இலங்கை வந்த ரோகிங்கியர்களை மியன்மாருக்கு திருப்பியனுப்புவது சர்வதேச சட்டத்திற்கு ஏற்புடையதல்ல - தடுத்துவைப்பது முற்றிலும் தவறு
(நா.தனுஜா)
மியன்மாரிலிருந்து நாட்டை வந்தடைந்த அகதிகள் குற்றவாளிகளோ, சந்தேகநபர்களோ அல்ல என்பதனால் அவர்களைத் தடுத்துவைப்பது முற்றிலும் தவறு எனச் சுட்டிக்காட்டியிருக்கும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ருக்கி பெர்னாண்டோ, ஐக்கிய நாடுகள் அலுவலக அதிகாரிகள், மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடுவதற்கு இடமளிக்கப்படவேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
அண்மையில் மியன்மாரில் இருந்து படகில் வந்த 115 அகதிகள் முல்லைத்தீவு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டனர். கப்பலில் இருந்த 12 பணியாளர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பதுடன், எஞ்சிய 103 பேர் முல்லைத்தீவு விமானப்படைத்தளத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
அகதிகள் அல்லது புகலிடக்கோரிக்கையாளர்கள் அச்சுறுத்தலை எதிர்கொள்ளக்கூடிய அபாயம் உள்ள நாட்டுக்கு அவர்களை வலுகட்டாயமாகத் திருப்பி அனுப்பாதிருத்தல் எனும் சர்வதேச அடிப்படைச் சட்டத்துக்கு முரணான விதத்தில் மியன்மார் அகதிகளை மீண்டும் அந்நாட்டுக்குத் திருப்பியனுப்புவது ஏற்புடையதல்ல என்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ரூக்கி பெர்னாண்டோ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment