்மாருக்கு திருப்பி அனுப்புவது அவர்களை துன்புறுத்தல் அல்லது வன்முறைக்கு ஆளாக்கும், இது சர்வதேச சட்டத்தை மீறுவதாகும்.
இலங்கை அரசின் பொறுப்பு
மியன்மார் அகதிகளை அவர்களின் சொந்த நாட்டிற்கு இலங்கை வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பினால், அது சர்வதேச சட்டத்தின் கீழ் அதன் கடமைகளை, குறிப்பாக ‘மீள்அனுப்பாமை கொள்கையை’ மீறும் செயலாகும். 1951 ஆம் ஆண்டின் சர்வதேச அகதிகள் உடன்படிக்கையின் ஒரு தரப்பாக இலங்கை இல்லாவிட்டாலும், இந்தக் கொள்கை சர்வதேச வழக்காற்று சட்டமாக பிணைக்கப்பட்டுள்ளது. மேலும் சித்திரவதைக்கு எதிரான சமவாயம் மற்றும் சர்வதேச சிவில் அரசியல் உடன்படிக்கை ஆகியவற்றில் இலங்கை ஒரு கட்சியாகும், இது அகதிகளை தீங்கிலிருந்து பாதுகாப்பதற்கான தனது பொறுப்பை மேலும் வலுப்படுத்துகிறது.
மேலும் இலங்கை அரசாங்கம் கடந்த காலங்களில் மனித உரிமை மீறல்களுக்கு சர்வதேச மனித உரிமை பேரவையில் பொறுப்புச் செல்ல வேண்டிய, நல்லெண்ணத்தை ஏற்படுத்த வேண்டிய ஒரு சூழலில் இருந்து வருகின்றது என்பது நாம் எல்லோரும் அறிந்த விடயமாகும்.
எனவே மியன்மார் அகதிகள் விடயத்தில் அரசாங்கம் சர்வதேச சட்டங்களை மதித்து அதனுடைய பொறுப்புக்களை சிறந்த முறையிலும் இதய சுத்தியோடும் நிறைவேற்ற வேண்டியது காலத்தின் தேவையாகும்.
அகதிகளை என்ன செய்வது?
இலங்கை பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்திருக்கின்ற நிலையில் அவர்களை எவ்வாறு தொடர்ந்து வைத்திருப்பது என்ற சில கேள்விகள் எழுவதையும் அவதானிக்க முடிகின்றது. மனிதாபிமானம் என்பது பொருளாதாரத்தையும் தாண்டிய செயற்பாடாகும். அது எந்த நிலையிலும் மதிக்கப்பட வேண்டியதாகும். இது சர்வதேச சட்டத்தின் கீழ் ஒரு நாட்டுக்குள்ள கடப்பாடாகும்.
எனவே இந்த அகதிகளை மீண்டும் மியன்மாருக்கு திருப்பி அனுப்பாமல் சர்வதேச சட்டத்தின் கீழ் அவர்களை என்ன செய்யலாம் என்பதையும் நாம் இங்கு குறிப்பிட விரும்புகிறோம். அந்த வகையில்
1. அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானிகராலயத்துடன் இணைந்து அகதிகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் வேண்டும். அந்த நிறுவனம் இலங்கையில் இல்லாவிட்டாலும் தெற்காசியா அல்லது ஆசிய நாடுகளுக்கு பொறுப்பாக இருக்கின்ற அதன் அலுவலகத்துடன் தொடர்புகளை ஏற்படுத்தி இதனை செய்ய வேண்டும்.
2. அகதிகளை வேறு ஒரு நாட்டில் குடியேற்றுவதோ அல்லது இலங்கையில் சாத்தியப்படுமானால் அவர்களை தங்க வைத்திருப்பதன் மூலம் நிரந்தரமான தீர்வு ஒன்றை பெற்றுக் கொடுக்கலாம்.
3. அகதிகள் தன்னார்வமாக மியன்மாருக்கு திரும்பி செல்லுதல். அதாவது மியன்மாரில் தங்களுக்கு பாதுகாப்பு இருக்கும், அங்கு பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்துவிட்டது என்கின்ற ஒரு நிலையை அகதிகள் அறிவார்களாயின் அல்லது திருப்திப் படுவர்களாயின் அப்படியான ஒரு சூழலில் மட்டும் அவர்களின் பாதுகாப்பை சர்வதேச நிறுவனங்களின் கண்காணிப்புகள் மூலம் உறுதிப்படுத்திய பின்னர் அந்த நாட்டுக்கு அந்த மக்கள் திரும்பிச் செல்வதற்கான உதவிகளை செய்து கொடுத்தல் போன்ற வழிகளில் மாற்று தீர்வுகளை தேட முடியும். அதுவரை அவர்களை வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்புவது சர்வதேச அகதிகள் சட்டம், சர்வதேச வழக்காற்றுச் சட்டம், சர்வதேச மனித உரிமைகள் சட்டம் போன்ற அனைத்து சட்டங்களையும் மீறுகின்ற ஒரு செயலாகும். இலங்கை ஒரு பொறுப்புவாய்ந்த அரசு என்ற வகையில் இந்த தவறை செய்யக்கூடாது என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.- Vidivelli
பி.எம்.எம்.பெரோஸ் (நளீமி),
சட்ட முதுமானி,
ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் ஆய்வாளர்,
மஹிடோல் பல்கலைக்கழகம், தாய்லாந்து
Post a Comment